ஒரே நாளில் பார்க்கக்கூடிய 5 சிறந்த ஓடிடி தொடர்கள்!

ஒரே நாளில் பார்க்கக்கூடிய 5 சிறந்த ஓடிடி தொடர்கள்!

பெருந்தொற்றுக்கால கவலைகளையும் அச்சங்களையும் மடைமாற்றி நமக்கு ஆசுவாசம் அளித்ததில் ஒடிடி தொடர்களுக்கு முக்கியப் பங்குண்டு. ஆக்க நேர்த்தியிலும், கதை தேர்விலும், திரை மொழியிலும் திரைப்படத்தை மிஞ்சி நின்ற அந்த தொடர்கள், விரைவிலேயே நம்மை அதற்கு அடிமையாக்கிவிட்டன. ஒடிடி தொடர்கள், திரைப்படங்களைப் போன்று சில மணிநேரங்களில் முடிந்துவிடுவது இல்லை. அவற்றைப் பார்த்து முடிப்பதற்கு சில நாட்களோ வாரங்களோ தேவைப்படும். நம்மை அந்த தொடர்கள் முழுமையாக ஆக்கிரமித்துவிடும் என்பதால், அந்த சில நாட்களுக்கு நம் மனமும் அதனுள் அகப்பட்டுச் சுழலும்.

பொதுமுடக்கம் இல்லாத இன்றைய காலகட்டத்தில், அத்தகைய நீண்ட தொடர்களைப் பார்க்க எண்ணுவதுகூட மலைப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. மக்களின் மனவோட்டத்தைக் கருத்தில்கொண்டோ என்னவோ, தற்போது ஒடிடி தொடர்களின் நீளம் வெகுவாகக் குறைந்துவருகிறது. பல சீஸன்கள், ஒவ்வொரு சீஸனிலும் 20-க்கு மேற்பட்ட எபிசோடுகள் என்றிருந்த ஒடிடி தொடர்களின் வடிவமைப்பு, ஒரே ஒரு சீஸனை, அந்த சீஸனிலும் ஐந்து அல்லது ஆறு எபிசோடுகளைக் கொண்டதாகக் குறுகியிருக்கிறது. நீளம் குறைந்ததால், இந்த தொடர்களின் ஆக்கமும் கச்சிதமாக மாறியுள்ளது; படைப்பாளியின் படைப்புத் திறனும் முழுமையாக வெளிப்படுகிறது, முக்கியமாக, நம்முடைய நேரமும் விரயமாக்கப்படுவது இல்லை. அத்தகைய கச்சிதமான தொடர்களில் முக்கியமான சில இங்கே.

‘ஷ்மிகடூன்’ - ஆப்பிள் டிவி ப்ளஸ் (மொத்த நேரம் – 2 மணி நேரம் 50 நிமிடங்கள்)

சண்டையும் சச்சரவுமாக மோதித் திரியும் ஓர் இளம் தம்பதி, ஒரு நடைப்பயணத்தில் தொலைந்து போய். மாயாஜால நகரமான ஷ்மிகடூனில் அகப்பட்டுக் கொள்கின்றனர். அங்கே இருக்கும் அனைவரும் பழைய ஹாலிவுட் இசை நாடகத்தில் இருப்பவர்கள் போல் தோற்றமளிக்கிறார்கள். அந்தத் தம்பதிக்கு ஏற்படும் ஆச்சரியமும் பிரமிப்பும் விரைவில் நீர்த்துப் போய்விடுகின்றன.

உண்மையான காதலைக் கண்டறிவதே அவர்களின் முன்னிருக்கும் ஒரே வழி என்பதை அவர்கள் கண்டு உணர்கிறார்கள். ஒரு ஃபேன்டஸி உலகுக்குள் நம்மை அழைத்துச் செல்லும் இந்த தொடர் நம்மையும் அந்த உலகில் வாழச் செய்கிறது. அதில் நிரம்பி வழியும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும், தொடர் முடிந்த பின்னரும் நம்முள் தேங்கி நிற்கின்றன. சமீபத்தில் ஆஸ்கர் வென்ற அரியானா டெபோஸ் இதில் நடித்திருக்கிறார்.

‘ரஷ்யன் டால்’ - நெட்ஃபிளிக்ஸ் (மொத்த நேரம் – 3 மணி நேரம் 28 நிமிடங்கள்)

மாநாடு திரைப்படத்துக்கு இந்தத் தொடரும் ஓர் உந்துதல். இதில் நியூயார்க் நகரில் வீடியோ கேம் வடிவமைப்பாளராக இருக்கும் நட்ஜா எனும் பாத்திரத்தில் நடாஷா லியோன் நடித்திருக்கிறார், அவர் நிஜ வாழ்க்கையில் சாத்தியமில்லாத ஒரு நேரச் சுழற்சியில் (டைம் லூப்) தன்னைக் காண்கிறார். லியோன் அந்தப் பாத்திரத்துக்கு அற்புதமாக உயிர் கொடுத்திருக்கிறார். அன்றாட வாழ்வின் மிகவும் கசப்பான கூறுகளை பெருங்களிப்புடைய இருண்ட நகைச்சுவையின் வழியே இந்தத் தொடர் பதிவு செய்திருக்கும் விதம் அலாதியான அனுபவத்தை நமக்கு அளிக்கிறது. இப்படித்தான் என்று என்று எந்த வரையறைக்குள்ளும் இந்தத் தொடரைச் சுருக்கிவிட முடியாது. இந்த மூன்றாண்டுகளில், நெட்ஃப்ளிக்ஸ் உருவாக்கி இருக்கும் சிறந்த தொடர்களில் இதுவும் ஒன்று.

‘இட்ஸ் எ சின்’ - எச்.பி.ஒ மேக்ஸ் (மொத்த நேரம் – 4 மணி நேரம்)

1980-களில் எழுச்சியடைந்த எச்ஐவி/எய்ட்ஸ் நெருக்கடியை 1981 ஆம் ஆண்டு லண்டனுக்குச் செல்லும் பல ஓரினச்சேர்க்கையாவார்களின் கதைகள் மூலம் ரஸ்ஸல் டி. டேவிஸ் நம்முள் கடத்திவிடுகிறார். இது நாம் அடிக்கடி பார்த்திருக்கும் எய்ட்ஸ் குறித்த சோகமயமான படைப்புகளைப் போன்றது அல்ல. இது தனித்துவமானது; புத்திசாலித்தனம் நிறைந்தது. இது சிக்கலான, குறிப்பாகச் சவாலான காலங்களில் வாழும் / இறக்கும் மனிதர்களின் கதை.

இது தமக்கு எய்ட்ஸ் உள்ளதாகக் கண்டறியப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையைக் குறித்த படைப்பு அல்ல; தமக்கு எய்ட்ஸ் வந்திருக்குமோ என்கிற அச்சத்தில் வாழும் மனிதர்களின் துயர வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் படைப்பு இது.

‘அலியாஸ் கிரேஸ்’ - நெட்ஃபிளிக்ஸ் (மொத்த நேரம் – 4 மணி நேரம் 25 நிமிடங்கள்)

ஓர் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடரை எடுத்திருக்கிறார்கள். 15 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாழும் அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு பணிப்பெண்ணின் வாழ்க்கையைப் பேசும் தொடர் இது. தன்னுடைய முதலாளியையும், அவருடைய மனைவியையும் கொலை செய்தார் என்பது அந்தப் பெண்ணின் மீது சுமத்தப்பட்ட குற்றம். அவர் கொலை செய்திருக்கலாம், செய்யாமலும் இருந்திருக்கலாம்.

எதுவும் உறுதியாக எவருக்கும் தெரியாது. இருப்பினும், அவர் 15 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கிறார். எதிர்பாராத சூழல்களில் சிக்கிக்கொள்ளுவதால் ஏற்படும் அதிர்ச்சியின் வலியை இந்தத் தொடர் அழுத்தமாகப் பதிவு செய்கிறது. முக்கியமாக, இவ்வுலகில் ஆண்களின் கண்ணோட்டத்தில் நிராகரிக்கப்படும் பெண்களின் கதைகளை / வாழ்க்கையை இது நம் முகத்தில் அறைந்து சொல்கிறது.

‘வென் தே ஸீ அஸ்’ - நெட்ஃபிளிக்ஸ் (மொத்த நேரம் – 4 மணி நேரம் 56 நிமிடங்கள்)

உண்மைச் சம்பவங்களில் அடிப்படையில் எடுக்கப்பட்டும் இதுபோன்ற கதைகளில், ஆரம்பத்தில் உண்மை எனத் தவறாகச் சித்தரிக்கப்படும் ‘தரவுகள் / சம்பவங்கள்’ இறுதியில் சரியாக உணரப்படும் ’உண்மைகளை’ விட அதிகமான தாக்கத்தை நம்மிடையே ஏற்படுத்திவிடுகின்றன. இது நம்முடைய நிஜ வாழ்க்கைக்கும் பொருந்தும். 1989-ல் நியூயார்க் நகரப் பூங்காவில் ஒரு வெள்ளைக்கார பெண்ணின் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்படுகிறது. அந்தக் கொடூர வன்முறையை நிகழ்த்தினார்கள் என்று லத்தீன், கறுப்பினச் சிறுவர்களின் மீது தவறாகக் குற்றம் சுமத்தப்படுகிறது.

சென்ட்ரல் பார்க் ஃபைவ் என்று அழைக்கப்பட்ட அந்த அப்பாவிச் சிறுவர்களின் துயர வாழ்க்கையை, அவர்கள் சந்தித்த இன்னல்களை, பொதுச் சமூகம் அவர்களுக்கு அளித்த அவமானத்தை இந்தத் தொடர் அழுத்தமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறது.

திரைமொழிக்காக என்று எவ்விதமான கற்பனையையும் நாடகத்தனத்தையும் கலக்காமல், உண்மையை அதன் போக்கில் அப்படியே பதிவுசெய்து நம் கண்முன் விரிப்பதன் மூலம், எளியவர்களை எளிதில் குற்றவாளிகளாகக் கருதத் துணியும் இந்தச் சமூகத்தின் அவலப் புத்தி நமக்கு உணர்த்தப்படுகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடர் இது!

Related Stories

No stories found.