சட்டமன்ற தேர்தலில் வெற்றி... பாஜக எம்பி-க்கள் 10 பேர் ராஜினாமா!

எம்பி-க்கள் ராஜினாமா
எம்பி-க்கள் ராஜினாமா

மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாஜக எம்பி-க்கள் 10 பேர், டெல்லியில் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து ஆலோசித்த பிறகு தங்களது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

பிரதமர் மோடியுடன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
பிரதமர் மோடியுடன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சமீபத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இத்தேர்தலில் ராஜஸ்தான், சத்தீஷ்கரில் காங்கிரஸை தோற்கடித்து பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சியை தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. மிசோரமில் எதிர்கட்சியாக இருந்து சோரம் மக்கள் இயக்கம், மிசோ தேசிய முன்னணி கட்சியை தோற்கடித்து ஆட்சிக்கு வந்துள்ளது.

இந்நிலையில், இந்த 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜக எம்பி-க்கள் 10 வெற்றி பெற்றுள்ளனர். மத்திய பிரதேசத்தில் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் பட்டேல், ராகேஷ் சிங், உதய் பிரதாப், ரித்தி பதக் ஆகியோரும், சத்தீஷ்கரில் அருண் சா, கோமதி சாய் ஆகியோரும், ராஜஸ்தானில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், தியா குமாரி, கிரோடி லால் மீனா ஆகியோரும் எம்பி-யாக இருந்துகொண்டே தங்கள் மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளனர்.

நாடாளுமன்றம்.
நாடாளுமன்றம்.

இவர்கள் அனைவரும் டெல்லியில் இன்று கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் நரேந்திரமோடி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பிறகு கட்சி தலைமையின் அறிவுறுத்தல்படி, 10 எம்பி-க்களும் தங்களது எம்பி பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் 10 எம்பி தொகுதிகள் காலியாக உள்ளன. தேர்தல் ஆணைய விதிப்படி 6 மாதங்களுக்குள் இந்த இடங்களுக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். அதை வைத்து பார்க்கும்போது 2024 பொதுத் தேர்தல் நெருங்கிவிடும். அதனால் இந்தத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தங்களது செல்வாக்கை நிரூபித்துக் காட்டிய பாஜக எம்பி-க்கள் சிலருக்கு மாநில அமைச்சர்களாகும் வாய்ப்பும் அளிக்கப்படலாம் என பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in