ஓடிடி உலா: மர்லின் மன்றோ எனும் தேவதையின் மறுபக்கம்

ஓடிடி உலா: மர்லின் மன்றோ எனும் தேவதையின் மறுபக்கம்

செப்டம்பர் 23 - சில்க் ஸ்மிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது ரசிகர்களின் அன்பும் அஞ்சலிகளுமாக, கடந்த வாரம் நெடுக சமூகவலைதளங்கள் திமிலோகப்பட்டன. அவற்றில் ஒன்றாக ’நீ ஆவியானாய்; நாங்கள் பாவியானோம்’ என்ற நினைவஞ்சலி போஸ்டர் அதிகம் பகிரப்பட்டது. கோலிவுட்டில் கோலோச்சிய சில்க் ஸ்மிதாவுக்கான இந்த ’ஆண்’றோர் வாக்கு ஹாலிவுட்டை புரட்டிப்போட்ட மர்லின் மன்றோவுக்கும் பொருந்தும். இரண்டு தலைமுறைகள் கடந்த பின்னரும் சர்வதேச அளவில் ஆண்களின் உள்ளங்கவர் தேவதையாக வலம் வரும் மர்லின் மன்றோவின் வாழ்க்கையைப் புனைவில் தோய்த்து பரிமாறி இருக்கிறது நெட்ஃபிளிக்ஸின் ’பிளாண்ட்’ (Blonde) திரைப்படம்.

ஹாலிவுட் தாரகை

மர்லின் மன்றோவின் சினிமா பிரவேசமும், 15 சொச்ச வருடங்களில் அத்துறையில் அவர் எட்டிய உச்சமும் உலகில் எந்த நடிகைக்கும் வாய்த்திராதது. மாடல், நடிகை, பாடகி, தயாரிப்பாளர் என நாற்பதுகளின் இறுதியில் தொடங்கி அறுபதுகளின் தொடக்கத்தில் அஸ்தமித்த மர்லின் மன்றோவின் திரை வாழ்க்கை இன்றளவும் நினைவுகூரப்படுகிறது. சென்ற நூற்றாண்டு சினிமாவின் ஆகப்பெரும் அடையாளமாக இறப்புக்குப் பின்னர் கொண்டாடப்படும் மர்லின் மன்றோ, வாழும் காலத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கைக்காகத் தந்த விலை அதிகம்.

பெற்ற தாயின் கொலை முயற்சிகள், வளர்ப்புத் தந்தையின் தொடர் சீரழிப்புகள், சொந்த தந்தை முகத்துக்காக நீடித்த நிராசை, பொருளாதார ரீதியாக மட்டுமன்றி பாலியல் ரீதியாகவும் சுரண்டிய ஹாலிவுட் திரையுலகம், அமெரிக்க அதிபரின் செக்ஸ் டார்ச்சர்கள் உள்ளிட்டவற்றால் திரைப்பயணத்தின் உச்சியில் தனது 36 வயதில் மர்ம முறையில் மரித்துப் போனவர் மர்லின் மன்றோ. சில்க் ஸ்மிதா கடித்து எறிந்த ஆப்பிள் போல மர்லின் மன்றோவின் ரசிகர்களிடமும் சிலாகிப்பதற்கான எச்சங்கள் மிச்சமிருக்கின்றன. அவற்றில் பலவற்றையும் சேர்த்து, அப்படியும் விடுபட்ட இடங்களில் மறுக்க இயலாத புனைவால் நிரப்பி ’பிளாண்ட்’ திரைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

மர்லின் மன்றோ(வலது) வேடத்தில் அனா டி அர்ம்ஸ்(இடது)
மர்லின் மன்றோ(வலது) வேடத்தில் அனா டி அர்ம்ஸ்(இடது)

சிதைக்கப்பட்ட சிறுமி

7 வயது நோர்மா ஜீன் என்ற சிறுமியிடம் கதை தொடங்குகிறது. கைவிட்ட கணவர், அலைக்கழிக்கும் வறுமை, சதா குடிபோதை என படிப்படியாக மனச்சிதைவுக்கு ஆளாகும் தாயிடம் வளர்கிறாள் நோர்மா ஜீன். ’இவர்தான் உன் தந்தை’ என தாய் காட்டிய புகைப்படத்தை நெஞ்சில் ஏந்தியது மட்டுமே சிறுமிக்கு வாழ்நாள் நம்பிக்கையாகிறது. தாயும் அவருடனான வாழ்க்கையும் கைநழுவிய பிறகும் தந்தை மீதான தேடலே அந்தச் சிறுமியைச் செலுத்துகிறது.

மகளைக் கொல்ல முயலும் தாய், கைமாறும் வளர்ப்புப் பெற்றோர், ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலம் என நிராதரவான மர்லின் மன்றோவின் பால்யம் சோக மயமாகிறது. தொடரும் சினிமா வாய்ப்பு தேடும் முயற்சியிலும் பாலியல் பிண்டமாக அவர் சுரண்டப்படுவதும், முதிரா 16 வயதில் முதல் திருமணமுமாக சிதைக்கப்பட்ட சிறுமியாக வளர்கிறாள் மர்லின் மன்றோ. ஐம்பதுகளின் ஆண்கள் மத்தியில் பெண்ணழகின் அடையாளமாக, காமத்தின் குறியீடாகக் கொண்டாடப்பட்ட மர்லின் மன்றோவின் ஆரம்ப வாழ்க்கை குறித்த காட்சிகள் அழகி மற்றும் அழகின் மீதான பூச்சை உரிக்கின்றன.

தந்தையை தேடும் தேவதை

மர்லின் மன்றோவாகப் பிரபல்யமான பிறகும் நோர்மா ஜீன் தனது தந்தை குறித்த தேடல்களைத் தொடர்கிறாள். கடக்கும் மற்றும் சந்திக்கும் ஆண்கள் மத்தியில் எல்லாம் தந்தையைத் தேடுகிறாள். விரும்பத்துக்குரிய ஆண்களையும் ’டாடி’ என்றே விளிக்கிறாள். தந்தை குறித்த தேடலையும், பாசத்தையும் தனது இறுதி மூச்சு வரை மர்லின் மன்றோ தொடர்வது சோக காவியம். இதையே மர்லின் மன்றோவின் துவண்டிருந்த நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக அறுக்கும் கருவியாகவும் திரைப்படம் பயன்படுத்தி இருக்கிறது. மர்லின் மன்றோ நிஜ வாழ்க்கையில் அதற்கான ஆதாரங்கள் இல்லாதபோதும் சிறப்பான திரைக்கதைக்கு அதுவும் உடன்பட்டிருக்கிறது. மனநல மருத்துவமனையில் தாயைச் சந்திக்கும் இடத்திலும், முகம் காட்டா தந்தையின் கடிதங்கள் ஒவ்வொன்றையும் வாசிக்கும்போதும் மர்லின் மன்றோ குறித்த முற்றிலும் புதிய தரிசனத்தை ‘பிளாண்ட்’ தருகிறது.

அனா டி அர்ம்ஸ்
அனா டி அர்ம்ஸ்

’அனா’வின் கனா

மர்லின் மன்றோவுக்குத் திரையில் உயிர் தந்திருப்பவர் க்யூபா-கனடிய அழகுக் கலவையான அனா டி அர்மஸ். சினிமா வாய்ப்பு தேடும் சிறுமி நோர்மா ஜீன் முதல் ஹாலிவுட்டை ஆளும் மர்லின் மன்றோ வரையிலான 20 ஆண்டு பிம்பத்தை அனா டி சுமக்கிறார். மர்லின் வேடத்தில் நடிப்பது தனது வாழ்நாள் கனவு என்றிருக்கும் அனா, ஒருவகையில் அதற்கு அர்த்தமும் சேர்த்திருக்கிறார். சினிமாவில் சாதிக்கும் ஆவல், அழகைப் பரிமாறும் துணிச்சல், மென் சோகம் மிதக்கும் பார்வை, சதைக்காக அணுகும் ஆண்களிடம் சாய்வதற்கான தோளைத் தேடும் தவிப்பு என கிடைக்கும் தருணங்களில் எல்லாம் மர்லின் மன்றோவாகவே கூடு பாய்கிறார்.

நடப்பு ஹாலிவுட் சினிமாவின் அழகியரில் ஒருவராக அறியப்படும் அனா டி அர்மஸின் நிர்வாணக் காட்சிகள் நிறைந்தபோதும், விரசத்துக்கு வாய்ப்பின்றி மர்லின் மன்றோவின் தவிப்புகளையே ‘பிளாண்ட்’ பதிவு செய்திருக்கிறது. ஆனால் மர்லின் மன்றோ ரசிகர்களுக்கு நிகராக அதிக எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த அனா டியின் ரசிகர்களை படம் ஏமாற்றவும் செய்திருக்கிறது. அந்தளவுக்கு மர்லின் மன்றோவின் அழகை முழுதாக நிரப்ப முடியாமல் அனா டி அர்மஸின் பொலிவு ஏனோ ஆங்காங்கே சோபையிழக்கிறது.

அதிபர் மாளிகையின் அத்துமீறல்கள்

மர்லின் மன்றோ மீதான ரசிக சிலாகிப்புகளுக்கு நிகராக அவரது அழகுப் புயலில் கவிழ்ந்த அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி குறித்த வதந்திகளும் பிரபலமானவை. சாப்ளின் ஜூனியர், விளையாட்டு வீரர் ஜிம்மி, எழுத்தாளர் ஆர்தர் மில்லர் என மர்லின் மன்றோவின் பூர்த்தியடையாத திருமண வாழ்க்கைக்கு அப்பால் சரசங்கள் நிறைந்த காதல் கதைகளும் ஏராளம். அவற்றில் ஒன்று அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி மற்றும் அவரது சகோதரர் ராபர்ட் கென்னடி உடனுடனான ரகசிய உறவை விவரிக்கிறது. ஒருமித்த காதல் என்பதைவிட அதிபரின் அதிகாரபூர்வ அல்லகைக்கள் அவ்வப்போது மர்லின் மன்றோவைக் கவர்ந்து செல்வதையும், ஜான் கென்னடியின் வெறிக்கு இரையாக்குவதையும் சமரசமின்றி கதையில் சேர்த்திருக்கிறார்கள்.

மர்லின் மன்றோ வாழ்க்கையில் கென்னடி சகோதரர்கள் நுழைந்த பிறகே அவரைப் பீடித்திருந்த துயரம் மரணம் வரை நெட்டித் தள்ளியது. இதர ஆண் தொடர்புகளை ஒற்றறியும் அதிபர் மாளிகையின் அத்துமீறல்கள், வெளிநாட்டு உளவாளிகளின் பிடியில் சிக்கியிருக்கிறாரா என்பதைக் கண்காணிக்கும் அதிகார அழுத்தங்கள், தொடர் கருக்கலைப்புகள் ஆகியவையே மர்லின் மன்றோவின் மன ஆரோக்கியத்தைச் சிதைக்கின்றன. இவற்றையும் தொட்டிருக்கும் திரைப்படம், மர்லின் மன்றோ மரணம் குறித்து எழுதியிருக்கும் மாறான தீர்ப்பால் அதிக விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறது.

பிளாண்ட் திரைப்படத்தில் ஒரு காட்சி
பிளாண்ட் திரைப்படத்தில் ஒரு காட்சி

சோதிக்கும் நீளம்

சார்லி சாப்ளின் மூத்த மகனான சாப்ளின் ஜூனியர் மற்றும் இன்னொரு பிரபல வாரிசு நடிகர் ஆகியோருடன் ஒன்றாக மர்லின் மன்றோ திளைத்திருந்தார் என்பதான அதிகம் அறியப்படாத தகவலையும் ‘பிளாண்ட்’ பதிவு செய்திருக்கிறது. உறவு சிதிலங்கள் நிறைந்த பரிபூரணமற்ற வாழ்க்கையைக் கொண்டிருந்த மர்லின் மன்றோவின் அனுபவத்தை நேர்மறையாக அணுகியதுடன், அதையே திரைப்படத்தின் முக்கிய திருப்பமாகவும் இயக்குநர் ஆண்ட்ரூ டொமினிக் சுவாரசியமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

சினிமா வரலாற்றின் சிறப்பு மிக்க, மர்லின் மன்றோவின் விசிறிப் பறக்கும் மேலாடையுடன் கூடிய ‘தி செவன் இயர் இட்ச்’ திரைப்படத்துக்கான புகைப்படம் மற்றும் அதனை முன்னிறுத்தி அவரது சொந்த வாழ்க்கையில் வெடித்த விரிசல்கள் உள்ளிட்ட பலவற்றையும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறது இப்படம். ஆனால் அவற்றுக்காக திரைப்படத்தின் நீளம் சுமார் 3 மணி நேரத்துக்கு நீண்டிருப்பது பல இடங்களில் சோதிக்கவும் செய்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in