மாணவி பிரியா மரணத்துக்கு என்ன காரணம்?- அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

மாணவி பிரியா மரணத்துக்கு என்ன காரணம்?- அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

கால்பந்து வீராங்கனையான மாணவி பிரியா எதனால் மரணம் அடைந்தார் என்பது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட காது மூக்கு தொண்டை உயர்நிலை நிலையம் பொன்விழா ஆண்டு இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மாணவி பிரியா மரணத்தில் கவனக்குறைவு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தேன். அது முதல் நாள் இரவு. அடுத்த நாள் உடனடியாக காலையிலேயே ஒரு மருத்துவ விசாரணை குழு அமைத்தோம். அந்த குழுவினர் விசாரித்து நடத்திய கவன குறைவு தான் இதுக்கு காரணம் என்று அறிக்கை கொடுத்தனர். அறிக்கை இரவில் வந்தது. அடுத்த நாள் பத்திரிகையாளர்களை சந்தித்து, கவனக் குறைவின் காரணமாக இது நடைபெற்றிருக்கிறது என்பதால் அந்த இரு மருத்துவர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்று சொல்லி, ஒருவரை தூத்துக்குடிக்கும், ஒருவரை நெல்லைக்கும் இடமாற்றம் செய்தோம்.

இது மட்டுமில்லாமல் அந்த குழந்தையை நானே மருத்துவமனைக்கு வந்து நேரடியாக பார்த்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவரது பெற்றோரிடத்திலும் பேசிக் கொண்டிருந்தேன். பெற்றோர் விடுத்த கோரிக்கை என்பது, குழந்தை நன்றாக குணமடைந்து வீடு திரும்பியவுடன் அரசு வேலை நீங்கள் பரிந்துரைக்க வேண்டும் என்றனர். அப்போது, முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று செய்வோம் என்று உறுதியளித்தேன். அது மட்டும் இல்லாமல் நாங்களாவே கூறிய இன்னொரு வாக்குறுதி, பெங்களூருவில் உள்ள பேட்டரி கால் நல்ல பயனுள்ளதாக இருக்கிறது. பெரிய பாதிப்பே தெரியாத அளவுக்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு பேட்டரி கால் இந்த குழந்தைக்கு வாங்கி கொடுக்கிறோம் என்று சொன்னேன். குழந்தை சரியான உடனே அந்த காலை நீங்க ஆர்டர் செய்து கொடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தேன். இதை பத்திரிகையாளர் சந்திப்பிலும் சொன்னேன்.

ரத்தநாளங்கள் பாதிக்கப்பட்டு ரத்த ஓட்டம் இருதயத்துக்கும் சிறுநீரகத்துக்கும் செல்லுகிற அந்த ரத்த ஓட்டம் முழுமையாக நின்று விட்டதன் விளைவாக குழந்தை நம்மை விட்டு பிரிந்தது. குழந்தைக்கு 7 மணிக்கு உயிர் பிரிந்தது என்று எனக்கு மருத்துவமனை டீன் தகவல் கூறினார். 7.15 மணிக்க நான் மருத்துவமனைக்கு வந்துவிட்டேன். மருத்துவமனைக்கு வந்து அந்த குழந்தை உடல் இருக்கிற அறையிலேயே பெற்றோர், 3 அண்ணன்கள் இருந்தார்கள். அவர்களிடம் இருந்தபோது, குழந்தையின் அப்பா, குழந்தை மூக்கில் இருக்கிற டியூப்பை எடுக்க சொன்னாங்க. அதன் பின்னர் டாக்டரிடம் சொல்லி அதை எடுக்கச் சொன்னோம். பிரேத பிரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். குழந்தை மரண விவகாரத்தில் மருத்துவர்கள் தவறு செய்திருப்பது கண்டறியப்பட்டால் நடவடிக்கைக்கு பிரேத பரிசோதனை அறிக்கை உதவியாக இருக்கும். பிரேத பரிசோதனை செய்யவில்லையென்றால் நாளைக்கு நல்லா இருக்காது. பிரேத பரிசோதனை செய்து கொடுப்பதுதான் நல்லது என்று கூறினோம். இதன் பின்னர் குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட 2 மருத்துவர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in