ஓடிடி உலா: ‘இண்டியன் பிரிடேட்டர்: தி டைரி ஆஃப் எ சீரியல் கில்லர்’

ஓடிடி உலா: 
‘இண்டியன் பிரிடேட்டர்: தி டைரி ஆஃப் எ சீரியல் கில்லர்’

குற்றவாளியையும் அவனது குற்றப் பின்னணியையும் குறுக்குவெட்டில் அலசும் புனைவுகளைவிட, நிஜத்துக்கு நெருக்கமான ஆவணப் பதிவுகள் வீரியமானவை என்கிறது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கும் ’இண்டியன் பிரிடேட்டர்’ க்ரைம் ஆவணத் தொடர். இதன் முதல் தவணையாக, ஜூலையில் வெளியான ’தி பட்சர் ஆஃப் டெல்லி’யைவிட தற்போது வெளியாகியிருக்கும் ‘தி டைரி ஆஃப் எ சீரியல் கில்லர்’ கூடுதலாக கிலியூட்ட முற்படுகிறது.

குற்ற மூளையின் இருட்டு மூலைகள்

உடன் பழகுவோரின் சமூகம், பொருளாதாரம், அறிவு, அதிகாரம் எனப் பல அடுக்குகளிலும் உயர்ந்தவர்களை சகித்துக்கொள்ள முடியாத ஒருவன் அவர்களின் உயர்வுக்கு காரணம் அவர்களது மூளையே என்ற முடிவுக்கு வந்து திட்டமிட்டு அவர்களைக் கொன்று தீர்க்கிறான். பின்னர் கபாலம் திறந்து சேகரிக்கும் மூளையை வேகவைத்து ’சூப்’ அருந்துவதன் மூலம் அவர்களின் சக்திகளை கிரகித்ததாக ஆசுவாசம் கொள்கிறான்.

விதிர்க்க வைக்கும் இந்த கொலையாளி சாமானியர்களில் ஒருவனாக உலவுவதும், அவனுக்கு எதிரான சாட்சியங்களை முழுமையாக நிரூபிக்க இன்று வரை காவல்துறை தடுமாறுவதும் க்ரைம் கதைகளைவிட விறுவிறுப்பானவை. கொலையாளி யார், கொல்லப்பட்டோர் எவர், கொலையின் பின்னணி என்ன, அவனை காவல்துறை வளைத்தது எப்படி... என்பதாக விரியும் விசாரணை வளையங்களைவிட, குற்றவாளி மூளையின் இருட்டு மூலைகளை குறுக்குவெட்டாக ஆராயும் விவரணைகளே இந்த ஆவணத் தொடரை நாம் பார்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

நர வேட்டைக்கு ஒரு டைரி

உத்தரபிரதேசம் மாநிலம் அலகாபாத் உள்ளூர் பத்திரிகை ஒன்றின் செய்தியாளர் ஒருவர் திடீரென காணாமல் போகிறார். பல்வேறு சமூக அவலங்கள் வெளிப்படுத்தி வந்த அவருக்காக சக பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் குதிக்கிறார்கள். அரசியல் மற்றும் அதிகார அழுத்தங்கள் காரணமாக, காணாமல் போன பத்திரிகையாளர் தீரேந்திராவை கண்டுபிடிக்க தனி குழு அமைக்கப்படுகிறது. புலனாய்வின் முடிவில், பத்திரிகையாளர் கடத்தி கொல்லப்பட்டது தெரிய வருகிறது. சக பத்திரிகையாளர்களும், காவல்துறையும் கணித்ததுபோல பெரிய இடத்து எதிரிகளால் அவரது கொலை நிகழவில்லை.

எவரும் எதிர்பாரா வகையில் உள்ளூரைச் சேர்ந்த ராம் நிரஞ்சன் என்னும் சாமானியன் இந்தக் கொலைக்காக கைது செய்யப்படுகிறான். தொடர்ந்து அவன் பன்றி தொழுவத்தில் பதுக்கிவைத்திருந்த உடமைகளை துழாவும்போது டைரி ஒன்றை கண்டெடுக்கின்றனர். அந்த டைரிக் குறிப்புகளின் அடிப்படையில், கொல்லப்பட்ட பத்திரிகையாளர், ராம் நிரஞ்சனின் 14-வது நரபலி என்றறிந்து அதிர்கின்றனர். அதுவரை நிதானமாக நகரும் ஆவணத் தொடர், முந்தைய 13 கொலைகள் குறித்த கேள்விகளுடன் ஒரு க்ரைம் திரில்லருக்கு நிகரான திடுக்கிடல்களோடு அதன்பின் விரைகிறது.

’மூளை சூப்’ கொலைகள்

பத்திரிகையாளர் கொலைக்கு முன்னதாக ராம் நிரஞ்சன் நடத்திய நரபலி வேட்டைகளைத் தேடி போலீஸார் முன்னேறுகின்றனர். அப்படி கொலையானவர்கள் மட்டுமன்றி ராம் நிரஞ்சனின் கொலை வலையில் சூழல் காரணமாக தப்பிப் பிழைத்த சிலரையும் போலீஸார் சந்திக்கின்றனர். போலீஸார் விவரித்த பிறகே, காணாமல் போனதாகத் தேடப்படும் தங்களது குடும்ப உறுப்பினர் கொலைக்கு ஆளானதை சம்பந்தப்பட்டவர் கள் அறிய நேரிடுகிறது. இதே வரிசையில் உயிர் பிழைத்தோரின் அனுபவங்களும் பகீர் பேட்டிகளாக திரையில் விரிகின்றன.

காவல்துறை விசாரணைகளின் தடத்தை பின்தொடரும் ஆவணத்தொடரின் கேமரா அனைத்தையும் விவரிக்கிறது. அவற்றின் உச்சமாக, வக்கிர கொலையைத் தொடரும் உக்கிரமான ’மூளை சூப்’ காட்சிகள் பார்வையாளர்களை பதைபதைக்கச் செய்யும். மனித மூளையை வேகவைத்து கொலையாளி சூப் அருந்துவதும், குடலை உருவி ஆராய்வதுமாக தொடரும் காட்சிகள் இளகிய மனம் கொண்டவர்கள் தவிர்க்க வேண்டியவை.

குற்ற மனதின் குறுக்குவெட்டு

சுற்றிவளைக்கும் குற்ற வழக்கு விசாரணையின் பாதை, கொலை மற்றும் கொலையாளியின் பின்னணி ஆகியவற்றை விவரிப்பதோடு ஆவணப் படம் சுருங்கிவிடவில்லை. இரக்கமற்ற நரவேட்டையைக் குற்றவாளி ஏன் நிகழ்த்தினான், எது அவனை குற்றங்களை நோக்கி நகர்த்தியது, ஒரு கொலைக் குற்றவாளியின் மனம் எப்படிச் செயல்படும், நம்மில் ஒருவனாக வளையவரும் சாதாரணன் எந்தப் புள்ளியில் மிருகத்தைவிட கோரமாகிறான்... உள்ளிட்ட வினாக்களுக்கும் விடைகாண முயற்சித்திருக்கிறார்கள்.

இதற்காக வழக்கின் விசாரணை அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மட்டுமன்றி குற்ற மனதை குறுக்குவெட்டாக ஆராயும் மருத்துவ உளவியல் நிபுணர், குறிப்பிட்ட சமூகத்தின் மேம்பாட்டுக்காக மெனக்கிட்ட சமூக ஆர்வலர், மனித சமூகத்தின் உள்ளும் புறமுமாக ஊடுபாவும் காரணிகளை ஆராயும் மானுடவியலாளர் என பலதரப்பட்டோரின் பேட்டிகளை பதிவு செய்திருக்கின்றனர். அத்தியாயங்கள் நெடுக ஆங்காங்கே துண்டு துண்டாக வெளிப்படும் இந்த வல்லுநர் பேட்டிகள், கொலை வழக்கின் புதிர்களை விடுவிப்பதோடு, நடைமுறையில் நாம் எதிர்கொள்ளும் சில முகமூடிகளை தோலுரிக்கவும் உதவக்கூடும்.

கண் திறக்கும் மிருகம்

இந்த பேட்டிகளின் உச்சமாக, உன்னாவ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராம் நிரஞ்சனை நேரில் சந்தித்துப் பேட்டி எடுக்கிறார்கள். அவற்றில் எதிரொலிக்கும் அவனது அலட்டலான குரலும், குற்றச்சாட்டுகளை சமயோசிதமாய் எதிர்கொள்வதும் துணுக்குறச் செய்பவை. சீரியல் கில்லர்களுக்கே உரிய வசீகரம், பேச்சுத் திறன், வாதங்களை அடுக்கும் உத்தி, தன்னை பாதிக்கப்பட்ட நபராக உணர்த்துவது உள்ளிட்டவற்றை நெருக்கமாக உணர்த்துகிறார்கள்.

ராம் நிரஞ்சன் என்ற அடித்தட்டு சாமானியன், அரசியல், அதிகார, பொருளாதார ஆதாயங்களுக்காக ’ராஜா கொலந்தர்’ என்ற பெயரில் அரச மனோபாவத்துக்கு ஆட்படுவதும், மனைவிக்கு பூலன் தேவி என்று பெயர் மாற்றுவதும், வாகனம் என்ற சமூக அந்தஸ்துக்காக இரட்டைக் கொலைகள் நடத்துவதுமாக, அதுவரை பார்வையாளர் அறிந்ததை அவனுடனான பேட்டி இன்னொரு தளத்திலிருந்து பொருளுணரச் செய்கிறது. குறிப்பாக, குற்ற மனதில் ஒளிந்திருக்கும் கோர மிருகம் எப்போது கண்விழிக்கிறது என்ற திருகலான ஐயத்துக்கும் திடுக்கிடும் பதில் கிடைக்கிறது.

விடை தெரியா கேள்விகள்

குற்றவாளியின் சமூக ஊடறுப்பை விவரிக்கும் ஆவணத் தொடரில், அம்மாநிலத்தில் அப்போது பரவிய அரசியல் சூழல், பழங்குடியினரை துரத்திய சமூக அவலம், அவற்றிலிருந்து விடுபட விரும்பியவனின் நுணுக்கமான மனப்பிறழ்வு ஆகியவற்றையும் பதிவு செய்திருக்கிறது. ஆனால், புறக்கணிக்கப்பட்ட சமூகத்தின் அரசனாக தன்னை பாவிக்கும் அந்த மனப் பிறழ்வுக்கும், தொடர் கொலைகளுக்கும் இடையிலான கண்ணிகளை ஆவணத்தொடர் முறையாக பின்தொடரவில்லை.

குறிப்பாக, பத்திரிகையாளர் தீரேந்திரா, மற்றுமொரு இரட்டைக் கொலைகள் ஆகியவற்றுக்கு அப்பாலான இதர நர வேட்டைகள் மற்றும் தப்பிப் பிழைத்தவர்களின் பின்னணியை ஆவணத் தொடர் அலட்சியமாக கடந்திருக்கிறது. பத்திரிகையாளார்கள், விசாரணை அதிகாரிகள், குற்றம்சாட்டப்பட்டவர் என பலதரப்பிலும் அவை தொடர்பான கேள்விகள் போதுமான அளவில் முன்வைக்கவும் இல்லை. கொலையாளியின் வாக்குமூலத்தின்படி அவையனைத்தும் போலீஸாரின் ஜோடிப்பு என்ற வாதத்தை ஆவணத்தொடரும் ஆராய முற்படவில்லை. முதல்முறை அதிரச் செய்யும் மூளை சூப் காட்சி அடிக்கடி இடம்பெறுவது குமட்டுகிறது.

இண்டியன் பிரிடேட்டர் தொடரின் முதல் தவணையான ’தி பட்சர் ஆஃப் டெல்லி’யைவிட, தற்போதைய ’தி டைரி ஆஃப் எ சீரியல் கில்லர்’ அத்தியாயங்களின் ஆக்கம் மெருகேறி இருக்கிறது. ஆனால், திஹார் சிறை வாயிலில் தலையில்லா சடலங்களை போட்டுச் செல்லும் சந்திரகாந்த் ஜா என்ற கொலையாளிக்கு போலீஸ் தரப்பில் நிகழ்த்தப்பட்ட அக்கிரமங்களை அத்தொடர் முறையாக பதிவு செய்ய மறந்ததுக்கு நிகராக இரண்டாவது தவணையிலும் விடுபடல்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றுக்கு அப்பால் நடைமுறை குற்ற நிதர்சனங்களின் மத்தியில் நாம் விழிப்பாய் இருப்பதற்கான சுதாரிப்பை விதைத்த வகையிலும், பொழுதுபோக்கு ஓடிடி படைப்புகளின் மத்தியில் ’இண்டியன் பிரிடேட்டர்’ ஆவணத் தொடர் தனியாவர்த்தனம் செய்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in