ஓடிடியில் அடைக்கலமான ‘பிரம்மாஸ்திரா’: திரையரங்கில் வெற்றியா, தோல்வியா?

ஓடிடியில் அடைக்கலமான ‘பிரம்மாஸ்திரா’: திரையரங்கில் வெற்றியா, தோல்வியா?

பாலிவுட்டின் பிரம்மாண்ட படைப்பாக வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படம் தற்போது ஓடிடி வாயிலாகவும் ரசிகர்களை நெருங்கி உள்ளது. இதற்கிடையே இத்திரைப்படம் திரையரங்க வசூலில் வெற்றியா அல்லது தோல்வியா என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியில் களைகட்டி உள்ளது.

கரோனா காலத்துக்கு பின்னர் வெளியான பாலிவுட் திரைப்படங்கள் பலவும் படுதோல்வியை தழுவ, ஏராளமான பொருட்செலவில் உருவான பிரம்மாஸ்திரா திரைப்படத்தை வடக்கே பெரிதும் நம்பியிருந்தனர். ரன்பீர் கபூர் நாயகனாக தோன்ற அமிதாப் பச்சன், அலியா பட், நாகார்ஜூனா ஆகியோருடன் கௌரவ வேடத்தில் ஷாருக் கானும் நடித்த பிரம்மாஸ்திராவின் தொடக்க வசூல் திருப்திகரமாக இருந்தது. ஆனால் தெற்கிலிருக்கு வடக்கே படையெடுத்த பான் இந்தியா படங்களால் பிரம்மாஸ்திராவின் வசூல் சரிய ஆரம்பித்தது.

பல்வேறு மொழிகளில் உலகமெங்கும் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படம் தற்போது ஓடிடி வெளியீடும் கண்டுள்ளது. டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தில் நவ.4 முதல் இதனை காணலாம். முத்தொகுப்பாக திட்டமிடப்பட்டுள்ள பிரம்மாஸ்திராவின் முதல் பாகம் மட்டுமே தற்போது வெளியாகி உள்ளது. இதன் அடுத்த 2 பாகங்களும், அவற்றின் நிறைவாக ஒரு ஸ்பின்-ஆஃப் திரைப்படமும் வெளியாக உள்ளன. இந்த தகவல்களின் மத்தியில் பிரம்மாஸ்திராவின் திரையரங்க வசூல், வெற்றியா தோல்வியா என்பதில் விவாதங்கள் எழுந்துள்ளன.

முதல் நாள் வசூலில் மட்டுமே ரூ.34 கோடியை தாண்டிய பிரம்மாஸ்திரா ஒரே மாதத்தில் ரூ.425 கோடியை கடந்தது. ஆனபோதும் பிரம்மாஸ்திராவின் தயாரிப்பு செலவுகளோடு ஒப்பிடுகையில் இது குறைவே என்று சொல்லப்படுகிறது. இதில் பாகுபலி வசூல் உடன் ஒப்பிட்டு புதிய விளக்கமும் பாக்ஸ் ஆபிஸ் பார்வையாளர்களால் முன்வைக்கப்படுகிறது. உதாரணமாக வெற்றி படைப்பான பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகத்தின் வசூல் என்பது, பாகுபலி 2 பாகங்களின் தயாரிப்பு செலவோடு ஒப்பிடுகையில் குறைவே என்கிறார்கள். இரண்டாம் பாகம் வெளியான பிறகே இந்த வசூல் வெற்றி கணக்கு நேர் செய்யப்பட்டதாம். அந்த வகையில் பிரம்மாஸ்திரா அதன் முதல் பாக வசூலில் சோடைபோகவில்லை என்றும், அடுத்த 2 பாகங்கள் வெளியான பிறகே பிரம்மாஸ்திராவின் வசூல் வெற்றியை அறுதியிட்டு சொல்ல முடியும் என்கிறார்கள்.

இன்னொரு சுவாரசியமாக, ஆண்டின் வெற்றிகரமான பாலிவுட் படமாக புகழப்படும் பிரம்மாஸ்திராவும், அதன் வெற்றிமுகத்தை தடுத்தாட்கொண்ட பொன்னியின் செல்வனும் ஒரே நாளில் ஓடிடியில் அடைக்கலமாகி இருக்கின்றன. பிரம்மாஸ்திராவை ஹாட்ஸ்டாரிலும், பொன்னியின் செல்வனை அமேசான் ப்ரைம் வீடியோவிலும் காணலாம். இதன் பொருட்டு இந்த 2 பிரம்மாண்ட படங்களில் ஓடிடி வெற்றி யாருக்கு என்ற கருத்துக்கணிப்பையும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் தொடங்கியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in