புதிய மாநகராட்சிகளுக்கு ரூ.60 கோடி சிறப்பு நிதி#TNBudget2022

புதிய மாநகராட்சிகளுக்கு ரூ.60 கோடி சிறப்பு நிதி#TNBudget2022

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல்செய்த நிதிநிலை அறிக்கையில், மாநகராட்சி, நகராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சிகள் தொடர்பாகச் சொன்ன முக்கியமான அறிவிப்புகள் வருமாறு:-

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகளில் அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதற்கு தலா 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். மொத்தம் 60 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும். புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 28 நகராட்சிகளுக்கு தலா 2 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 56 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும். நகர்ப்புற பகுதிகளைப் பசுமையாக்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு 500 பூங்காக்கள் உருவாக்கப்படும்.

திடக்கழிவு மேலாண்மை உட்பட முழுமையான சுகாதாரத்தை உறுதிசெய்வதற்கான இரண்டாவது தூய்மை இந்தியா இயக்கம் ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும். இதற்கான மாநில பங்கீடாக 2169 கோடி ரூபாயுடன் மொத்தம் 5465 கோடி ரூபாய் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. கொடுங்கையூரில் பல ஆண்டுகளாக தேங்கியுள்ள குப்பைகளை பிரித்து அகற்றும் பணிகள் பயோ மைனிங் முறையில் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.

அம்ரூத் 2.0 திட்டத்துக்கான ஒட்டுமொத்த திட்ட மதிப்பு சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளோம். மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய அரசு ஆகியவற்றின் பங்களிப்பின் வாயிலாக இத்திட்டத்தின் மூலம் பல்வேறு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் மேலாண்மை திட்டங்களை அரசு செயல்படுத்தும். அம்ரூத் திட்டத்துக்கு 2130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்று புதிய மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்று உள்ளனர். அந்த உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்துக்கு 1000 கோடி ரூபாயும், சிங்காரச் சென்னை 2.0 திட்டத்துக்கு 500 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திறன்மிகு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்துக்கு 1875 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம் மதிப்பீடுகளின் படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு மொத்தம் ரூ.20,400 கோடியே 24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in