மேயர் வேட்பாளருக்கு ரூ.10 கோடி; கையிருப்புக் காட்டச் சொல்லும் திமுக!

மேயர் வேட்பாளருக்கு ரூ.10 கோடி; கையிருப்புக் காட்டச் சொல்லும் திமுக!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியாக வெற்றிகளைக் குவிக்க திட்டங்களை வகுத்து வருகிறது ஆளும்கட்சியான திமுக. குறிப்பாக, 20 மாநகராட்சிகளையும் மொத்தமாகக் கைப்பற்ற அதிரடியான அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறது திமுக.

நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதிகள் அதிகாரபூர்வமாக வெளியாகக்கூடும் என்கிறார்கள். அதற்கு முன்னதாக உள்ளாட்சித் தேர்தல் பணிகளை முடுக்கிவிட, முக்கிய அமைச்சர்களுக்கு பொறுப்புகளை வழங்கி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அரசின் சிறப்புத் திட்டங்களைக் கண்காணிப்பதற்காக, அண்மையில் பல்வேறு மாவட்டங்களுக்கும் அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். இப்படி நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் தான் அந்தந்தப் பகுதிக்கான உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளர்கள் என்கிறார்கள்.

அப்படித்தான் சேலத்துக்கு கே.என்.நேருவும் கோவைக்கு செந்தில்பாலாஜியும் அனுப்பிவைக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்கள் இருவருமே, கோவையிலும் சேலத்திலும் உள்ளாட்சித் தேர்தலுக்காக கட்சியினரைத் தயார்ப்படுத்தும் வேலைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டார்கள்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

சேலமும் கோவையும் அதிமுகவுக்கு செல்வாக்கான மண்டலங்களாக இன்னமும் சித்தரிக்கப்படுவதால், அந்த 2 மாநகராட்சிகளையும் இம்முறை கைப்பற்றியே ஆகவேண்டும் என கழகத்தினருக்கு ஆணையிட்டிருக்கிறாராம் ஸ்டாலின். அதற்காகவே, களப்பணியில் கைதேர்ந்த நேருவும் செந்தில் பாலாஜியும் அங்கு அனுப்பிவைக்கப் பட்டிருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் ‘டாஸ்மாக் பார்’ உரிமங்கள் இன்னமும் அதிமுகவினர் கையிலேயே இருக்கின்றன. இதைக் கைப்பற்ற ஆங்காங்கே திமுகவினர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உள்ளாட்சித் தேர்தல் வரும் நேரத்தில் ‘பார்’களை கட்சியினருக்கு பிரித்துக்கொடுப்பதில் கலகம் ஏற்பட்டு, அது தேர்தல் பணிகளை கெடுத்துவிடக் கூடாது என்பதால், ‘பார்’ களை இன்னும் கைமாற்றிவிடாமல் வைத்திருக்கிறது திமுக.

இந்நிலையில், சேலத்தில் திமுகவினரை அழைத்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 2 சுற்று ஆலோசனைக் கூட்டங்களை நடத்திமுடித்து விட்டாராம் அமைச்சர் நேரு. அப்போது பேசிய நேரு, “உங்களுக்குள்ள இருக்கிற சொந்தப் பிரச்சினைகளை எல்லாம் ஒதுக்கி வெச்சுட்டு எல்லாரும் ஒத்துமையா வேலை பார்த்து கட்சியைச் ஜெயிக்க வைக்கப் பாருங்க. ஆளும்கட்சியா இருந்தும் நம்மால அதை சாதிக்கமுடியலைனா அதைவிட பெருத்த அவமானம் வேற எதுவும் இல்லை” என்று சொன்னாராம்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

“அதிகாரிகள் சிலர் இன்னும் அதிமுக ஆட்சி நடப்பது போலவே நடந்துகொள்கிறார்கள்” என்று கட்சியினர் சொன்ன குறையையும் கேட்டுக்கொண்ட நேரு, சம்பந்தப்பட்ட அந்த அதிகாரிகளை அழைத்து, “ஆட்சி மாறிடுச்சு. இன்னமும் எடப்பாடி தான் சிஎம்னு நினைச்சுட்டு இருந்தீங்கன்னா... அப்புறம் நாங்களும் எங்க பாணியில் பேசவேண்டி இருக்கும்” என்று எச்சரிக்கும் தொனியில் பேசியதாகச் சொல்கிறார்கள்.

இதே பாணியிலான அதிரடிகளை கோவையில் செந்தில் பாலாஜியும் மேற்கொண்டு வருகிறார். சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களைவிட உள்ளாட்சித் தேர்தலில் கூடுதலாகப் பணம் செலவழிக்க வேண்டி இருக்கும் என கணக்குப்போடுகிறதாம் திமுக தலைமை. அதனால், இம்முறை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை கவுன்சிலர்களின் மறைமுக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கும் முறையக் கொண்டு வந்துவிடலாம் என்று யோசிக்கிறதாம். ஆனால் ஒரு சில அதிகாரிகள், இந்தப் பொறுப்புகளுக்கு மக்களின் நேரடி வாக்களிப்பின் மூலம் ஆட்களைத் தேர்வு செய்வதே சரியாக இருக்கும் என யோசனை சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம்.

ஆளும்கட்சியாக இருப்பதால், இம்முறை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கட்சிக்குள் போட்டி கடுமையாகவே இருக்கும் என கணிக்கிறதாம் திமுக தலைமை. இதனால், ஒவ்வொரு வார்டுக்கும் 3 பேர் கொண்ட பட்டியலை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மூலமாக முதல்கட்டமாக தேர்வு செய்யச் சொல்லி இருக்கிறார்களாம். தலைமையிலிருந்து அதில் ஒருவரை டிக் செய்வார்களாம்.

மேயர் பதவிக்காக மோதுபவர்கள் 10 கோடி ரூபாய் கையிருப்புக் காட்ட வேண்டுமாம். உரிய தகுதிகள் இருந்தாலும் 10 கோடி ரூபாய் கையிருப்புக் காட்டினால் மட்டுமே, மேயர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று பொறுப்பு அமைச்சர்கள் மூலம் முன்கூட்டியே நாசூக்காக தெரிவித்து விட்டார்களாம். சென்னைக்கு இந்தத் தொகையின் அளவு இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்கிறார்கள். ஆமாம்... இன்றைக்கு வாக்கு விற்கும் விலையில், இந்த 10 கோடி எல்லாம் எம்மாத்திரம்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in