ஓடிடி உலா: இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

பாகிஸ்தானிலிருந்து புதிய சூப்பர் ஹீரோ
ஓடிடி உலா: இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

மிஸ்.மார்வெல்: புதிய சூப்பர்ஹீரோ வலைத்தொடர்

அவெஞ்சர்களின் பரம விசிறியான கமலா கான் என்ற சிறுமிக்கு சூப்பர்ஹீரோக்கள் மற்றும் அவர்களின் சாகசங்கள் மீது கொள்ளைப் பிரியம். உள்ளூர அவளுக்கு ஒரு சூப்பர்ஹீரோவாகும் ஆவலும் துளிர்க்கிறது. அந்த வகையில் காஸ்மிக் சக்திகளை கவர்ந்து துடிப்பான இளம் அவெஞ்சராக உதயமாகிறாள் கமலா கான். இந்த வகையில் ’மிஸ்.மார்வெல்’ என்ற அடையாளத்துடன் புதிய சூப்பர்ஹீரோவின் உதயமும், அதனை எட்டுவதற்கான சாமானிய சிறுமியின் தொடக்க தடுமாற்றங்களும் கொண்டதே 6 அத்தியாயங்களை உள்ளடக்கிய மிஸ்.மார்வெல் வலைத்தொடர்.

மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களின் வரிசையில் புதிய சூப்பர்ஹீரோவாக ஓர் இஸ்லாமியர் அதிலும் பெண் இடம்பிடித்திருக்கிறார். டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தில் ஜூன் 8 அன்று தொடங்கி புதன் தோறும் வெளியாகும் மிஸ்.மார்வெல் அத்தியாயங்கள், ஜூலை 13-ல் நிறைவடைகின்றன. மிஸ்.மார்வெல் அவதாரமெடுக்கும் கமலா கான் வேடத்தில் பாகிஸ்தானில் பிறந்து கனடாவில் வளர்ந்த இமன் என்ற சிறுமி நடித்துள்ளார்.

பீக்கி பிளைண்டர்ஸ்: க்ரைம் வலைத்தொடர்

பெருந்தொற்று காலத்தில் ஓடிடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற வலைத்தொடர்களில் ஒன்று ’பீக்கி பிளைண்டர்ஸ்' (Peaky Blinders). முதல் உலகப்போரின் முடிவையொட்டி தொடங்கும் கதையில், இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பகுதியில் செயல்பட்ட கேங்ஸ்டர் குழுக்களின் பின்னணியில் கதை தொடங்குகிறது. அங்கே உருவெடுக்கும் ஒரு தாதா குடும்பத்தால் பரவும் குற்றச்செயல்களை முடிவுக்கு கொண்டுவர, அப்போது உள்துறை நிர்வாகத்தில் பொறுப்பேற்றிருந்த வின்ஸ்டன் சர்ச்சிலின் நேரடி பார்வையில், அதிரடியான காவல் உயரதிகாரி அங்கே அனுப்பப்படுகிறார்.

உழைக்கும் மக்கள் மீதான கரிசனமும், அவர்களை முடக்கும் பாசிச அதிகாரமும் ஒருசேர பரவிய காலகட்டம் அது. அடையாளச் சிக்கலுக்கும் அழித்தொழிப்புக்கும் ஆளாகும் மக்களிடமிருந்து வெளிப்படும் சீற்றங்கள், அவர்கள் தரப்பின் நியாயங்கள் ஆகியவை பார்வையாளர்களின் நிகழ்காலத்தையும் உரசிச் சென்றதில் ’பீக்கி பிளைண்டர்ஸ்’ கூடுதல் கவனம் பெற்றது. தற்போதைய ஆறாவது சீஸனுடன் நிறைவுறும் இந்த நெட்ஃப்ளிக்ஸ் வலைத்தொடரின் தொடர்ச்சியாக, ஸ்பின் ஆஃப் திரைப்படம் ஒன்றும் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது.

தி புரோக்கன் நியூஸ்: இந்தி வலைத்தொடர்

24X7 லைவ் டிவி சானல்களின் யுகத்தில், செய்திகளை முந்தித் தருகிறோம் என்ற பெயரில் வரம்பு மீறுவதும், டிஆர்பி மோகத்தில் ஊடக அறத்தை பலியிடுவதும் சர்வ சாதாரணமாகி வருகிறது. அப்படியான போட்டியில் 2 முன்னணி செய்தி சானல்களின் பின்னணியில், வித்தியாசமான வலைத்தொடர் அனுபவத்தை வழங்குகிறது ’தி புரோக்கன் நியூஸ்’. பிபிசி தயாரிப்பாக ’பிரஸ்’ என்ற தலைப்பில் வெளியான ஆங்கிலத் தொடரின் இந்தி தழுவல் இது.

ஒரே அடுக்ககத்தின் வெவ்வேறு தளங்களில் அமைந்திருக்கும் அவாஸ் பாரதி, ஜோஷ் 24X7 என்ற 2 சானல்களின் அலுவலகங்களில் கதை சுழல்கிறது. ஒரு சானல் ஊடக அறம் பேண, மற்றொன்று பரபரப்புகளை கிளப்பிவிட்டு ஆதாயம் அடையத் துடிக்கிறது. அப்படி செய்திகளை முந்தித் தரும் போட்டியில் விபரீதங்களுக்கும் வாய்ப்பாகின்றன. மேலும், ஊடகங்களின் உரசலைப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்வாதிகள் முதல் பரிதவிக்கும் குடிமகனின் பாடுகள் வரை வலைத்தொடர் பதிவு செய்ய முயல்கிறது. ஜீ5 தளத்தில் வெளியாகியிருக்கும் ’தி புரோக்கன் நியூஸ்’ வலைத்தொடரை தமிழிலும் ரசிக்கலாம்.

அர்த்: இந்தி திரைப்படம்

சாமானியன் ஒருவன் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தில் உழல்கிறான். நாடக பின்புலத்தில் அனுபவம் பெற்ற அவன், பாலிவுட் கனவுத் தொழிற்சாலையான மும்பைக்கு பயணப்படுகிறான். அங்கே வெள்ளித்திரைக்கான வாய்ப்புகள் தேடி பரிதவிக்கிறான். குடும்பத்தின் வயிற்றுப்பாட்டுக்காக கூலியாகவும் உழைக்கிறான். எதிர்பாரா அவதாரமாக திருநங்கையாகவும் உருவெடுக்கிறான். இவற்றின் வாயிலாக அவனது திரைப்பட கனவு ஈடேறியதா, காத்திருந்த சவால்களை முறியடித்தானா என்பதே ’அர்த்’ (Arth) கதை. சினிமா கனவில் அலையும் கணக்கற்றவர்களின் அவதிகளை பதிவு செய்வதோடு, மூன்றாம் பாலினத்தவர்களின் உலகத்திலும் அர்த் ஊடுருவுகிறது. அவர்களை சித்தரித்த வகையிலும் பேசு பொருளாகி இருக்கும் அர்த் இந்தி திரைப்படத்தை ஜீ 5 தளத்தில் காணலாம்.

இன்டிமேசி: ஸ்பானிஷ் வலைத்தொடர்

வளரும் பெண் அரசியல்வாதியின் வாழ்க்கையை எதிர்பாராது வெளியாகும் அவரது அந்தரங்க வீடியோ ஒன்று புரட்டிப்போடுகிறது. அந்தரங்கத்தை அம்பலத்தில் ஏற்றும் இம்மாதிரியான குதர்க்க நோக்கங்களுக்கு பெண்கள் மட்டுமே இரையாவது, பொதுப்புத்தியில் பதிந்திருக்கும் பெண்களுக்கு எதிரான மனப்பான்மை ஆகியவற்றை ஸ்பானிஷ் வலைத்தொடரான ’இன்டிமேசி’ கேள்விக்குள்ளாக்குகிறது. இப்படி பாதிக்கப்பட்ட 4 பெண்கள் ஒன்று சேர்வதும், தங்களது அவலம் போக்கப் போராடுவதும், அதற்காக மறைந்திருக்கும் மர்மங்களை வெளிப்படுத்துவதுமே இந்த வலைத்தொடரின் கதை. ‘மனி ஹெய்ஸ்ட்’ போன்ற பிரபல ஸ்பானிஷ் தொடர்களின் நட்சத்திரங்கள், பெண்மையத்தில் தோய்த்த மர்ம கதையோட்டம் என நெட்ஃப்ளிக்ஸில் வெளியான இன்டிமேசி சுவாரசியம் சேர்க்கிறது.

இதர நேரடி ஓடிடி படைப்புகள்

சைபர் உலகின் ஏமாளிகளை குறிவைத்து அரங்கேறும் செப்பிடு வித்தைகளை அம்பலப்படுத்தும் ’சைபர்வார்’ (CyberVaar), ராணுவ புலனாய்வில் தீரத்துடன் வேகம் காட்டும் பெண் அதிகாரியின் சாகங்கள் அடங்கிய ’கோட் எம்’ (Code M) ஆகிய இந்தி வலைத்தொடர்களை வூட் செலக்ட் தளத்தில் காணலாம். சிங்கிளாக பங்கேற்று ஜோடியுடன் மிங்கிளாகும் நிஜமான வாய்ப்பை வழங்கும் ’டெம்ப்டேசன் ஐலேண்ட்’ (Temptation Island) ரியாலிட்டி தொடரின் மூன்றாவது சீஸனும் இதே தளத்தில் வெளியாகி உள்ளது.

மேற்கு வங்கத்தின் அகதிகள் உலகில் ஊடுருவும் போதை மற்றும் பிரிவினைவாதத்தின் பின்னணியிலான ’ரெஃப்யூஜி’ (Refugee) என்ற வங்காள மொழி க்ரைம் வலைத்தொடரை ஹோய்சோய் தளத்தில் காணலாம். தந்தையைத் தேடிப் பயணப்படும் இளம்பெண் எதிர்கொள்ளும் மர்மங்களூடே விரியும் ’கின்னரசனி’ (kinnerasani) தெலுங்கு திரைப்படம் ஜீ5 தளத்திலும், இன்னொரு த்ரில்லரான ‘இன்னலே வரே’ (Innale Vare) என்ற மலையாள திரைப்படம் சோனி லிவ் தளத்திலும் வெளியாகி உள்ளன.

திரையரங்கிலிருந்து ஓடிடிக்கு..

அண்மையில் திரையரங்குகளில் வெளியான தமிழ் திரைப்படங்களில், ஜி.வி.பிராகாஷ்குமார் நடித்த ’ஐங்கரன்’ ஆஹா தளத்திலும், சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ நெட்ஃப்ளிக்ஸிலும் அடைக்கலமாகி உள்ளன. அமெரிக்க ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான ’ஹஸ்டில்’ (Hustle) நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உள்ளது.

மலையாள திரைப்படங்களில் ’பத்ரோசின்டே படப்புகள்’ (Pathrosinte Padappukal) நகைச்சுவை திரைப்படத்தை ஜீ5 தளத்திலும், ’ட்வெண்டி ஒன் கிராம்ஸ்’ (Twenty One gms) என்ற த்ரில்லரை டிஸ்னி+ஹாட்ஸ்டாரிலும் காணலாம்.

ரன்வீர் சிங், ஷாலினி பாண்டே நடித்த (Jayeshbhai Jordaar) இந்தி திரைப்படம், பெருந்தொற்று முடக்க காலத்தின் குடும்ப களேபரங்களை உள்ளடக்கிய ஜோ&ஜோ (Jo&Jo) என்ற மலையாள நகைச்சுவை திரைப்படம் ஆகியவற்றை அமேசான் ப்ரைம் வீடியோவில் காணலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in