#பிக்பாஸ் அல்டிமேட்: ’ஜூலி எப்போதும் ஓவியா ஆக முடியாது’

எதிர்மறை விமர்சனங்களும் ஜூலியின் பதிலும்!
#பிக்பாஸ் அல்டிமேட்:
’ஜூலி எப்போதும் ஓவியா ஆக முடியாது’
ஜூலி

கடந்த ஐந்து வருடங்களாக தான் எதிர்கொண்டு வரும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்தும், அவற்றை தான் எதிர்கொண்ட விதம் பற்றியும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி மனம் திறந்துள்ளார்.

பிக்பாஸ் ஓடிடியின் தமிழ் வடிவமான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியில் 24x7 என ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய 5 சீசன்களிலும் பங்கு பெற்ற, பார்வையாளர்களுக்கு திருப்தியளித்த, பிக்பாஸ் விளையாட்டை சரியாக புரிந்து கொண்ட போட்டியாளர்களே இந்த சீசனில் களம் இறக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் முதல் சீசனில் இருந்து ஜூலியும் வந்திருக்கிறார். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் உள்ளே நுழைந்த முதல் வாரத்தில், தங்கள் வாழ்க்கையில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் மற்றும் தடைகள், இவற்றை எல்லாம் எதிர்கொண்டு மீண்ட விவரங்கள்.. என்பது மாதிரியான தங்கள் சொந்த கதையை சக போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பகிர்ந்து கொள்வார்கள்.

ஆனால், இப்போது அந்த வாய்ப்பு முந்தைய சீசன்களில் இடம்பெற்றுவிட்டதால், அதையே பத்திரிக்கையாளர்கள் Vs பிரபலம் டாஸ்க் வாயிலாக தற்போது கொடுத்திருக்கிறார்கள். இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள், பத்திரிக்கையாளர் அணி மற்றும் பிரபலங்கள் அணி என இரண்டாக பிரிய வேண்டும். ஒவ்வொரு பிரபலமாக, பத்திரிக்கையாளர்கள் எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். பிக்பாஸ் விளையாட்டின் சூட்சுமம் தெரிந்தவர்கள் என்பதால், போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இறங்கி ஆட ஆரம்பித்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த அளவிற்கு ஒவ்வொருவரின் கேள்விகளும், பிரபலங்களாக அமர்ந்திருந்த போட்டியாளர்களது பிக்பாஸ் சீசனை தொடர்புபடுத்தியும், அதன் பிறகு அவர்கள் வாழ்வில் நடந்தது, தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டில் அவர்களின் செயல்பாடு குறித்தெல்லாம் கிளறும் வகையில் அமைந்திருந்தன. இந்த வகையில் ஜூலியும் ஒரு பிரபலமாக மாறி, ’பத்திரிக்கையாளர்களின்’ கேள்விகளை எதிர்கொண்டார்.

’முதல் சீசனில் ஜூலியாக இருந்தவர் தற்போது ஓவியா போல நடக்க முயல்கிறாரோ’ என்ற கேள்விக்கு, 'ஒரே ஓவியா தான். நானும் ஜூலியாகதான் இருக்கிறேன்’ என்றார். ’பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு உங்களை சூழந்த நெகட்டிவ் பப்ளிசிட்டியை எப்படி எதிர்கொண்டு கடந்து வந்தீர்கள்’ என்ற கேள்விக்கு ’நாம் எப்போதுமே நமக்காகவே வாழ வேண்டும். நல்ல விமர்சனங்களை வரவேற்கலாம். மற்றபடி என் மீது அன்பு வைத்தவர்களுக்காகவும், என் குடும்பத்திற்காகவும் இதை எல்லாம் சமாளித்தேன்’ என்றார்.

மேலும் கூறும்போது, ‘ஜல்லிக்கட்டு சமயத்தில் எனக்கு எவ்வளவு ஆதரவு இருந்ததோ, அதற்கு நிகரான எதிர்மறை பார்வை பிக்பாஸ் நிகழ்ச்சியால் எனக்கு வாய்த்தது. என்னை மட்டுமல்ல; என் குடும்பத்தையும், தாத்தா பாட்டி வரைக்குமே திட்டினார்கள். தொடர்ந்து ஜெயித்துக்கொண்டே இருப்பவனை விடவும், கீழே விழுந்து எழுபவனை உலகம் இன்னும் மதிக்கும். சிறிய பிரச்சனைகளுக்காக தற்கொலை வரை யோசித்தவர்களும் உண்டு. ஆனால் இவ்வளவு எதிர்ப்பையும் தாண்டி நான் இங்கே வந்திருக்கிறேன். ஏனென்றால் என்னை எனக்கே அவ்வளவு பிடிக்கும். லவ் யுவர்செல்ஃப்!’ என தெளிவாக கூறினார் ஜூலி.

குழந்தை ஒன்றின் கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக தான் பணம் திரட்டி கொடுத்ததையும், பள்ளி படிக்க முடியாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கான கல்வி தொகையை கட்டி வருவது குறித்தும் ஜூலி உருக்கமாக பகிர்ந்துகொண்டார். இந்த விஷயங்களை பகிரும் போது அவருக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் வாழ்த்து தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in