கொடூரமான குழந்தைகள் விளையாட்டு: ‘ஸ்க்விட் கேம்’

கொடூரமான குழந்தைகள் விளையாட்டு: ‘ஸ்க்விட் கேம்’

உலக சினிமா அரங்கில் தென் கொரிய சினிமாக்களுக்கென்று ஒரு தனித்துவமான இடமிருக்கிறது. அந்த இடத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘ஸ்க்விட் கேம்’ வலைத் தொடர். 2019 செப்டம்பர் 2-ம் தேதி, கொரிய மொழியில் ஒரிஜினல் சீரிஸ் ஒன்றைத் தயாரிக்கவிருப்பதாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்தது. ஆரம்பத்தில் ‘ரவுண்ட் சிக்ஸ்’ என்று பெயரிடப்பட்ட இத்தொடர், தற்போது ‘ஸ்க்விட் கேம்’ என்ற பெயரில் 9 எபிசோடுகளுடன் வெளியாகியுள்ளது.

தென் கொரியாவில் மிகப்பெரும் சர்ச்சைகளையும், சட்டத் திருத்தங்களையும் கொண்டுவந்த ‘சைலன்ஸ்டு’ என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை இயக்கிய ஹ்வாங் டோங்-ஹ்யூக் திரைக்கதை எழுதி இத்தொடரை இயக்கியுள்ளார் (விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் ‘சைலன்ஸ்டு’ திரைப்படத்தின் தாக்கத்தில்தான் உருவாகவிருக்கிறது என்று அப்படம் வெளியாவதற்கு முன்பு செய்திகள் வெளியாகின). “சமீபத்திய தரவுகளின்படி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டு தற்போது முதலிடத்திலிருக்கும் தொடராக ‘ஸ்க்விட் கேம்’ இருக்கிறது” என்று நெட்ஃப்ளிக்ஸின் இணை சி.இ.ஓ-வான டெட் சாரண்டோஸ் தெரிவித்துள்ளார். உலகில், அதிகமான பார்வையாளர்களால் நெட்ஃப்ளிக்ஸ் இணையதளத்தில் பார்க்கப்பட்ட ஆங்கில மொழி அல்லாத தொடராகவும் ‘ஸ்க்விட் கேம்’ இருக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விளையாட ஒரு வாய்ப்பு

தென் கொரியாவில் வசிக்கும் ஜி-ஹுன், அவர் வேலைபார்த்த நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் வேலையிழந்திருப்பார். பல வருடங்களாக வேலை இல்லாமல் இருக்கும் அவருக்கு விவாகரத்து நடந்து தன் மனைவியையும், 10 வயது மகளையும் பிரிந்து, தெருத்தெருவாக சென்று வியாபாரம் செய்யும் தாயின் சம்பாத்தியத்தில் வாழ்ந்துவருவார் ஜி-ஹுன். சூதாட்டத்துக்கு அடிமையாகி, பெரும் கடன் சுமையிலும் மாட்டிக்கொண்டிருப்பார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்களால் உயிருக்கே ஆபத்து வரும் சமயத்தில், ஒரு வாய்ப்பு ஜி-ஹுன்னுக்கு கிடைக்கும். மர்மமான மனிதர் ஒருவர் ஜி-ஹுன்னை அணுகி, “ஒரு விளையாட்டு இருக்கிறது. அதை விளையாடினால் மிகப்பெரிய அளவில் பணம் கிடைக்கும்” என்று கூறுவார். பிழைக்க வேறு வழியில்லாத ஜி-ஹுன், அந்த வாய்ப்பை ஏற்பார்.

மயக்க நிலையில் விளையாட்டு நடக்குமிடத்துக்கு அழைத்துச்செல்லப்படுவார் ஜி-ஹுன். எங்கு நடக்கிறது, நாம் எங்கு இருக்கிறோம் என்றே தெரியாத வண்ணம் அமையப்பெற்றிருக்கும் ஒரு இடத்துக்கு, இவரையும் சேர்த்து 456 பேர் அழைத்துவரப்பட்டிருப்பார்கள். மற்ற 455 பேரும் ஜி-ஹுன் போலவே வெளியுலகில் பணம் இல்லாமல் வாழ்வின் விளிம்பில் நின்றுகொண்டிருப்பவர்கள். அந்த விளையாட்டை நிர்வகிக்கும் அனைவரும் விசித்திரமான முகமூடி, உடையுடன் இருப்பார்கள். ‘ஃப்ரன்ட் மேன்’ என்ற மர்ம மனிதனின் தலைமையில் இந்த விளையாட்டுகள் நிர்வகிக்கப்படும்.

தென்கொரியப் பணமதிப்பில் 456 பில்லியனை பரிசுத்தொகையாகப் பெறுவதற்குச் செய்ய வேண்டியது எல்லாம், சிறுவர்களுக்கான 6 விளையாட்டுகளை 6 நாட்கள் விளையாட வேண்டும். ஒரே ஒரு பிரச்சினை என்னவென்றால், விளையாட்டில் தோற்றால் அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்லப்படுவார்கள்.

கொடூரத்தின் உச்சம்

ஆரம்பத்தில் விளையாட்டாகக் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு, தாங்கள் மாட்டிக்கொண்டிருக்கும் அபாயம் புரிந்ததும் இத்தொடரின் திரைக்கதை வேகமெடுக்கிறது. எளிமையான விதிமுறைகளைக் கொண்ட சிறுவர்களின் விளையாட்டு. அதில் வெற்றியடைந்தால் பணம், தோற்றால் மரணம். இப்படி ஒரு எளிமையான மையப் புள்ளியை வைத்துக்கொண்டு அதைச்சுற்றி மனித மனத்திலுள்ள சுயநலம், குரூரம், மனிதாபிமானம், நட்பு, அன்பு, பச்சாதாபம், கழிவிரக்கம் என்று சகல மனித உணர்வுகளையும் எதார்த்தமாகக் காட்சிப்படுத்தியிருப்பது ‘ஸ்க்விட் கேம்’-மின் வெற்றிக்குக் காரணம். 456 நபர்கள் போட்டியில் கலந்து கொண்டாலும், பத்துக்கும் குறைவான முக்கிய கதாபாத்திரங்களை மட்டுமே கொண்டு, மிக அற்புதமாகத் திரைக்கதையில் தொய்வில்லாமல் எடுத்துச் சென்றிருப்பது பாராட்ட வேண்டிய விஷயம். ஒருபுறம் விளையாட்டுப் போட்டிகள் நடந்தாலும், விளையாட்டு நடக்கும் இடத்தில் விளையாட்டை நடத்தும் மர்ம மனிதர்களுக்குத் தெரியாமல் தன் சகோதரனைத் தேடி உள்ளே ரகசியமாக நுழையும் போலீஸ் அதிகாரி. இறந்துபோகும் போட்டியாளர்களின் உடல் உறுப்புகளைத் திருடி விற்கும் கும்பல் என்று சகல பக்கமும் எதிர்பார்ப்பும் விறுவிறுப்பும் விரவிக் கிடக்கிறது ‘ஸ்க்விட் கேம்’ திரைக்கதையில்.

சீசன் - 2

பொதுவாக, இரு வேறு துருவங்களை இணைத்து எழுதப்படும் திரைக்கதைகள் மிகச் சுவாரசியமானதாக இருக்கும். அவ்வகையில், குழந்தைகள் விளையாட்டையும் கொடூரமான மனித மனங்களையும் கலந்து எழுதப்பட்டிருக்கும் இத்தொடர் பார்க்க வேண்டிய ஒன்று. சீசன் ஒன்றின் இறுதியில் சீசன் இரண்டுக்கான தொடர்ச்சியையும் நெட்ஃப்ளிக்ஸ் வைத்திருப்பது ஆறுதலான விஷயம். மிக விரைவில் சீசன்- 2 எதிர்பார்க்கலாம் ஆனால், சீசன்-1 ஏற்படுத்திய அளவு தாக்கத்தை சீசன்-2 ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.