ஓடிடி உலா: இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

பயணிகள் கவனிக்கவும்
பயணிகள் கவனிக்கவும்

பயணிகள் கவனிக்கவும்: தமிழ் திரைப்படம்

இந்த சமூக ஊடக யுகத்தில் அற்ப பிரபல்யத்துக்கான ஆவலாதியில் அலைபவர்களின் தலையில் தட்டி அறிவுறுத்த வந்திருக்கிறது ‘பயணிகள் கவனிக்கவும்’ திரைப்படம்.

கடந்த சில தினங்களாக தூக்கத்தைத் தொலைத்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் ஓடும் மெட்ரோ ரயிலில் தன்னை மறந்து உறங்குகிறார். அதைக் காணும் இன்னொருவர் ’மெட்ரோவில் குடிகாரன்’ என்ற தலைப்பில் படமெடுத்து சமூக ஊடகத்தில் பகிர்கிறார். இதனால் அந்த மாற்றுத்திறனாளியும், அவரது குடும்பத்தினரும் சந்திக்கும் அவதிகளை, இன்றைய சமூக ஊடக அடிமைகளுக்கு புரியும் வகையில் விவரிக்கிறது ‘பயணிகள் கவனிக்கவும்’ திரைப்படம்.

பயணிகள் கவனிக்கவும்
பயணிகள் கவனிக்கவும்

’விக்ருதி’ என்ற தலைப்பில் மலையாளத்தில் வெளியான திரைப்படத்தை, தமிழுக்கான மாற்றங்களுடன் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.சக்திவேல். தொடர்ந்து வித்தியாசமான வேடங்களை மேற்கொண்டு வரும் விதார்த், இதில் பேச்சு, செவித் திறனற்றவராக தோன்றுகிறார். இவருடைய மனைவியாக லட்சுமி ப்ரியா, கலகலப்புக்கு கருணாகரன் என பலர் நடித்துள்ளனர். தற்போதைய சமூகத்துக்கு அவசியமான பாடத்தை நகைச்சுவை கலந்து பகிர்ந்திருக்கும் இந்த திரைப்படம், ’ஆஹா’ தளத்தில் வெளியாகி உள்ளது.

தி ஆஃபர்: ஆங்கில வலைத்தொடர்

உலக சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கும் ’தி காட் ஃபாதர்’ திரைப்படத்தின் பொன்விழா ஆண்டினை ஹாலிவுட் விமரிசையாக கொண்டாடி வருகிறது. இதனை முன்னிட்டு ஒலி, ஒளியில் செறிவூட்டப்பட்ட காட் ஃபாதரின் டிஜிட்டல் பிரதிகள் மீண்டும் திரையரங்கை அலங்கரித்துள்ளன. இந்த வரிசையில், பிரான்சிஸ் ஃபோர்ட் இயக்கத்தில் மார்லன் பிரான்டோ உள்ளிட்டோர் நடிப்பில் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை குவித்த ‘தி காட் ஃபாதர்’ திரைப்படம் உருவான கதை வலைத்தொடராகவும் உருவாகி உள்ளது.

’தி ஆஃபர்’ (The Offer) என்ற தலைப்பில் ’பாராமவுன்ட்+’ தளத்தில் வெளியான இந்த வலைத்தொடர், இந்தியாவில் ’வூட்’ தளத்தில் வெளியாகி உள்ளது. வலைத்தொடரின் முதல் 3 அத்தியாயங்கள் ஏப்ரல் 28 அன்று வெளியாகி உள்ளன. இதர அத்தியாயங்கள் வரும் வாரங்களில் ஒவ்வொன்றாக வெளியாக உள்ளன.

பேங் பேங் பேபி: இத்தாலிய வலைத்தொடர்

வடக்கு இத்தாலியின் சிறு நகரமொன்றில் வாழும் 16 வயது அலைஸ் என்ற சிறுமியின் வாழ்க்கை திடீரென தலைகீழாக மாறுகிறது. உலகின் அதிமோசமான நிழலுலகம் அவள் வாழ்க்கையில் குறுக்கிடுகிறது. அப்போது, சில ஆண்டுகள் முன்பாக கொல்லப்பட்டதாக அவள் நம்பியிருக்கும் அவளது தந்தை இன்னும் உயிரோடு இருப்பதை கண்டறிகிறாள். தந்தையின் மீதான நேசத்தால் துணிச்சலோடு நிழலுலகத்தில் பிரவேசிக்கிறாள். ஆனால், வேறு சில காரணங்களால் அந்த கொடூர உலகத்திலிருந்து அவள் விலக முயற்சிக்கும்போது, பொறியில் சிக்கியதாய் உணர்கிறாள்.

அலைஸ் வாழ்க்கையின் கடந்த மற்றும் நிகழ் காலத்தில் நடந்தேறும் மர்மங்கள் என்ன, மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு அவள் திரும்பினாளா என்பதுபோன்ற வினாக்களுக்கு விடையளிக்கிறது ‘பேங் பேங் பேபி’ (Bang Bang Baby) என்ற க்ரைம் வலைத்தொடர். எண்பதுகளின் பிரபல இசை மற்றும் குற்றச்செயல்பாடுகளின் பின்புலத்தோடு விரியும் இந்த வலைத்தொடரின் முதல் சீஸன் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது.

தி ஏபிசி மர்டர்ஸ்: ஆங்கில வலைத்தொடர்

தொடர் கொலைகளுக்கு ஆளாகும் நபர்களின் பெயர்களை ஆங்கில அகரவரிசைப்படி முன்னறிவித்த பின்னரே சம்பவங்கள் சடங்காக அரங்கேறுகின்றன. அந்த கொலையாளியை பிடிக்கவும், தொடர் கொலைகளைத் தடுக்கவும் அனுபவம் வாய்ந்த துப்பறிவாளர் களத்தில் இறங்குகிறார். 1930-களின் பின்னணியில் நடைபெறும் கதையை, தற்காலத் தலைமுறைக்கு உகந்த திரைக்கதையில் பதிவு செய்திருக்கிறார்கள்.

தி ஏபிசி மர்டர்ஸ்
தி ஏபிசி மர்டர்ஸ்

அகதா கிறிஸ்டி எழுதிய 'தி ஏபிசி மர்டர்ஸ்' (The ABC Murders) என்ற புதினத்தை, அதே தலைப்பிலான வலைத்தொடராக பிபிசி நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த வலைத்தொடரை தற்போது இந்தியாவில் ’சோனி லிவ்’ தளத்தில் ரசிக்கலாம்.

இதர ஓடிடி படைப்புகள்

குழந்தைகளின் கோடை விடுமுறை குதூகலத்தில் பங்கெடுக்கும் ’சாமுராய் ராபிட்: தி உஸாகி க்ரானிக்ள்ஸ்’ (Samurai Rabbit: The Usagi Chronicles) மற்றும் அனைத்து வயதினருக்குமான அறிவியல் புனைவு ஃபான்டஸி கதையான ’பபிள்’ (Bubble) ஆகிய ஜப்பானிய வலைத்தொடர்களை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ரசிக்கலாம்.

பபிள்
பபிள்

ஊழலில் திளைத்திருக்கும் அரசியல்வாதிகள் குறித்து துப்பறிய ராஜாங்க அதிகாரி ஒருவர் மாறுவேடத்தில் கிளம்புகிறார். கணவரை பிரியத் தலைப்படும் பெண்ணொருத்தி அவருக்கு துணையாகிறாள். மன்னராட்சி காலத்து கொரியாவில் நடைபெறும் கதையை ’சீக்ரெட் ராயல் இன்ஸ்பெக்டர் & ஜோய்’ (Secret Royal Inspector & Joy) என்ற வலைத்தொடராக நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது.

திரையரங்கிலிருந்து ஓடிடிக்கு

மூன்ஃபால் (Moonfall): தனது சுற்றுவட்டப் பாதையிலிருந்து திடீரென விலகும் சந்திரனால், பூமிக்கு புதிய பேரழிவு அபாயம் ஏற்படுகிறது. நிலவை அலைக்கழிக்கும் மாய சக்தியிடமிருந்து அதனைக் காப்பாற்றுவதன் மூலம், பூமியையும் மனித குலத்தையும் காப்பாற்ற கிளம்பும் நாசா விஞ்ஞானிகளின் ஹாலிவுட் சாகசத்தை தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணலாம்.

மூன்ஃபால்
மூன்ஃபால்

‘கள்ளன் டி’சௌஸா’ (Kallan D'Souza): தங்க மனசு கொண்ட திருடனுக்கு ஊரில் பொறுப்பேற்கும் காவல்துறை அதிகாரியால் கெட்ட காலம் தொடங்குகிறது. அதன் பின்னரான திருடன் போலீஸ் விரட்டல் கதையை நகைச்சுவையாக விவரிக்கும் மலையாள திரைப்படத்தை ’மனோரமா மேக்ஸ்’ தளத்தில் காணலாம்.

மிஷன் இம்பாஸிபிள்
மிஷன் இம்பாஸிபிள்

’மிஷன் இம்பாஸிபிள்’ (Mishan Impossible): காவல்துறை அறிவித்திருக்கும் பரிசுத் தொகைக்கு ஆசைப்பட்டு, தலைமறைவு பயங்கரவாதியான தாவூத் இப்ராஹிமை பிடிப்பதற்காக வீட்டைவிட்டு வெளியேறும் 3 சிறுவர்கள் விபரீதத்தில் சிக்குகிறார்கள். குழந்தைக் கடத்தல் கும்பல் குறித்து துப்பறியும் பத்திரிகையாளர் தாப்ஸி பன்னு, இந்த சிறுவர்களின் பாதையில் இடறுவதும் அதன் பின்னரான களேபரங்களுமே ’மிஷன் இம்பாஸிபிள்’ திரைப்படம். ’ஏஜென்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா’ இயக்குநர் ஸ்வரூப் ஆர்எஸ்ஜே இயக்கத்திலான இந்த தெலுங்கு நகைச்சுவை த்ரில்லர் தற்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உள்ளது.

லக் டௌன் பி பாஸிடிவ்
லக் டௌன் பி பாஸிடிவ்

’லக் டௌன் பி பாசிடிவ்’ (Luck Down Be Positive): திருமணத்துக்காக குழுமிய உறவினர்கள் கரோனா ஊரடங்கு காரணமாக, கல்யாண வீட்டிலேயே டேரா போடுகிறார்கள். இந்த சந்தடியில் சிக்கித்தவிக்கும் இளஞ்ஜோடியின் காமெடி காதலைச் சித்தரிக்கும் மராத்தி திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in