அரசு சிவராத்திரி விழா நடத்துவது தேவையற்ற வேலை: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

அரசு சிவராத்திரி விழா நடத்துவது தேவையற்ற வேலை: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை (மார்ச் 1) மாலை 6 மணி முதல் மறுநாள் காலை வரை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் விழா நடத்துவதாக வெளியான அறிவிப்பு, திமுகவின் முற்போக்குக் கொள்கைகள் மீது அபிமானம் கொண்டவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தமிழக அரசு மகா சிவராத்திரி விழா எடுப்பது இதுவே முதல் முறை. இதற்கான விளம்பரங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் படங்கள் இடம் பெற்றது திமுக கூட்டணி கட்சிகளுக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி காட்டமாக அறிக்கை வெளியிட்டார். ‘எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு சிவாலயங்கள் அனைத்தும் மகா சிவராத்திரியன்று வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு விளக்கியிருக்கிறார். இந்து அறநிலையத் துறை, அதன் அதிகாரிகள், அமைச்சர் போன்றவர்களின் பணி என்பது பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுவதோ, செயல்படுவதோ அல்ல. கோயில் சொத்து வரவு – செலவுகளைக் கண்காணிப்பதும், சரிபார்ப்பதும், நிர்வகிப்பதும் மட்டும்தான்’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.

‘மக்களைத் திரட்டி ஆன்மிகம் என்ற பெயரில் மதப்பிரச்சாரம் செய்வது அறநிலையத் துறையின் பணியல்ல. அது திராவிட மாடலும் அல்ல. தமிழக அரசு சார்பில் மகாசிவராத்திரி விழா நடத்துவது இந்துத்துவா மாடல்’ என்று திராவிடர் விடுதலை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.ராசேந்திரன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, ‘ஆன்மிகப் பரப்புரையை அரசே முன்னெடுப்பது திராவிட கருத்தியலுக்கு எதிரானதாகும். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இச்செயல் திட்டத்துக்கு அனுமதிக்க கூடாது' என்று கூறியுள்ளார். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சிவராத்திரி விழா நடத்த கடும் கிளம்பியதால், ‘மகாசிவராத்திரி கொண்டாட்டத்தை கோயிலுக்குள் மட்டுமே நடத்த வேண்டும்’ என்று இந்து அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை இயக்குநர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.

இந்நிலையில், தமிழக அரசின் இந்த நிலைப்பாடு குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, “மதச்சார்பற்ற அரசாக இருந்துகொண்டு இப்படியான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபவது தவறு. இந்து சமய அறநிலையத் துறையின் வேலை, சொத்துக்களைப் பாதுகாப்பது, கோயில் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதுதான். அதை விட்டுவிட்டு சிவராத்திரி விழா நடத்துவோம் என்பது தேவையற்ற வேலை” என்று கூறினார்.

இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக என்ற பிரச்சாரத்தை பாஜக தொடர்ந்து செய்துவரும் நிலையில், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு எடுத்து வரும் நடவடிக்கைகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை என்று அரசியல்நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 2024 மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு, ‘நாங்கள் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல’ எனக் காட்டிக்கொள்ள திமுக அரசு காய் நகர்த்துகிறதோ என்ற அச்சத்தையும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மறுபுறம், இதே கருத்தையே பாஜக வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

திமுக என்றாலே முற்போக்கு என்று ஒரு பிம்பம் உண்டு. அந்த பிம்பத்திற்கு, நாளை நடைபெற உள்ள மகா சிவராத்திரி கொண்டாட்டம் வேறு அர்த்தத்தைத் தந்துள்ளதாக திராவிடக் கொள்கைப் பற்றாளர்களும், முற்போக்காளர்களும் விமர்சித்துவருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in