‘பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நான் வெளியேற யார் காரணம்?’ -வனிதா விளக்கம்!

‘பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நான் வெளியேற யார் காரணம்?’ -வனிதா விளக்கம்!
வனிதா

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேறியது குறித்து தன்னிலை விளக்கம் தந்துள்ளார் வனிதா.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஓடிடி வடிவமாக அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு மாதம் நிறைவடைய இருக்கிறது. 24*7 லைவ் ஸ்ட்ரீமிங்காக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், ‘விக்ரம்’ படப்பிடிப்புக்கு தேதிகள் ஒதுக்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.

இதற்கு பிறகு நடிகர் சிலம்பரசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என டிஸ்னி+ஹாட்ஸ்டார் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அண்மையில் அதற்கான புரோமோவும் வெளியானது. இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களுக்கு சிலம்பரசன் அறிமுகமாக உள்ளார்.

முன்னதாக, இந்நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவே அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கசிந்தன. ரம்யா கிருஷ்ணனின் வருகையை ஊகித்தே, நிகழ்ச்சியில் இருந்து வனிதா பாதியில் வெளியேறினார் என பிக்பாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் விவாதித்து வந்தனர். ரம்யா கிருஷ்ணன் - வனிதா இடையிலான முந்தைய கசப்பே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன ரியாலிட்டி நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பானபோது, அதில் வனிதா போட்டியாளராகவும், ரம்யா கிருஷ்ணன் நடுவராகவும் பங்கேற்று இருந்தனர். அந்த நிகழ்ச்சியில் இருவருக்கும் இடையே மூண்ட பூசல்கள், விவாதங்கள் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார் வனிதா.

ஆனால், தனது மன அழுத்தம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விட்டு தற்போது வெளியேறியதாக வனிதா தெரிவித்து இருக்கிறார். வெளியில் வந்ததும், அது குறித்த விளக்கமாக, 'பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரம்யா கிருஷ்ணன் வருவார் என்பதால் தான் வெளியேறியதாக’ பரவும் தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக வனிதா வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், ‘நான் வெளியேறிதற்கு காரணம் ரம்யா கிருஷ்ணன் என்று சொல்லப்படுவதை கேட்டால் சிரிப்பாக இருக்கிறது. என்னை நான் முதலில் மதிக்க வேண்டும். அங்கு நான் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தேன். அதற்கு மேல் என்னால் தொடர முடியாது என்ற நிலை இருந்தது. அதனால் அந்த தைரியமான முடிவை நான் எடுத்தேன். இதை புரிந்து கொண்ட டிஸ்னி நிறுவனத்திற்கும், பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பு குழுவான எண்டமோலுக்கும் எனது நன்றி.

வாழ்க்கையில் உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் வரலாம். ஆனால் அதில் எது உங்களுக்கு சரியாக வரும் என்பதை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றாற்போல செயல்பட வேண்டும். இதை மனதில் கொண்டுதான் தைரியமான முடிவை எடுத்தேன். அதை புரிந்து கொள்ளுங்கள். அதை விடுத்து இது போன்ற கமெண்டுகளை பரப்பாமல் விளையாட்டை ரசியுங்கள்’ என்று விளக்கம் அளித்துள்ளார் வனிதா.

Related Stories

No stories found.