மேட்டூர் அணை, வள்ளுவர் கோட்டம், மஞ்சப்பை: ஏற்காட்டில் பார்வையாளர்களை கவரும் மலர் அலங்காரங்கள்

மேட்டூர் அணை, வள்ளுவர் கோட்டம், மஞ்சப்பை: ஏற்காட்டில் பார்வையாளர்களை கவரும் மலர் அலங்காரங்கள்

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலாத் தளமான ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடை விழா வெகு விமரிசையாக நடத்தப்படும். கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடை மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை. விதிமுறைகள் தளர்த்தப்பட்டதையடுத்து ஏற்காட்டில் 45-வது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி இன்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேளாண்மைத்துறை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மலர்க்கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், "அனைத்து கிராம கலைஞர் வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 900 கிராமங்களில் உள்ள தரிசு நிலங்கள் அரசின் செலவில் விளைநிலங்களாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இலவச போர்வெல், இலவச மின்சாரம், இலவச இடுபொருள்கள் உள்ளிட்டவை மூலம் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள தரிசு நிலங்கள் மேம்படுத்தப்பட்டு வேளாண்மை புரட்சி நிகழ்த்தப்படும்" என்றார்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "ஏற்காடு மலை கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஏற்காடு பகுதியில் வசித்து வரும் மக்கள் பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும்" என்றார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், "தமிழகம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் 15 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தப் பகுதிகளில் ரூ.50 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் சுற்றுலா இடங்களில் அணுகு சாலைகள், கழிப்பிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் உள்ள படகு இல்லத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் மிதக்கும் உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிளியூர் மலை கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் சாகசப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு சுற்றுலாப் பயணிகள் டெண்ட் மூலம் தங்குதல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். தமிழகத்தில் சூழல் சுற்றுலா, கேரவன் சுற்றுலா ஆகியவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதன்மூலம் சுற்றுலாத் துறையில் புதிய மைல்கல் எட்டப்படும்" என்றார்.

ஏற்காடு மலர்கண்காட்சியில் பார்வையாளர்களை கவரும் வகையில் ஏராளமான மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் மேட்டூர் அணை, வள்ளுவர் கோட்டம், பட்டாம்பூச்சி, மஞ்சப்பை உள்ளிட்ட 7 மலர் வடிவமைப்புகள் 5 லட்சம் மலர்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இக்கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வரும் ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in