ஓடிடி உலா: ‘கடாவர்’

சடலங்களில் உயிர்பெறும் த்ரில்லர்
ஓடிடி உலா: ‘கடாவர்’

சொந்த தயாரிப்பு மற்றும் பிரதான வேடத்தில் அமலா பால் பங்கேற்றிருக்கும் ’கடாவர்’ திரைப்படம், நேரடியாக டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி உள்ளது. மருத்துவத் துறையை கிடுகிடுக்க வைக்கும் உடலுறுப்பு திருட்டின் மீது வெளிச்சமடிக்கும் க்ரைம் த்ரில்லராக உருவாகி உள்ளது ’கடாவர்’.  

சிறைக்குள் சூத்திரதாரி?

நகரின் பிரசித்திபெற்ற மருத்துவர் ஒருவர் திடீரென காணாமல் போகிறார். காரோடு சேர்த்து எரிக்கப்பட்ட சடலத்தின் எச்சங்களை கொண்டு இறந்தது அந்த மருத்துவர் என காவல்துறை உறுதி செய்கிறது. கொலையாளியைத் துப்பறியத் தொடங்கும் போலீஸ் விசாரணை, சிறைவாசத்தில் இருக்கும் கைதி ஒருவரை நோக்கி நீள்கிறது. மருத்துவர் கொலை குறித்து சிறைக்குள் இருந்தபடி அவன் முன்கூட்டியே பிரகடனம் செய்ததும் தெரிய வர, காவல் துறை அதிர்கிறது. கூடவே ’இது தொடக்கம்; மேலும் கொலைகள் தொடரும்’ என்றும் அவன் அறிவிக்கிறான். சிறைக்குள் அடைபட்டிருக்கும் கைதி எப்படி நகரின் பிரபல மனிதர்களின் கொலைகளுக்கு காரணமாக முடியும் என்று போலீஸார் தலையை பிய்த்துக்கொள்கிறார்கள்.

உடற்கூராய்வு மருத்துவரான பத்ரா, காவல்துறை விசாரணைக்கு உதவ முன்வருகிறார். பத்ராவின் மருத்துவ அனுபவம், தனிப்பட்ட புத்திசாலித்தனம் ஆகியவற்றால் கொலைக்கான பின்னணி மற்றும் கொலையாளியைப் போலீஸார் நெருங்குகின்றனர். இந்த இடைவெளியில் நகரில் மேலும் சில கொலைகள் விழுகின்றன. அந்தக் கொலைகள் ஏன் நடக்கின்றன, கொலையாளி யார், சிறைக் கைதிக்கும் கொலைகளுக்கும் என்ன தொடர்பு, உடற்கூராய்வு மருத்துவ அனுபவத்தின் அடிப்படையில் மருத்துவர் பத்ரா கொலை வழக்கின் மர்மங்களை விடுவித்தாரா.. . என்பவை உட்பட இன்னபிற வினாக்களுக்கு விடை தருகிறது கடாவர் திரைப்படம்.

’ஷெர்லாக்’ சூடு!

காரோடு வைத்து எரிக்கப்பட்டதில் சடலத்திடமிருந்து மரபணு சோதனைக்கான எச்சங்கள் கூட மிச்சமில்லாது போகிறது. இப்படி தடயமே கிட்டாத வழக்கில் காவல்துறையின் மருத்துவ சர்ஜன் பத்ரா உள்ளே வந்ததும் விசாரணை விறுவிறுப்படைகிறது. போலீஸ் அதிகாரியாக ஆசைப்பட்ட பத்ரா, பெற்றோரின் விருப்பத்துக்காக மருத்துவம் படித்ததுடன், காவல்துறை சர்ஜன் ஆவதன் மூலம் தனது போலீஸ் கனவுகளையும் நனவாக்கிக் கொள்கிறார். பணி மீதான பெண் மருத்துவரின் பெரும் விருப்பமே அவரை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது.

காவல்துறையால் தடயம் எட்டப்பெறாத குற்ற வழக்குகளில் டாக்டர் பத்ரா நுழைந்ததும் சுலபமாக முடிச்சவிழ்கின்றன. இப்படி டாக்டர் பத்ராவாக தோன்றும் அமலா பால் திரை நெடுக ஆக்கிரமிக்கிறார். கிட்டத்தட்ட ஷெர்லாக் ஹோம்ஸ் அவதானிப்பில் அமலாவின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் விவரிக்கப்படுகிறது. ஆனால், ஷெர்லாக்கை பார்த்துச் சூடு போட்டுக்கொண்டதாக அதன் பின்னரான சொதப்பல்கள் நீள்கின்றன.

ஆகப்பெரும் அமலா பால்

போஸ்ட்மார்டத்துக்காக காத்திருக்கும் சிதைந்த சடலங்கள் மத்தியில் எந்த சலனமுமின்றி உணவை ருசிப்பவராக அமலா பால் கதாபாத்திரம் அறிமுகமாவதில் சுவாரசியம் பற்றுகிறது. நறுக்கிய சிகை, ஊடுருவும் பார்வை, அந்தக் கண்களில் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் நிழல்கள், நெற்றியில் துலங்கும் திருநீறு, பின்னணியில் ஒலிக்கும் நாமாவளி என அமலாவின் சித்திரிப்பும் கவனமாக புனையப்பட்டுள்ளது.

அதற்கேற்ப அனைத்துக் காட்சிகளும் அவரைச் சுற்றியே அநாயசமாக வட்டமடிக்கின்றன. உதவி கமிஷனராக வரும் உயர் போலீஸ் அதிகாரிகூட குற்ற விசாரணையின் சகல கட்டங்களிலும் மருத்துவர் பத்ராவின் ஆலோசனையை எதிர்பார்க்கிறார். ஒட்டுமொத்தமாக திரையோட்டத்தை சுமக்கும் முயற்சியில் அமலா பால் சில இடங்களில் தோள் துவளவும் செய்கிறார். சடலங்களுக்கு மத்தியிலான கதறல் உள்ளிட்ட முக்கியமான சில காட்சிகளில் அமலா பாலின் நடிப்பு உரிய பாதிப்பை உருவாக்காது கடந்து செல்கிறது.

மருத்துவ க்ரைம் கதை

உடலுறுப்பு திருட்டு மற்றும் அதையொட்டிய குற்றச் சம்பவங்களை முன்வைத்து கணிசமான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. கடாவர் திரைப்படமும் அந்த வரிசையில் சேர்ந்தபோதும், வித்தியாசம் காட்டுவதற்காக உருக்கமான ஃப்ளாஷ்பேக் ஒன்றையும் ஒட்ட வைத்திருக்கிறார்கள். ஆனால், சாதாரண பழிவாங்கலாக சுருங்கியதில், கதையில் பொதிந்திருக்கும் உடலுறுப்பு திருட்டு தொடர்பான கவன ஈர்ப்புகள் கானலாகின்றன.

கொடும் அவலங்களை உள்ளடங்கிய மருத்துவத் துறை மீதான சாமானியனின் கவலைகள் மற்றும் அச்சங்களை பதிவு செய்வதற்கான களம் இருந்தபோதும், அமலா பாலை முன்னிறுத்தும் முனைப்பில் அவையனைத்தும் நீர்த்துப் போகின்றன. இதனால் கதையின் முதுகெலும்பாக நிற்க வேண்டிய மருத்துவ குற்றப் பின்னணி வலுவிழந்து போகிறது. மருத்துவ குற்றத்தையும், க்ரைம் த்ரில்லரையும் பிணைக்கும் கண்ணிகளும் பலவீனமாக நிற்கின்றன. திடீரென நினைவு வந்தவர்களாக படத்தலைப்பு குறித்து திரைப்படத்தின் கடைசியில் அளித்திருக்கும் விளக்கம் இந்த சொதப்பல்களில் அடங்கும்.

உருக்கமான பின்னணி

கொலைகள், சடலங்கள், காவல்துறை விசாரணைகள், திடுக்கிடல்கள் என பயணிக்கும் கதையில் பெரும் ஆறுதலாக ஃப்ளாஷ்பேக் கதை சொல்லப்படுகிறது. தனது தந்தையாக இயேசுவை பாவித்தபடி ஆதரவற்றோர் இல்லத்தில் வாழும் இளம்பெண், அவளின் கனவுகள், காதல், திருமண வாழ்க்கை என பூத்தூவலாய் நீடிக்கும் காட்சிகளில் வால்பாறையின் ஈரத்தையும், மலர்ச்சியையும் நுகர முடிகிறது. பட்டாம்பூச்சி பெண்ணாக வளையவரும் அதுல்யா ரவி, ஓரளவுக்கு தனது கதாபாத்திரத்தை பூர்த்தி செய்கிறார். காதலன் மீதான ஈர்ப்பில் அவனது பைக்கை வருடுவது, சளைக்காது வாயளப்பது, கடவுளிடம் உரையாடும் தருணங்கள், காதலை அங்கீகரிக்கும் பாவனை என அதுல்யா குதூகலிக்கும் காட்சிகள் அனைத்திலும் வசீகரம் கொப்பளிக்கிறது.

சிறைக்குள் அடைபட்டிருக்கும் கைதியாகவும், வெளியில் அரங்கேறும் கொலைகளின் சூத்ரதாரியாகவும் அறிமுகமாகும் திரிகன் தொடர்பான சித்தரிப்புகளும் த்ரில்லருக்கு உகந்தவை. இப்படி நீளும் ஃப்ளாஷ்பேக் வரிசையில் இன்னொரு திசையிலிருந்து முளைக்கும் ரித்விக்காவும் சேர்ந்துகொள்வது சோர்வை அளிக்கக்கூடியது. ஃப்ளாஷ்பேக் காட்சிகளின் நீளம் மற்றும் எண்ணிக்கையை குறைத்திருப்பின் கதையின் விறுவிறுப்பு கூடியிருக்கும். திரையில் அரிதான தடய அறிவியல் தொடர்பான கதையில் அவற்றின் நுட்பத்தை விளக்கும் காட்சிகளை இன்னும் சேர்த்திருக்கலாம்.

உருவாக்கத்தில் சொதப்பல்கள்

எழுத்தில் திடம் கொண்ட கதையை திரையில் இப்படியும் சொதப்பலாக பரிமாறலாம் என்பதற்கு கடாவர் திரைப்படத்தின் பல காட்சிகள் உதாரணமாகி இருக்கின்றன. லாஜிக் பொத்தல்களுடன், அமெச்சூர் ஆக்கமும் சேர்ந்து கொண்டதில் வேகம் பிடிக்க வேண்டிய திரைக்கதை துவண்டு தள்ளாடுகிறது. போலீஸ் அதிகாரியாக வரும் ஹரிஷ் உத்தமன், காக்கிக்கு நிகராக விறைப்பு காட்டியபோதும், அமலாவுக்கு முன்பாக அவரை நமுத்துப் போகடிக்கிறார்கள். பின்னணி இசையில் ஜமாய்த்திருக்கும் ரஞ்சின் ராஜ் பாடல்களில் கோட்டை விடுகிறார். கதையின் போக்கில் வேகத்தடையாகவும் இந்த பாடல்களே நிற்கின்றன.

வால்பாறையின் பசிய அழகை பதிவு செய்ததில் அரவிந்த் சிங் கவனம் ஈர்க்கிறார். அபிலாஷ் பிள்ளை கதையில் எளிதில் ஊகிக்க வாய்ப்பளிக்கும் காட்சிகளை இயக்குநர் அனூப் பணிக்கர் இன்னும் இறுக்கியிருக்கலாம். சாதா போலீஸாக வரும் முனீஸ்காந்த் எடுபடாத காமெடியில் தொலைகிறார். குறைவான அவகாசத்தில் வந்தபோதும் நிழல்கள் ரவி அனுபவ நடிப்பில் மிரட்டுகிறார். குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் தோன்றும் இயக்குநர் வேலு பிரபாகர், ’ராட்சசன்’ வினோத் சாகர் உள்ளிட்டோர் வீணடிக்கப்பட்டுள்ளனர்.

திரைப்படத்தின் தொடக்கத்தில் பார்வையாளர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை விதைக்கும் திரைப்படம் அதன் பின்னரான காட்சிகளில் ஏமாற்றத் தவணைகளை தருகிறது. இன்னொரு ’ராட்சசன்’ என்பதாக மிளிர்ந்திருக்கவேண்டிய கதையை முழுமையற்ற ஆக்கத்தால் குறைப் பிரசவமாக படைத்திருக்கிறது கடாவர் திரைப்படம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in