சோனியாவை மீண்டும் சந்தித்த பிரசாந்த் கிஷோர்: முன்வைத்த யோசனைகள் என்னென்ன?

சோனியாவை மீண்டும் சந்தித்த பிரசாந்த் கிஷோர்: முன்வைத்த யோசனைகள் என்னென்ன?

கடந்த சனிக்கிழமை (ஏப்.17) சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்து, தேர்தல் வியூகங்களை முன்வைத்த பிரசாந்த் கிஷோர், நேற்று இரவு மீண்டும் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினார்.

கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக நிகழ்ந்திருக்கும் இந்தச் சந்திப்பு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சனிக்கிழமை சோனியா காந்தியின் இல்லத்தில் நிகழ்ந்த சந்திப்பின்போது, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முகுல் வாஸ்னிக், கே.சி.வேணுகோபால், மல்லிகார்ஜுன கார்கே உட்பட கட்சியின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான திட்டங்களை முன்வைத்த பிரசாந்த் கிஷோர், நேற்றைய சந்திப்பின்போது இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவிருக்கும் குஜராத், இமாசல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்கள், கர்நாடகம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தல்கள் ஆகியவற்றுக்கான திட்டங்களை முன்வைத்திருக்கிறார்.

பிரசாந்த் கிஷோர் முன்வைத்த திட்டங்களின் அடிப்படையில் ஒரு வாரத்துக்குள் அறிக்கை தயாரிக்கும் வேலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அடங்கிய குழு இறங்கியிருக்கிறது. அதேபோல், அவர் முன்வைத்த திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து இந்த மாதத்தின் இறுதியில் தனது கருத்தைக் காங்கிரஸ் கட்சி தெரிவிக்கும்.

திட்டம் என்ன?

2024 மக்க்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை உத்தர பிரதேசம், பிஹார், ஒடிசா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும், தமிழகம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கூட்டணி அமைத்துக் களம் காண வேண்டும் என்றும் பிரசாந்த் கிஷோர் யோசனை தெரிவித்திருக்கிறார். ராகுல் காந்தி அதை ஏற்றுக்கொண்டிருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைவது குறித்து வெளியான தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.

அதிருப்தி விலகுமா?

என்னதான் காங்கிரஸ் வெற்றி குறித்து பிரசாந்த் கிஷோர் அக்கறை செலுத்தினாலும், காங்கிரஸார் மத்தியில் அவர் குறித்த அதிருப்தியும் சந்தேகங்களும் இல்லாமல் இல்லை. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும், ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டியும் வெல்வதற்கு வியூகம் அமைத்துத் தந்த பிரசாந்த் கிஷோர், அதன் மூலம் அம்மாநிலங்களில் காங்கிரஸ் கடும் தோல்வியடைய வழிவகுத்தவர்.

காங்கிரஸிலிருந்து பலரை வெளியேற்றி திரிணமூல் காங்கிரஸில் சேர்த்ததன் பின்னணியில் பிரசாந்த் கிஷோர் இருக்கிறார் என்பதால், பலர் அவரது யோசனைகளைச் சற்றே சந்தேகத்துடன் பார்க்கின்றனர். மேகாலயாவில் இருந்த 17 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களில் 12 பேர் திரிணமூலுக்குத் தாவிவிட்டனர். அதில், முன்னாள் முதல்வர் முகுல் சங்மாவும் அடக்கம். கோவா முன்னாள் முதல்வர் லூசினோ ஃபெலேரோ திரிணமூலுக்குச் சென்று மாநிலங்களவை எம்.பி-யாகவும் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றையெல்லாம் தாண்டி காங்கிரஸ் கட்சி மீண்டுவருவதற்கு பிரசாந்த் கிஷோர் எப்படி உதவப்போகிறார் என்பது முக்கியமான கேள்வியாக உருவெடுத்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in