
இந்திய குடியரசு தலைவராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக திரௌபதி முர்மு இரண்டு நாள் அரசு முறை பயணமாக புதுச்சேரி வருகை புரிந்துள்ளார். புதுச்சேரி விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் இணைந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து அங்கிருந்து காரில் புதுச்சேரி மாநிலம் ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புற்று நோய்களுக்கான அதிநவீன கதிரியக்க சிகிச்சை இயந்திரத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். அப்போது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்
இந்நிகழ்வில் பேசிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், குடியரசு தலைவர் திருமதி.திரெளபதி முர்மு அவர்களை அவரது தாய் மொழியான ஒடியா மொழியில் வரவேற்றார்.
பட்டங்கள் ஆள்வதில் பெண்கள் முன் வந்துள்ள நிலையில் சட்டத்தை ஏற்றுவதில் பெண் குடியரசு தலைவர் அமைந்தது நாட்டில் பெண்களின் முன்னேற்றத்தை உணர்த்தியுள்ளது என்றார். குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வாரிசாக பிறந்து பதவியை பெற்றவர் அல்ல. ஆதிவாசியாக பிறந்து அவர் ஆதிக்க சமூக பதவிக்கு வந்ததற்கு பின்னால் மிகுந்த உழைப்பு உள்ளது என்றார். புலியை முறம் கொண்டு விரட்டிய வீரத்தை குடியரசு தலைவரிடம் பார்க்கின்றேன் என பேசிய அவர், சாதாரண குடிமகளும் குடியரசுத்தலைவராக முடியும் என்று திரௌபதி முர்மு நிரூபித்துக் காட்டியுள்ளதாக கூறினார். ஒட்டுமொத்த பெண்களின் பெருமையாக திரௌபதி இருப்பதாகவும் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் புகழாரம் சூட்டினார்.