நேற்று எஸ்.டி.பி.ஐ நிர்வாகி... இன்று ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி: கேரளத்தை அச்சுறுத்தும் அரசியல் படுகொலை

ஸ்ரீனிவாசன்
ஸ்ரீனிவாசன்

கேரளத்தில் நேற்று பாலக்காடு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார். அதற்கு பலி தீர்க்கும் வகையில் இன்று ஆர்.எஸ்.எஸ் தீவிர செயற்பாட்டாளர் சீனிவாசன் என்பவர் மர்மகும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சுபைர்
சுபைர்

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தின் எலப்புள்ளி பகுதியைச் சேர்ந்த சுபைர் நேற்று (வெள்ளிக்கிழமை) பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு தனது தந்தை அபுபக்கருடன் பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது பின்னால் வந்த கார் ஒன்று மோதியது. அவர் இறங்கி டூவீலரின் சேதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது மற்றொரு காரில் வந்த நான்குபேர் கொண்ட கும்பல் சுபைரை சரமாரியாக வெட்டியது. சினிமா பாணியில் நடந்த இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் பரவியது. அக்கம், பக்கத்தினர் சுபைரை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிர் இழந்தார்.

ஏற்கெனவே கடந்த நவம்பர் மாதம் அதே 15-ம் தேதி சஞ்சித் என்ற ஆர்.எஸ்.எஸ் ஊழியர் அதே இடத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவியுடன் அவர் டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது இதேபோல் பின்னால் வந்த ஒருகார் மோதியது. அப்போது, மற்றொரு காரில் வந்த கும்பல் சஞ்சித்தை படுகொலை செய்தது. இதில் பத்துபேர் மீது காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர்கள் எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். ஆர்.எஸ்.எஸ் ஊழியர் கொலைக்கு பழிக்குப் பழியாகத்தான் எஸ்.டி.பி.ஐ நிர்வாகி சுபைர் கொலை செய்யப்பட்டிருந்தார். அதனால் இந்தப் பிரச்சினையை பழிக்குப் பழி சம்பவத்தோடாவது முடிவுக்கு கொண்டுவர போலீஸார் தீவிரம் காட்டிவந்தனர்.

நேற்று கொல்லப்பட்ட சுபைரின் கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட காரை போலீஸார் கைப்பற்றியிருந்தனர். அந்த கார் எஸ்.டி.பி.ஐ கட்சியினரால் கொலை செய்யப்பட்ட சஞ்சித் என்ற ஆர்.எஸ்.எஸ் தொண்டரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று ஆர்.எஸ்.எஸ் மூத்த உறுப்பினரும், முன்னாள் நிர்வாகியுமான சீனிவாசன் என்பவர் சற்றுமுன் கொலை செய்யப்பட்டார்.

பாலக்காடு பகுதியில் கடை நடத்திவரும் சீனிவாசன்(45) தீவிர ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளர். இவர் இன்று மதியம் 1 மணியளவில் கடையில் இருந்தபோது பைக்கில் வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். நேற்று நடந்த எஸ்.டி.பி.ஐ நிர்வாகி கொலைக்கு பதிலாக இந்தக் கொலை சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in