ஓ.டி.டி உலா: ஏமாற்றாத மலையாள ‘அந்தாதுன்’

ஓ.டி.டி உலா:
ஏமாற்றாத மலையாள ‘அந்தாதுன்’

பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியடைந்த ‘அந்தாதுன்’, பல்வேறு மொழிகளில் அதிகாரபூர்வமாக மறு ஆக்கம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வரிசையில் மலையாளப் பதிப்பாக அண்மையில் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி இருக்கிறது ‘ப்ரமம்’.

தனிப்பட்ட காரணங்களுக்காக பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக உலவும் பியானோ இசைக்கலைஞன் ஒருவன், படுகொலை ஒன்றின் முக்கிய சாட்சியாகிறான். அவன் நிஜத்தில் பார்வையிழந்தவன் அல்ல என்பது கொலையாளிகளுக்குத் தெரியவரும்போது, இசைக் கலைஞனின் பார்வை முதல் உயிர் வரை பறிக்கத் தலைப்படுகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பி ஓடுபவன் ஒரு கட்டத்தில் எப்படி எதிர்வினையாற்றுகிறான் என்பதே ‘அந்தாதுன்’ படத்தின் கதை. மிகச்சில மாற்றங்கள் தவிர்த்து காட்சி, வசனம் மாறாது அப்படியே இந்தி மூலத்தை மறு ஆக்கம் செய்திருக்கிறது மலையாள ‘ப்ரமம்’. அப்படியும் ஒரு தனி திரைப்படத்துக்கான முழுமையைத் தர முயன்ற வகையிலும் ‘ப்ரமம்’ ரசிக்க வைக்கிறது.

ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடிப்பில் இந்தியில் ஹிட்டான ‘அந்தாதுன்’ திரைப்படம், பிளாக் காமெடி க்ரைம் த்ரில்லர் என கலவையான வகைமையில் ரசிகர்களைக் கட்டிப்போட்டதுடன் வசூல் மழையிலும் நனைந்தது. ‘தி பியானோ ட்யூனர்’ என்ற பிரெஞ்சு குறும்படத்தின் பாதிப்பு இருந்தபோதும் தனித்தன்மையுடன் ‘அந்தாதுன்’ திரைப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார். சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என 3 தேசிய விருதுகளை ‘அந்தாதுன்’ அள்ளியது. அத்திரைப்படம் வெளியாகி 3 வருடங்களுக்குப் பின்னரும் ஒவ்வொரு மொழியாக மறு ஆக்கம் செய்யப்படுவதே, அதற்கு சாட்சி.

அண்மையில் தெலுங்கு மறு ஆக்கமாக நிதின், தமன்னா நடிப்பில் ‘மேஸ்ட்ரோ’ திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியானது. தமிழிலும் ‘அந்தகன்’ என்ற தலைப்பில் பிரசாந்த் நடிக்க தயாராகி வருகிறது.

‘அந்தாதுன்’ திரைப்படம் வெறும் க்ரைம் திரில்லர் பொழுதுபோக்கு மட்டுமல்ல. மூன்றாம் நபர்களால் நாம் எப்போதும் கண்காணிக்கப்படுகிறோம் என்ற உண்மை, வேட்டையாடுபவருக்கும் அவர் துரத்தும் இரைக்கும் இடையிலான போராட்டம் உள்ளிட்ட மிகவும் நுணுக்கமான செய்திகளை உள்ளடக்கிய படைப்பு அது. எனவே, மாற்றம் ஏதுமின்றி அப்படியே மூலப் பிரதியை எடுத்தாள்கிறது ‘ப்ரமம்’. முயலுக்கு பதில் காட்டுப் பன்றி, ஆட்டோவின் பின்னே நயன்தாரா படம் என மலையாள மண்ணுக்கான ஒரு சில மாற்றங்களும் அர்த்தம் பொதிந்தவையாக ரசிக்கவைக்கின்றன.

ரவி கே.சந்திரனின் இயக்கத்தைவிட, அவரது ஒளிப்பதிவு ‘அந்தாதுனி’லிருந்து மலையாளத் திரைப்படத்தை வேறுபடுத்தி தருகிறது. அவரது பிரத்யேக வைட் ஆங்கிள் காட்சிகள், கதைக்களமான கொச்சியின் அழகு ஆகியவை ‘ப்ரமம்’ படத்தில் ரசனையாகப் பதிவாகி இருக்கின்றன. பார்வையற்ற பியானோ கலைஞராக பிருத்விராஜ். ஆயுஷ்மானின் இளமையில் சற்று மட்டு என்றபோதும் குறைவற்ற நடிப்பைத் தந்திருக்கிறார் பிருத்விராஜ். தபு நடித்த சவாலான எதிர்மறை கதாபாத்திரத்தில் மம்தா மோகன்தாஸ். தொடக்கத்தில் தடுமாறுவதாகத் தோன்றினாலும் கருநிழல் படியும் சின்னச்சின்ன பார்வைகளில் சமாளித்துவிடுகிறார். சிறிதும் பெரிதுமாய் நிறைய கதாபாத்திரங்கள் ‘அந்தாதுன்’ கதைக்கு அவசியம். ராஷி கன்னா, ’ஒருதலை ராகம்’ சங்கர் என கச்சிதமான நடிகர்களைக் கொண்டு ‘ப்ரமம்’ பூர்த்தி செய்திருக்கிறது. புஜபல போலீஸ்காரராக உன்னி முகுந்தன் சரியான தேர்வு என்ற போதும் சித்தரிப்பில் கோட்டை விட்டிருக்கிறார்கள்.

‘அந்தாதுன்’ பார்த்தவர்களுக்கு கதையின் திருப்பங்கள் அத்துப்படி என்பதால், விறுவிறுப்பு குறைந்திருக்கும். மற்றபடி மூலத் திரைப்படத்தைப் பார்க்காதவர்களுக்கு ‘ப்ரமம்’ சுவாரசியமான அனுபவங்களைத் தர காத்திருக்கிறது.

கொல்லும் குற்றவுணர்வு

குற்றவுணர்ச்சியில் தவிப்பவன், ஒற்றை இரவில் செவிமெடுக்கும் அழைப்புகள் அவன் வாழ்க்கையை தலைகீழாய் மாற்றிப்போடுவதே ‘தி கில்ட்டி’ (The Guilty) என்ற அமெரிக்கத் திரைப்படம்! க்ரைம் த்ரில்லரான இந்தத் திரைப்படம் அண்மையில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது.

2018-ல் இதே தலைப்பில் வெளியான டச்சு திரைப்படத்தின் அமெரிக்க மறு ஆக்கமே ‘தி கில்ட்டி’. ஜாகோப் பெஞ்சமின் கில்லென்ஹால் நடிப்பில், அன்டோயின் புகுவா தயாரித்து இயக்கியுள்ளார். அமெரிக்காவில் பெருந்தொற்றின் முதல் அலை உச்சத்திலிருந்தபோது எடுக்கப்பட்ட படம் என்பதால், அதற்கு உவப்பான திரைக்கதையை 4 சுவர்களுக்குள் நகர்வதாக முடித்திருக்கிறார்கள். பெரும்பாலான கதாபாத்திரங்களின் சித்தரிப்பும், முழுக் கதையும் குரல்களின் வழியாகவே விரிகின்றன. ஒரு நாவலின் வாசிப்பனுபவத்தில் வரிகளுக்கு இடையே விரியும் சிலாகிப்பை, இந்தத் திரைப்படம் குரல்களுக்கு இடையே கடத்த முயல்கிறது.

லாஸ் ஏஞ்சலீஸ் காவல் துறையில் ‘911’ அவசரகால அழைப்புகளைச் செவிமெடுக்கும் அலுவலராகப் பணியாற்றுபவர் ஜோ. அன்றைய தினத்தின் இரவுப் பணியைத் தீவிரமான மன அழுத்தத்தின் இடையே தொடங்குகிறார். மண வாழ்க்கை, பணியனுபவம் இரண்டிலும் அண்மையில் உடைந்துபோய், அவற்றிலிருந்து மீள்வதற்காகத் தவித்துக்கொண்டிருப்பவர். விடிந்தால் மிச்ச வாழ்க்கையைத் தீர்மானிக்கும் நீதிமன்ற வழக்கொன்றில் வேறு ஆஜராக வேண்டும். மேற்படி அழுத்தங்களின் மத்தியில் நள்ளிரவுப் பணியின் முதல் அழைப்பே இருக்கை விளிம்புக்குத் தள்ளுகிறது.

கடத்தப்பட்டதாக அறியப்படும் எமிலி என்ற பெண் ஓடும் காரிலிருந்து அழைக்கும்போது, தன்னாலான உதவிகளை ஜோ ஒருங்கிணைக்கிறார். தேவையைப் பொறுத்து அலுவல் எல்லையைத் தாண்டியும் நண்பர்கள் மூலமும் அவளுக்கு உதவ முயல்கிறார். ஆனபோதும் அவை மென்மேலும் சிக்கல்களைக் கூட்டுவதன் விநோதம் பிடிபடாது தவிக்கிறார்.

அலுவல் நிமித்தம் அன்றாடம் பழகிய அழைப்புகளில் ஒன்றாகத் தொடங்கிய அந்த எமிலி பிரச்சினையின் முழுப் பரிமாணம் வெளிப்படும்போது, தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனக்கான உண்மையைக் கண்டடைகிறார் ஜோ. விடியும்போது காத்திருக்கும் நீதிமன்ற வழக்கையொட்டி தனக்குள்ளும் விடியலை அவர் கண்டடைகிறார்.

காவல் அதிகாரி ஜோ பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜாகோபைச் சுற்றியே சுழலும் கேமராவில், முழுத் திரைப்படமும் நீள்கிறது. ஆனபோதும் அவர் சந்திக்கும் அழைப்புகளில் கசியும் குரல்கள், அவற்றில் ஒளிந்திருக்கும் உண்மைகள் ஆகியவை ஜாகோப்புடன் பார்வையாளரையும் தவிப்பில் ஆழ்த்துகின்றன. கடைசிக் காட்சியில் கழிப்பறையில் உடைந்து அழும்வரை கதையோட்டத்தை மெல்லிய நூலாய் சுற்றியிருக்கும் மர்மம் விலகுவதில்லை. ‘உடைந்துபோனவர்களே அம்மாதிரியானவர்களைக் காப்பாற்றுவார்கள்’ என்று ஓரிடத்தில் காவல் உயரதிகாரி சொல்வார். இந்த ஒற்றை வரி கதைக்கும் அடித்தளமாகத் தாங்குகிறது.

தொலைபேசி அழைப்பின் மறுமுனையில் மாறும் குரல்களே காட்சி அனுபவத்துக்கான நடிப்பையும் வழங்குகின்றன. அதற்கேற்ப ஆழமான வசனங்கள், துல்லியமான குரல் ஸ்தாயிக்கள் கதைக்கு விறுவிறுப்பூட்டுகின்றன. ரசனையான பின்னணி இசையும் அவ்வப்போது அதில் பொதிந்திருக்கும் அமைதியும் திரைக்கதையின் ஓட்டத்துக்கு அர்த்தம் சேர்க்கின்றன. தொடக்கத்தின் 15 நிமிடங்களைக் கடந்துவிட்டால் படம் முடியும்வரை ஒரே அமர்வில் பார்க்கத் தூண்டும் மனோதத்துவ திரில்லராக அமைந்திருக்கிறது ‘தி கில்ட்டி’.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in