
ஹன்சிகா மோத்வானிக்கு திருமணமாகி ஒரு வாரமாகப் போகிறது. ஆனால் அம்மணியும் சரி அவரது அன்பு ரசிகர்களும் சரி இன்னமும், கல்யாண வைபவ விமரிசையிலிருந்து வெளியே வரவேயில்லை.
திருமண விழாவின் பதிவுகளை நித்தமொரு சிலிர்ப்பான அனுபவமாக ஹன்சிகா தொடர்ந்து பதிவேற்றியபடி இருக்கிறார். தனது திருமண விழாவை எந்தளவுக்கு அவர் நேசிக்கிறார் என்பதும் இதிலிருந்து தெரிகிறது.
ஜெய்ப்பூர் அரண்மனையில் நடந்த திருமண நாள் விழா தருணங்களாகட்டும், அதற்கு முந்தைய நாட்களின் வரவேற்பு விழாக்களாகட்டும் விசேஷ டிசைனர்களை வரவழைத்து சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளுடன் வலம் வந்திருக்கிறார் ஹன்சிகா. மேற்படி ஆடை அலங்காரங்கள் எல்லாம் பொலிவிழக்கும் வகையில் ஹன்சிகா சிந்திய வெட்கமும் சிரிப்பும் தனிக்கதை.
வெறும் படோடபத்துக்கு மட்டுமன்றி தனது திருமண விழாவை அர்த்தமுள்ளதாக்கியதிலும் ஹன்சிகா கவனிக்க வைத்தார். திருமண விழாவில் உணவு வீணாவதை தவிர்ப்பதற்காக ராபின் ஹுட் ஆர்மி என்ற அமைப்பினரோடு கைகோத்திருந்தார். இதுபோன்ற விழாவில் கலந்திராத 10 சிறுவர் சிறுமியரை அழைத்து வந்து அவர்களையும் விழாவில் உபசரித்து மகிழ்ந்தார்.
இந்த புகைப்படங்களில் புகுந்த வீட்டாருக்கான சடங்குகளில் ஒன்றாக கணவர் சோஹைலுக்கு என சிறப்பு ஹல்வா பதார்த்தத்தை கிண்டியதும், மணமுடிப்புக்கு முந்தைய சூஃபி நைட் சிறப்புக்காக ஐவரியில் ஆடை தரித்து நின்றதும் ரசிகர்களால் அதிகம் விதந்தோதப்படுகின்றன.
(படங்களை முழுமையாக தரிசிக்க, ஏதேனும் ஒன்றை க்ளிக் செய்து அடுத்தடுத்து நகர்த்தவும்..)