மக்கள்தொகை கட்டுப்பாடுதான் இப்போது முன்னுரிமையான பிரச்சினையா?: பாஜகவுக்கு மாயாவதி கேள்வி

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி

விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற முன்னுரிமையளிக்க வேண்டிய பிரச்சினைகளை விட்டுவிட்டு மக்கள்தொகை கட்டுப்பாடு பிரச்சினையை கையில் எடுத்து பாரதிய ஜனதா கட்சி மக்களைக் குழப்புகிறது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மாயாவதி வெளியிட்டுள்ள ட்வீட்டில், "அதிக வறுமை மற்றும் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக மக்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்ற முடியாமல், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்த நேரத்தில், மக்கள்தொகை கட்டுப்பாடு போன்ற நீண்ட காலப் பிரச்சினைகளால் மக்களைக் குழப்புவதுதான் பாஜகவின் புத்திசாலித்தனமா?.

மக்கள்தொகை கட்டுப்பாடு என்பது ஒரு நீண்ட கால கொள்கை பிரச்சினை. இதற்கு சட்டத்தை விட அதிக விழிப்புணர்வு தேவை. ஆனால் நாட்டின் உண்மையான முன்னுரிமைக்கு கவனம் செலுத்துவதற்கு பதிலாக பாஜக அரசாங்கங்கள் வஞ்சகமான மற்றும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தேர்வு செய்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் பொது நலன் மற்றும் நாட்டின் நலன் எப்படி சாத்தியமாகும்? மக்கள் சோகமாகவும் அமைதியற்றவர்களாகவும் உள்ளனர்” என தெரிவித்துள்ளார்

உத்தரப்பிரதேசத்திலும், மத்திய அமைச்சரவையிலும் உள்ள பல பாஜக அமைச்சர்கள் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் அவசியத்தைப் பற்றி சமீப காலங்களில் அதிகளவில் பேசி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ‘வெவ்வேறு மத குழுக்களின் வளர்ச்சி விகிதங்களில் உள்ள மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு நாட்டில் சமநிலையின்மை, குழப்பம் மற்றும் அராஜகத்திற்கு வழிவகுக்கும்’ என்று கூறினார்.

கடந்த மாதம், மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், மக்கள் தொகைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று கூறியதும் சர்ச்சையை உருவாக்கியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in