ஓடிடி உலா: ‘ஜோகி’

ஓடிடி உலா: ‘ஜோகி’

டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்ட உண்மைச் சம்பவத்தின் பின்னணியில், வரலாற்றின் கறுப்புப் பக்கங்களையும், மானுடத்தின் ஈரத்தையும் ஒரு சேர தரிசிக்க வழி செய்கிறது ‘ஜோகி’ திரைப்படம்.

காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் அங்கமாக 1984 ஜூனில் ‘ஆபரேஷன் ப்ளூஸ்டார்’ ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. அதன்படி அமிர்தசரஸ் பொற்கோவிலில் கமாண்டோக்கள் களமிறங்கி பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை சுட்டுக்கொன்றனர். இருதரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் பலியான இந்த நடவடிக்கை நாடெங்கிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. குறிப்பாக தங்களது புனித தலத்தை வெடிகுண்டுகள் பதம்பார்த்ததும், சீக்கிய சொந்தங்கள் ரத்தக்களரியானதும் அடிப்படைவாதிகளை அதிகம் சீண்டியது.

இதன் எதிரொலியாக அதே ஆண்டின் அக்டோபர் இறுதியில் பிரதமர் இந்திரா காந்தியை அவரது மெய்காப்பாளர்களில் அடங்கியிருந்த சீக்கியர்களே படுகொலை செய்தனர். இதனையடுத்து சீக்கியர்களைக் குறிவைத்து டெல்லியில் வெடித்த கலவரத்தில் ரத்த ஆறு ஓடியது. இந்த பின்னணியில் ஜோகிந்தர் சிங் என்ற சீக்கிய இளைஞனைச் சுற்றி நடந்தேறிய அவலங்களும், அவற்றை அவன் எதிர்கொண்டதுமே ’ஜோகி’ திரைப்படம். நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி இருக்கும் இந்த இந்தித் திரைப்படத்தை தமிழ் டப்பிங்கிலும் காணலாம்.

கிழக்கு டெல்லியில் சீக்கியர்கள் அதிகம் செறிந்திருக்கும் திரிலோக்புரியில் ஒரு கூட்டுக் குடும்பமாக பிரியத்துக்கு உரியவர்களுடன் ஜோகிந்தர் சிங் வாழ்கிறான். வழக்கம்போல அன்றைய தினமும் தந்தையுடன் பேருந்தில் ஏறும் ஜோகியை சக பயணிகள் வெறியோடு சூழ்ந்து தாக்குகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பி தெருவில் நுழைபவன், எல்லா திசையிலும் உயிருக்கு பயந்து மக்கள் ஓடுவதையும் அவர்கள் அனைவரும் சீக்கியர்களாக இருப்பதையும் அறிந்து அதிர்கிறான்.

அந்தக் கூட்டத்தில் ஒருவனாய் உயிரை காத்துக்கொள்ள ஓடும் ஜோகி, ஒரு கட்டத்தில் சுதாரிக்கிறான். தன்னுடைய குடும்பத்தினரைக் காப்பாற்ற களமிறங்கும் அவனது முயற்சிகள், இதர சீக்கியர்களையும் மீட்கும் முனைப்பாக வளர்கிறது. தங்களைக் குறிவைத்து வேட்டையாடும் சக மனிதர்களிடமிருந்து சீக்கியர்களைக் காப்பாற்றும் ஜோகியின் பகீரத முயற்சி வென்றதா என்பதை அதிகப்படி அவநம்பிக்கையும், சொச்சமிருக்கும் ஈரத்தையும் கலந்து பரிமாறுகிறது ‘ஜோகி’ திரைப்படம்.

சீக்கியர்களுக்கு எதிரான 1984 கலவரத்தை முன்வைத்து பல திரைப்படங்கள் வெளியாகி இருந்தபோதும், நிஜ சம்பவங்களுக்கு சற்று நெருக்கமாக பதிவாகியிருக்கும் ‘ஜோகி’, நம்மை உலுக்கிப் போடுகிறது. மனிதம் மறந்த கலவர கும்பல்களைவிட கைகட்டி வேடிக்கை பார்க்கும் காவல் துறையினர் மற்றும் கலவரத்துக்கு பெட்ரோல் வார்க்கும் அரசியல்வாதிகளின் பின்னணியை ஜோகி அம்பலப்படுத்துகிறது. ’ஒரு பெரிய மரம் வேரோடு கீழே விழுந்தால், நிலத்தில் அதன் தாக்கம் அதிர்வுகளாக ஏற்படவே செய்யும்’ என்ற கட்சித் தலைமையின் மனோபாவத்தை, கீழிருக்கும் அடிபொடிகள் ரத்த வெறியோடு கைக்கொள்கிறார்கள்.

கைவசம் வாக்காளர் பட்டியலுடன் கட்சி குண்டர்களும், சிறைக் கைதிகளும் கட்டவிழ்த்து விடப்படுகின்றனர். வீடுகள் சூறையாடப்பட்டு, குடும்பத்தோடு சீக்கியர்கள் கொளுத்தப்படுகின்றனர். எங்கும் மரண ஓலம், அபயக் குரல்கள் எதிரொலிக்கின்றன. சிகையைக் கத்தரித்தும், அடையாளம் மாற்றியும் ஆங்காங்கே ஒளிந்திருக்கும் சீக்கியர்களை தேடி கொல்கிறார்கள். தன் தரப்பில் எஞ்சிய சீக்கியர்களைக் காப்பாற்ற ஜோகி போடும் திட்டமும், அதற்காக அவன் எதிர்கொள்ளும் சவால்களும் ஒரு திரில்லருக்கு இணையாக விரிகின்றன.

டெல்லியிலிருந்து பஞ்சாப்பின் மொஹாலிக்கு ஒரு கனரக வாகனத்தில் சீக்கியர்களை ரகசியமாகக் கொண்டுசெல்ல ஜோகி முடிவு செய்கிறான். அதற்காக அவனது கல்லூரி நண்பர்கள் இருவர் தங்கள் உயிரை துச்சமாக்கி உதவ முன்வருகின்றனர். கல்லூரி காலத்து வெஞ்சினத்தோடு வளையவரும் இன்னொரு சகா, ஜோகியின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை இடவும் செய்கிறான். கலவர வாகனங்களின் அடையாளங்களோடு ஜோகியின் கனரக வாகனமும் புறப்பட, எதிரிகளும் துரோகிகளும் ஆங்காங்கே எதிர்படுகிறார்கள்.

இந்த இடையூறுகளை மீறி ஜோகிந்தர் சிங் என்ற சாமானியனின் முயற்சி பலித்ததா என்பதை, தவிர்க்க இயலாத பதைபதைப்புடன் ஜோகி திரைப்படம் விவரிக்கிறது. நிஜ சம்பவங்களின் தொகுப்பு என்றபோதும் திரைக்கதைக்கான இடைவெளிகளைப் புனைவை கொண்டு நிரப்பியிருக்கிறார்கள். அதுவும் நிஜத்துக்கு நெருக்கமாகவே நிற்கிறது. ஜோகியின் பிரயத்தனங்களை வணிக சினிமாவுக்கான நிர்பந்தங்களின்றி பதிவு செய்திருப்பதும் இதில் அடங்கும்.

உருவிய வாளும், திகுதிகுக்கும் தீவட்டியுமாக திரியும் கலவரக் கும்பல்களைவிட, அவர்களை பின்னிருந்து இயக்கும் அரசியல்வாதிகளின் ரத்தவெறி மிரள வைக்கிறது. கட்சியில் பெயரும் பதவியும் பெறுவதற்கு இந்தக் கலவரச் சூழலைப் பயன்படுத்திக்கொள்ளும் அக்மார்க் அரசியல்வாதியாக தோன்றும் குமுத் மிஸ்ராவின் நடிப்பு பிரமாதம். பாலிவுட் வில்லனின் பிரதிபலிப்பு அவ்வப்போது எட்டிப்பார்த்தாலும், வாய் நிறைய வசையும் குதர்க்க இளிப்புமாக மிஸ்ரா மிரட்டுகிறார்.

சாமானிய சீக்கிய இளைஞனாக அறிமுகமாகி கதையைச் சுமந்து செல்லும் தில்ஜித்தின் தோற்றமும், நடிப்பும் பரிதாபத்தை அள்ளுகின்றன. அவரது கதாபாத்திரத்தை அசகாயசூரனாக காட்டாது, இயல்பான இளைஞனாக வடித்திருப்பத்திருப்பதும் கதையின் போக்குக்கு உதவுகிறது. ஜோகியின் தோழனாக தோள்கொடுக்கும் முகமது அய்யூபின் அடக்கி வாசிக்கும் நடிப்பும் தனியாகக் கவர்கிறது.

ஜோகி மற்றும் நண்பர்களுக்கு மத்தியிலான நட்பையும் குரோதத்தையும் விளக்கும் பிளாஷ்பேக், படம் நிறைவதற்கு அரைமணி முன்பாகத் தலைகாட்டுகிறது. இந்த தாமத இடைச்செருகலால் கதையின் போக்கு தடுமாறி மீள்கிறது. 2 மணி நேர திரைப்படத்தின் நீளத்துக்கு ஈடுகொடுத்து பிளாஷ்பேக் காட்சிகள் விரைந்து முடிவது ஆறுதல். சொற்ப காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ஜோகியின் காதலியாக தோன்றும் அமைரா திரையில் அழுந்த பதிகிறார்.

பின்னணி இசை, இரவு காட்சிகளின் ஒளிப்பதிவு ஆகியவை துருத்தலின்றி திரைப்படத்துக்குத் தேவையானதைத் தந்திருக்கின்றன. தீ வைப்பு உள்ளிட்ட கலவர காட்சிகளின் கிராஃபிக்ஸில் அமெச்சூர்தனம் அதிகம். ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பாணியில் அரசியல் சாய்வுக்கும், சாடல்களுக்கும் அதிக வாய்ப்பு இருந்தபோதும், அவற்றில் கவனம் சிதறாது திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறார் இயக்குநர் அலி அப்பாஸ். 1984 அரசியல் பின்புலத்தை அதிகம் அறியாதோருக்கு ஜோகி அலுப்பூட்டக்கூடும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in