ஓடிடி-யில் ‘கனா காணும் காலங்கள்’ தொடரின் புது சீஸன்!

ஓடிடி-யில் ‘கனா காணும் காலங்கள்’ தொடரின் புது சீஸன்!

சமீபகாலமாக, தொலைக்காட்சியைத் தாண்டி ஓடிடி தளத்துக்கும் பார்வையாளர்கள் அதிகரித்திருக்கிறார்கள். இதையடுத்து, தமிழ் பார்வையாளர்களை ஓடிடி பக்கம் தக்கவைக்க வேண்டும் என்பதற்காகவே பிரத்யேகமாக 'பிக் பாஸ் - அல்டிமேட்' நிகழ்ச்சியைக் கொண்டு வந்தார்கள். அந்நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், புகழ்பெற்ற ‘கனா காணும் காலங்கள்' தொடரை நேரடியாகவே ஓடிடி-யில் ஒளிபரப்ப திட்டமிட்டு இருக்கிறார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் வெளியான தொடர்களில், ‘கனா காணும் காலங்கள்’ தொடருக்குத் தனி இடம் உண்டு. 2006-ல் ஒளிபரப்பான இந்தத் தொடர், பள்ளி கால மாணவர்களின் நட்பு, அவர்களின் குறும்பு, சேட்டைகள், காதல், சண்டை, ஆசிரியர் - மாணவர் உறவு என ஏராளமான அம்சங்களைக் கொண்டிருந்தது. 90'ஸ் கிட்ஸ்களில் பலருக்கும் இந்த தொடர் இன்று வரைக்குமே நாஸ்டாலஜியா நினைவுகள் என்பது குறிப்பிடத்தக்கது. ராகவி, ப்ளாக் பாண்டி, இர்ஃபான் என இந்த கதாப்பாத்திரத்தில் நடித்த பலரும் சமீபத்தில் ‘ரீயூனியன்’ செய்திருந்தார்கள்.

பள்ளிக் காலங்களைக் காட்சிப்படுத்திய ‘கனா காணும் காலங்கள்' குழு, அடுத்து கல்லூரி காலத்தையும் தொடராக்கியது. பள்ளிக் காலத்தில் நடித்தவர்களோடு இன்னும் சில புதுமுகங்கள் இணைய, அடுத்த சீஸனும் ரசிகர்களிடையே ஹிட் ஆனது.

இந்நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு இந்தத் தொடரின் அடுத்த சீஸனை வருகிற 22-ம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்ப இருக்கிறார்கள்.

புது சீஸன் என்பதால் தொடரின் கதைக்களம், சீரியலுக்கு பெரிதாகப் பரிச்சயமில்லாத சமூகவலைதளப் பிரபலங்கள் என அனைவருமே புது டீம். சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ‘கனா காணும் காலங்கள்' தொடருக்கான பள்ளிக்கூட செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.

மொத்தம் 130 எபிசோட்கள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் தொடரில் ‘கனா காணும் காலங்கள்' தொடரின் முந்தைய சீஸன்களின் சீனியரான இர்ஃபானும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் தொடரில் வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.