ஓ.டி.டி உலா: கடவுள் பாதி, மிருகம் பாதி

பாப்லோ எஸ்கோபாரின் கதை உணர்த்தும் நீதி
ஓ.டி.டி உலா: கடவுள் பாதி, மிருகம் பாதி

சமூகத்தின் இருப்பும் மனிதர்களின் இருப்பும் ஒன்றையொன்று சார்ந்தவை. சமூகமும் மனிதர்களை விடுவதில்லை. மனிதனும் அதன் கோட்பாடுகளை மீறத் துணிவது இல்லை. மனிதர்களின் தேவை மட்டுமல்ல; சமூகத்தின் கோட்பாடுகளும் தேவைக்கு ஏற்ப தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. அந்த மாற்றங்களில் பல இயற்கையாக நடக்கின்றன, சில தனிமனிதரின் எழுச்சியால் நிகழ்கின்றன.

தனிமனிதரின் எழுச்சி பொதுச்சமூகத்தின் மேன்மைக்கு உரியதாக இல்லாமல், அவருடைய சுய தேவைக்கு உரியதாகவும், பொதுச்சமூகத்தின் அழிவுக்குக் காரணமானதாகவும் இருக்குமேயானால் என்ன நிகழும்? அந்த மனிதர் வேட்டையாடப்படுவார். ஹிட்லர் போன்ற தலைவர்களின் வீழ்ச்சி உணர்த்தும் சேதி இது. கொலம்பியாவில், அந்த நாட்டின் சட்ட திட்டங்களைத் தன்னுடைய நியாய தர்மத்துக்கு ஏற்ப வளைக்க முயன்ற பாப்லோ எஸ்கோபார் எனும் தனிமனிதரின் எழுச்சியும் வீழ்ச்சியுமே ‘நார்கோஸ்’ இணையத் தொடர்.

மக்கள் என் பக்கம்

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் 2015-ல் வெளியான இந்த இணையத்தொடர் ஒரு உண்மைக் கதையும்கூட. 1980-களில் கொகேய்ன் வர்த்தகத்தின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த பாப்லோ எஸ்கோபார் என்பவரின் வாழ்க்கை வரலாறு இது.

கொகேய்ன் வர்த்தகத்தில் ஈவு இரக்கமற்றவராகத் திகழ்ந்த பாப்லோ எஸ்கோபார், தனிப்பட்ட வாழ்க்கையில் அதற்கு நேரெதிரானவர். தன்னுடைய அன்னைக்கு நல்ல மகன், மனைவிக்கு நல்ல கணவர், குழந்தைகளுக்கு நல்ல தந்தை எனக் குடும்பத்தின் மீது அபரிமிதப் பிடிப்புள்ள மனிதராக வாழ்ந்தவர்.

கொகேய்னில் சம்பாதித்த பணத்தைப் பொதுமக்களுக்கு வாரி வழங்கியதோடு, அனைவருக்கும் இலவசமாக வீடும் கட்டிக்கொடுத்ததால், பொதுவெளியில் அவர் அவர் ஒரு ராபின்ஹூட். கொலம்பியாவில் பொதுமக்களால் மிகவும் கொண்டாடப்பட்ட ஆளுமையான அவருக்காக எந்நேரமும் உயிரைக் கொடுக்கப் பலர் தயாராக இருந்தனர். கொலம்பியாவின் அதிபராகும் வாய்ப்பு அவருக்கு மயிரிழையில் தவறிப்போனது எனும் செய்தி அவரது செல்வாக்கை உணர்த்தும்!

கோரத் தாண்டவம்

கைக்கு எட்டிய தொலைவிலிருந்த அதிபர் வாய்ப்பு அவரை விட்டு விலகிச் சென்ற ஏமாற்றத்தையும், அந்த நிகழ்வால் அவருக்கு ஏற்பட்ட பெருத்த அவமானத்தையும் வலியையும் துயரையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவருடைய பழிவாங்கும் உணர்வின் வீரியம் கொலம்பியாவை மட்டுமல்லாமல் அமெரிக்காவையும் நடுங்க வைத்தது.

எண்ணற்ற அரசியல் கொலைகள், குண்டுவெடிப்புகள், நடுவானில் விமானம் தகர்ப்பு என நீண்ட அவருடைய கோரத் தாண்டவம் ஏற்படுத்திய பேரழிவுகள், கொலம்பிய வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள். அந்தக் கொடிய போரில் இருபக்கமும் ஏற்பட்ட இழப்புகளுக்குப் பின்னர், அரசாங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, தானே அமைத்துக்கொண்ட சிறைச்சாலையில் பாப்லோ கைதியானார்.

பழிவாங்கும் படலம்

இதன் பின்னர் பாப்லோவின் கோபம் தணிந்தது. சிறையிலிருந்தபடி தன்னுடைய கொகேய்ன் வர்த்தகத்தை மட்டும் கவனித்துக்கொண்டார். நாட்டில் அமைதி நிலவியது. மக்கள் இயல்புநிலைக்குத் திரும்பினர். அரசாங்கம் பாப்லோ எஸ்கோபாரை மறந்து, நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தத் தொடங்கியது. கொலம்பியா மறந்தாலும், அமெரிக்கா எஸ்கோபாரை மறக்கவும் மன்னிக்கவும் தயாராகவில்லை. எஸ்கோபாரை வேட்டையாடத் துடித்தது. தன்னுடைய நாட்டில் கொகேய்ன் ஊடுருவலைத் தடுக்க முயலாமல், கொலம்பியா மண்ணில் கொகேய்ன் ஏற்றுமதியை நிறுத்த அமெரிக்கா முயன்றது.

தன்னுடைய சுயநலத்துக்காக, அந்நிய நாட்டில் மூக்கை நுழைக்கும் அமெரிக்காவின் இந்த அரசியலால், தொடக்கத்தில் எஸ்கோபாரிடம் மண்டியிட்ட கொலம்பிய அரசாங்கம் அவரை எதிர்க்கத் துணிந்தது. சிறையிலேயே அவரைத் தீர்த்துக்கட்டவும் முயன்றது. அந்தக் கொலை முயற்சியிலிருந்த தப்பித்த எஸ்கோபார், அதற்குப் பின்னர் ஆடிய வெறியாட்டம், கொலம்பியா அதுவரை பார்த்திராதது. அதிபர் மாளிகைக்கு அருகே அவர் நிகழ்த்திய வெடிகுண்டுத் தாக்குதல், அவரைச் சமூகத்தின் பொது எதிரியாக மாற்றியது. தீவிரவாதிகள் பட்டியலிலும் அவரை அது இணைத்தது.

பாப்லோவின் வீழ்ச்சி

இந்தக் காலகட்டத்தில், கொகேய்ன் வர்த்தகத்தில் அவருடைய எதிரிகளின் கை ஓங்கத் தொடங்கியது. ஒரு பக்கம் அமெரிக்கத் துணையுடன் முன்னேறும் கொலம்பிய அரசாங்கம், மறுபக்கம் அரசாங்கத்தின் உதவியுடன் சுற்றி வளைக்கும் எதிரிகள் என அவர் மீதான பிடி இறுகியது.

கோழி அடைகாப்பது போலத் தன்னுடைய குடும்பத்தை அதுவரை கூடவே வைத்துப் பாதுகாத்துவந்த அவர், முதல் முறையாகக் குடும்பத்தை வேறு நாட்டுக்கு அனுப்ப முடிவு செய்தார். ஜெர்மனிக்குச் சட்டப்படி அகதியாகச் சென்ற அவருடைய குடும்பம், அமெரிக்கா தந்த அழுத்தத்தால், மீண்டும் கொலம்பியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டது.

அமெரிக்காவின் ஆலோசனைபடி அவருடைய குடும்பத்தை பாப்லோவைப் பிடிப்பதற்கான தூண்டிலாகக் கொலம்பியா அரசாங்கம் பயன்படுத்தியது. அவரை நெருங்கவே முடியாமல் திணறிய அரசாங்கம், அவருடைய மனைவியின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டதன் மூலம் நெருங்கியது. வஞ்சகமாக அவரைச் சுட்டுக்கொன்றது.

பாப்லோவுக்குப் பின்னர்

மூன்று பாகங்கள் கொண்ட இந்தத் தொடரில், பாப்லோ எஸ்கோபாரின் வாழ்க்கை இரண்டாம் பாகத்தோடு முடிந்துவிடுகிறது. கொகேய்ன் வர்த்தகத்தில் நீடித்திருந்த பாப்லோவின் எதிரிகள் அமெரிக்காவால் எப்படி வேட்டையாடப்பட்டார்கள் என்பதே மூன்றாம் பாகம். 80-களின் பிற்பகுதியில் கொகேய்ன் கடத்தலில் ஈடுபட்ட முக்கியப் புள்ளிகளின் கசப்பான நிஜ வாழ்க்கைப் பக்கங்களையும், அரசியல் அவலங்களையும், காவல் துறையின் கொடூர மறுபக்கத்தையும், அமெரிக்காவின் அத்துமீறல்களையும் இந்தப் பாகம் தத்ரூபமாகப் பதிவு செய்திருக்கிறது.

அசாத்திய நடிப்பு

என்றோ இறந்துபோன எஸ்கோபாருக்கு மீண்டும் உயிர்கொடுத்து இந்தத் தொடரில் ரத்தமும் சதையுமாக உலவவிட்டு இருப்பதில் பெரும் பங்கு வாக்னர் மௌரா என்கிற உன்னத நடிகரையே சேரும். பாப்லோ எஸ்கோபார் பத்திரத்தில் நடித்திருக்கும் வாக்னர் மௌரா வெளிப்படுத்தி இருக்கும் உடல்மொழியும் நடிப்பும் அசாத்தியமானவை. பாய்ந்து, பாய்ந்து சண்டை போடாமல், தொண்டை கிழிய வசனம் பேசாமல், சன்னமான குரலில், மெதுவான நடையில் வாக்னர் மௌரா வெளிப்படுத்தும் உணர்வுகள் நம்மை மிகுந்த பதைபதைப்புக்கு உள்ளாக்குகின்றன.

கலைஞர்களின் பங்களிப்பு

இந்தத் தொடரின் திரைமொழி அலாதியானது. ஆவணப்படத்தின் மொழியைப் போன்றே இருக்கும் அது, இந்தத் தொடருக்குக் கூடுதல் நம்பகத்தன்மையை அளிக்கிறது. ரோட்ரிகோ அமரண்டே வழங்கியிருக்கும் பின்னணி இசையும் பாடல்களும் ஏற்படுத்தும் தாக்கம், அந்தத் தொடர் முடிந்த பின்னரும் நம்மோடு பயணிக்கிறது. திரைமொழியின் நம்பகத்தன்மையும், உன்னத ஒளிப்பதிவும், எட்டு இயக்குநர்களின் உழைப்பும் இந்தத் தொடரின் ஆக்க நேர்த்தியும் திரைப்படங்களை விஞ்சிய ஒன்றாக இதை மாற்றியிருக்கின்றன.

பாப்லோவின் மறுபக்கம்

அன்னையுடன் இருக்கும்போது ஒரு குழந்தையைப் போல் மாறும் பாப்லோவின் இயல்பும், மனைவியுடன் இருக்கும்போது அவரிடமிருந்து வெளிப்படும் அன்பும் பரிவும், குழந்தைகளிடம் பேசும்போது அவரிடமிருந்து வெளிப்படும் தாய்மையுணர்வும் தனிப்பட்ட வாழ்வில் அவர் எவ்வளவு மென்மையானவர் என்பதை உணர்த்துகின்றன.

ஒரு நள்ளிரவில் நிகழ்ந்த கொலைவெறித் தாக்குதலிலிருந்து மயிரிழையில் குடும்பத்தோடு தப்பித்து, புது மறைவிடத்தில் பதுங்கும்போது, குளிரில் நடுங்கும் மகளுக்காகப் பணக் கட்டுகளை எரித்து அந்த இடத்துக்கு வெப்பமூட்டும் காட்சியில் அவரிடம் வெளிப்படும் பரிதவிப்பும் அன்பும், எப்படி இத்தகைய மென்மையான, அன்பான மனிதரால் கொடூரக் கொலைகளை, வன்முறைகளை நிகழ்ந்த முடிந்தது என்கிற கேள்வியை எழுப்புகின்றன.

இறுதியில், எந்த மக்கள் அவருடைய இருப்பைக் கொண்டாடினார்களோ, அதே மக்கள் அவருடைய இறப்பையும் கொண்டாடினர். நாட்டின் அதிபராகும் கனவைக் கொண்டிருந்தவரின் இழப்பு அவருடைய குடும்பத்தோடு மட்டும் சுருங்கிப்போனது. ஒருவேளை அவர் அதிபராகப் பதவியேற்றிருந்தால், அவருடைய வாழ்க்கை மட்டுமல்ல; கொலம்பியாவின் வரலாறும் வேறு மாதிரி இருந்திருக்கக்கூடும். வரலாற்றை மாற்றி எழுதும் வல்லமை இங்கே யாருக்கு இருக்கிறது?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in