ஓடிடி உலா: காதலோடு வாழ்தல் பெரிது!

ஓடிடி உலா: 
காதலோடு வாழ்தல் பெரிது!

பெரிய, சிறிய திரைகளில் காணக்கிடைக்கும் பெரும்பாலான காதல் கதைகள், இயல்புக்கு மீறியதாகவும் மிகைப்படுத்தப்பட்டதாகவுமே இருக்கும். அல்லது எதார்த்த தெறிப்பென்ற பெயரில் படுசீரியசான கதைகள் பார்வையாளர்களைப் படுத்தியெடுக்கும். இயல்பான காதலும், நகைச்சுவையும் கலந்த படைப்புகள் அரிது. அந்தக் குறையை அண்மையில் போக்கிய வலைத்தொடர் ’லிட்டில் திங்ஸ்’.

இனிக்கும் காதல் பாடங்கள்

காதல் மற்றும் காதல் கொண்டவர்களின் வெற்றி என்பது இருவரும் சேர்ந்து வாழ்வதிலும் ஜெயிப்பதிலும் மட்டுமல்ல, அவரவர் தனிப்பட்ட வளர்ச்சியிலும் அது அடங்கியிருப்பதை வெவ்வேறு கோணங்களில் ’லிட்டில் திங்ஸ்’ வலைத்தொடரின் அத்தியாயங்கள் வெளிப்படுத்துகின்றன. பரஸ்பரம் உணர்வுகளை நசுக்காது மதித்தல், நயத்துடன் குறைகளைச் சுட்டிக்காட்டுதல், சில குறைகளை அதன் இயல்புடன் அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் என மண வாழ்வின் முன்னும் பின்னுமாகத் தவிக்கும் ஜோடிகளுக்கான வாழ்க்கைப் பாடங்களை, நகைச்சுவை இனிப்பு தடவி பரிமாறுகிறது ’லிட்டில் திங்ஸ்’.

யூடியூபில் தொடக்கம்

‘டைஸ் மீடியா’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் யூடியூப் சேனலில், ‘லிட்டில் திங்ஸ்’ முதலில் வெளியானது. ஒரு வாரத்திலேயே அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது. தொடரின் பிரபல்யத்தைப் பார்த்த நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அதை வாரிக்கொண்டது. அதுவரை வெளியான அத்தியாயங்களை சீஸன் -1 எனத் தொகுத்து வெளியிட்டது. அடுத்தடுத்த சீஸன்களைத் தனக்கே உரிய தரம் மற்றும் தாராளத்துடன் தயாரித்தது. அந்த வகையில் ‘லிட்டில் திங்’ஸின் 3 சீஸன்கள் வெளியாகி இருக்கின்றன. அண்மையில் வெளியாகி இருப்பது வலைத்தொடரின் 4-வது மற்றும் நிறைவு சீஸனாகும்.

துருவ்-காவ்யா

மும்பையைச் சேர்ந்த துருவ் - காவ்யா என்ற இளம் ஜோடி நவயுகக் காதல் வாழ்க்கையில் சேர்கிறார்கள். அதாவது படிப்பு, வேலை, புத்தி தெளிவு என சுயம் நிரம்பப்பெற்ற இருவரும், பெற்றோரின் சம்மதத்தோடு சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறார்கள். அப்படியான அவர்களின் அன்றாடங்களின் வழியே இருவருக்கும் இடையிலான கொஞ்சும் காதலையும், மிஞ்சும் மோதலையும் காமெடியாகக் கதை அணுகுகிறது. அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் இளம் ஜோடிக்கு இடையிலான உணர்வுபூர்வமான பிணைப்பை அழுத்தமாகப் பதிவு செய்யும். ஒரு சிறுகதைக்கான தொனியுடன் இடறும் சிறு சம்பவம், அதைச் சுற்றி எழும் கேள்விகள் மற்றும் பதிலுக்கான தேடலுடன் காட்சிகள் விரியும். சுப முடிவுகள் என்றில்லாது கேள்வியுடனும் பல அத்தியாயங்கள் தொக்கி நிற்கும். விடைகளைப் பார்வையாளர்களின் தெளிவுக்கேற்ப விடுவித்துக்கொள்ளலாம்.

துள்ளுவதே இளமை

துருவ்-காவ்யா ஜோடியின் இருபதுகளில் சீஸன்-1 முதல் சீஸன் கதைகள் தொடங்கும். இளமையின் தாபம், வேகம், கோபம், சீற்றம் எல்லாமே இந்தக் கதைகளில் கலந்திருக்கும். காவ்யாவாக நடித்திருக்கும் மிதிலா பால்கர் தனது வசீகரப் புன்னகையாலும் குறும்புகள் தெறிக்கும் பாவனைகளிலும் காதல் ரசம் சொட்டுகிறார். அதே சமயம் தனது சுயத்துக்கான தேடல்களில் சாடுவதிலும், விடை காண்பதிலும் வேறாக வளைய வரும் பாத்திரம் அவருக்கு.

தொடரின் கதைகளை உருவாக்கிய துருவ் சேகல், காவ்யாவின் காதலன் துருவ் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். சராசரி தோற்றம், மத்திய வர்க்கத்தின் ஊசலாடும் மனோபாவம், பணியிடத்தில் எதிர்கொள்ளும் தடுமாற்றங்கள் என சேகலுக்குக் கலவையான பாத்திரம். தொடக்கத்தில் தடுமாறி பின்னர் ஒருவழியாக ஒட்டிக்கொள்வார். இருவரும் சேர்ந்து நடத்தும் காதலும், காமெடியுமான அத்தியாயங்கள் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றவை. அடுத்த சீஸன்களில் அந்த இளமையின் சுரத்து சற்றே குறைந்தாலும் உறவின் உன்னதம் பாராட்டும் காட்சிகளும் அவற்றின் பரிமாணங்களும் கதையை அடுத்த தளங்களுக்குக் கொண்டு செல்லத் தவறுவதில்லை.

காதல் காட்டும் தேடல்கள்

தற்போது வெளியாகி இருக்கும் நிறைவும், நான்காவதுமான சீஸனில் காவ்யா தனது 30-களில் அடியெடுத்து வைக்கிறாள். அதற்கேற்ப கதையும் சற்று முதிர்ச்சியாக நகர்கிறது. பின்லாந்தில் வேலை பார்க்கும் இடத்தில் துயருறும் துருவ்வும், நாக்பூரில் பெற்றோருடன் வசிக்கத் தலைப்பட்ட காவ்யாவும் ஒரு வருடத்துக்கும் மேலான பிரிவின் முடிவில் சந்திக்கிறார்கள். நீண்ட பிரிவுக்குப் பின்னரான சந்திப்பைக் கொண்டாட கடவுளர் தேசமான கேரளாவைத் தெரிவு செய்கிறார்கள். ஆலப்புழாவில் தங்கி கேரளத்தில் இயற்கை எழில் கொஞ்சும் தலங்களை தரிசிக்கிறார்கள். வெளித்தேடலின் மத்தியில் அவ்வப்போது அகத்தேடலுக்கும் ஆளாகிறார்கள். 3-வது எபிசோடில் காவ்யாவின் 30-வது பிறந்தநாளன்று, அவளைத் தவிக்கவிட்டு துருவ் தனது பணிச்சுமையில் தொலைந்துபோகிறான்.

இங்கே தனிமையில் தடுமாறும் காவ்யா கடற்கரையிலும், ’மனிதப் புத்தகங்கள்’ மத்தியிலும் தன்னைக் கண்டெடுப்பாள். ஆண்-பெண் பரஸ்பரப் பிணைப்போடு தத்தம் ஆதம் சுத்திக்கான சுயத் தேடல்களும் காதலின் பாதையில் இப்படி இடறுகின்றன.

நிறைவு சீஸன்

முன்னைப் போல பொய்க் கோபம், பொங்கும் சண்டை, சமாதான படலங்கள் இல்லாது இருவரும் பக்குவமாக அனைத்தையும் ஆராய்கிறார்கள். பிரிவு தங்கள் உறவைப் புடம் போட்டிருப்பதை உணர்கிறார்கள். அதையொட்டி இருவரும் தங்களது எதிர்காலம், குடும்பம், குழந்தை குறித்தெல்லாம் யோசிக்கத் தலைப்படுகிறார்கள். கேரளாவிலிருந்து மும்பைக்குத் திரும்பியதும் துருவ் - காவ்யா இடையே திருமண வாழ்வின் ப்ளஸ் - மைனஸ் விவாதங்கள் புதிய வடிவெடுக்கின்றன. எதிர்பாரா நிகழ்வொன்று இருவரையும் புரட்டிப்போடுகிறது. தொடர்ந்து துருவ் தனது பணி சார்ந்தும், காவ்யா தனது உடல் சார்ந்தும் சங்கடங்களை எதிர்கொள்கிறார்கள். இருவர் குடும்பத்துப் பெரியோரும் இளம் ஜோடியின் மணவாழ்க்கை குறித்து கலக்கிறார்கள்.

குறுக்கிடும் கேரள அழகு

கேரளத்தில் துருவ்-காவ்யா பயணப்படும் தலங்கள் அனைத்துமே கொள்ளை அழகு. மேகம் தவழும் பசிய மலைகள், தேயிலைத் தோட்டங்கள், பனி விலகாத ஏரிகள், அலைகள் தாலாட்டும் கடற்கரை என கேரள மண்ணின் இயற்கையழகு சொக்க வைக்கிறது. அதிலும் கனமழை, நிலச்சரிவு என தற்போது சிதிலமடைந்துள்ள கேரளாவின் பூரண அழகு பரிதவிக்கவும் வைக்கிறது. அந்த அழகினூடே பறவைப் பார்வையிலான காட்சிகள் வலைத்தொடரின் இதுவரையில்லாத பிரம்மாண்டத்தை உணர்த்துகின்றன. ஆனால், நான்கு சுவர்களுக்குள் கழிந்த முந்தைய அத்தியாயங்களின் சுவாரசியம், இந்தப் பிரம்மாண்டத்தில் அடிபட்டுப் போகிறது. கதையோட்டமும் அவை கடத்த வேண்டிய உணர்வோட்டமும் இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. குறிப்பாக, இளம் பார்வையாளர்களைப் பெரிதும் வசீகரித்த இளமை பொங்கும் காட்சிகளைத் தேட வேண்டியிருக்கிறது. பெரியவர்கள் புரிதலுக்கான ஓரிரு வசனங்களுக்கு அப்பால் ‘லிட்டில் திங்ஸ்’ 4-வது சீஸன் வறண்டிருக்கிறது.

4-வது சீஸனின் 8 அத்தியாயங்களில் தலா நான்கை, சுமித் அரோரா மற்றும் ருசிர் அருண் ஆகியோர் இயக்கி உள்ளனர். வழக்கம்போல பெரும்பாலான அத்தியாயங்களை துருவ் சேகல் எழுதியுள்ளார்.

இணையுடன் கைகோத்து தனிமையில் ரசிக்க வேண்டிய தொடர் ‘லிட்டில் திங்ஸ்’. ஆனால், அப்படி இணைந்து பார்ப்போர் இடையே பூசல்கள் கிளப்பவும் கதையோட்டத்தில் தரமான சம்பவங்கள் காத்திருக்கலாம். உஷார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in