‘திரௌபதி முர்மு தோற்றம்’: மன்னிப்பு கேட்டார் மம்தா அமைச்சர்

அகில் கிரிக்கு எதிரான பாஜக மகளிரணி போராட்டம்
அகில் கிரிக்கு எதிரான பாஜக மகளிரணி போராட்டம்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் தோற்றம் குறித்து தரக் குறைவாக பேசிய மேற்கு வங்க அமைச்சர் அகில் கிரி தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரியிருக்கிறார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை பாஜக தீவிரப்படுத்தி உள்ளது.

’பாஜக மேற்கு வங்க தலைவரான சுவேந்து அதிகாரி கடந்த சில மாதங்களாகவே தனிப்பட்ட முறையில் என்னை தரக்குறைவாக தாக்கிப் பேசி வருகிறார். அவர் மீதான கோபத்தின் காரணமாக என்னுடைய நந்திகிராம் பேச்சு அப்படி சென்று விட்டது. உண்மையில் நான் அரசியலமைப்பின் மீதும், நமது குடியரசுத் தலைவர் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அப்படி பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ இப்படி கேட்டுக்கொண்டிருக்கிறார் அகில் கிரி.

அகில் கிரி பேசிய வீடியோ தேசிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதும், அவை மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் கட்சிக்கு எதிராக திரும்பியதும், அமைச்சர் உடனடி மன்னிப்பு கோருவதற்கு காரணமாகி உள்ளன. அகில் கிரியால் பேச்சில் தாக்கப்பட்ட சுவேந்து அதிகாரி 2 ஆண்டுகளுக்கு முன்னர் வரை திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்தவர். காங்கிரஸ் காலம் தொட்டு 15 ஆண்டு காலமாக மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய சகாவாக இருந்தவர். அவருடனான திடீர் உரசலில் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் ஐக்கியமான சுவேந்து அதிகாரி, நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு எதிராக நின்று வென்றார். இதனால் சுவேந்து அதிகாரிக்கு எதிரான வசைபாடல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மத்தியில் அதிகம் நிலவுகிறது.

இப்படி சுவேந்து மீதான சினத்தில் உளறிக்கொட்டி கட்சிக்கும் ஆட்சிக்கும் தர்மசங்கடம் சேர்த்திருக்கிறார் அகில் கிரி. இவரது பேச்சுக்கு மம்தா பானர்ஜியை பாஜகவினர் நேரடியாக தாக்கிப் பேசி வருகின்றனர். ’மம்தா பானர்ஜியும் மன்னிப்பு கேட்பதோடு அகில் கிரியை பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

அண்மைக் காலமாக வடகிழக்கு மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பரவலுக்கு பாடுபட்டு வரும் மம்தா பானர்ஜியின் நோக்கை சிதறடிக்கும் வகையில் அவரை ‘பழங்குடி இன மக்களுக்கு எதிரானவர்’ என்று சித்தரித்து வருகின்றனர். அகில் கிரியின் பேச்சுக்கு உடனடியாக கட்சித் தலைமை கண்டனம் தெரிவித்த போதும், புதிதாய் புறப்படும் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாது திரிணாமுல் கட்சியினர் தவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in