திரைப்பார்வை; எப்படி இருக்கிறது தனுஷின் அத்ரங்கி ரே?

திரைப்பார்வை; எப்படி இருக்கிறது தனுஷின் அத்ரங்கி ரே?

ராஞ்சனா, ஷமிதாப் படங்களைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் மூன்றாவது பாலிவுட் படம் ‘அத்ரங்கி ரே’

தனுஷை வைத்து ராஞ்சனாவை இயக்கிய ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இந்தியில் ’அத்ரங்கி ரே’யாகவும், தமிழில் ‘கலாட்டா கல்யாணம்’ எனவும் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி இருக்கும் படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.

கடும் மழையில் வில்லன்கள் துரத்த ஓடிக்கொண்டே அறிமுகம் ஆகிறார் நாயகி சாரா அலிகான். பிஹாரில் நடக்கும் கதைக்களத்தில் டெங்கு ஒழிப்புப் பணிக்காக வருகிறார் மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு மாணவர் தனுஷ். ரயில்வே ஸ்டேஷனில் வில்லன்கள் மீது சோடா பாட்டிலை வீசி தப்பிக்க முயல்பவரைத் துரத்திப் பிடித்து வலுக்கட்டாயமாக வீட்டுக்கு இழுத்துச் செல்கின்றனர். ரயில் நிலையத்தில் ஆச்சரியத்தோடு இந்தக் காட்சிகளைப் பார்க்கும் சாதாரண மனிதராக அறிமுகமாகிறார் தனுஷ்.

காதலனோடு ஏற்கெனவே 22 முறை வீட்டை விட்டு வெளியேறி, குடும்பத்தினரால் பிடிபட்ட சாரா அலிகானுக்கும், முன் பின் அறிமுகமே இல்லாத தனுஷுக்கும் கட்டாயக் கல்யாணம் செய்துவைக்கின்றனர் சாராவின் குடும்பத்தினர். ’இனி மாமியார் வீட்டுல இருந்து ஓடிக்கிட்டே இரு’ என ஆசீர்வதித்தும் தனுஷோடு ரயில் ஏற்றுகிறார்கள்.

ஏற்கெனவே, மருத்துவக்கல்லூரி டீனின் மகளைக் காதலித்து வந்த தனுஷ், அடுத்தவாரம் நிச்சயதார்த்தம் இருந்த நிலையில் தான் கட்டாயக் திருமணத்தில் சிக்கிக்கொண்டார். இருவருமே வேறு உறவுகளுக்காக காத்திருந்த நிலையில், தம்பதிக்குள் மலரும் காதலும், அதில் அக்‌ஷய்குமார் மூலம் சந்திக்கும் வினோத பிரச்சினையுமே கதைக்களம்.

தனுஷ் நடிப்பில் அசத்துகிறார். அசுரன், பட்டாஸ், கர்ணன் படங்களில் வலுவான பாத்திரம் ஏற்றவர், இதில் முதல்பாதியில் கொஞ்சம் கலகலப்பானவராகவும், பின்பகுதியில் மனித உணர்வுகளின் பிரதிபலிப்பாகவும் வலம்வருகிறார். மொத்தப்படத்தையும் அவரும், நாயகி சாராவுமே தூக்கிச் சுமக்கின்றனர். பட்டாம்பூச்சிபோல் வந்து செல்லும் நாயகிகளுக்கு மத்தியில் மிக வலுவான பாத்திரத்தை ஏற்றிருக்கிறார் சாரா. அதில் கவனிக்கவும் வைக்கிறார்.

“லவ்வுன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? நாலு அஞ்சு தல உருளணும்... இரண்டு வீட்டுக்காரங்களும் அடிச்சுக்கணும். இரண்டு குடும்பமும் பத்திக்கிட்டு எரியணும்” என படம் நெடுகிலும் லொட, லொடவென லாரா பேசிக்கொண்டே இருப்பது அழகு. கோபம், உணர்ச்சி, காதல் என கலவையான மனநிலையை தனுஷ் நேர்த்தியாக வெளிப்படுத்துகிறார். அக்‌ஷய் குமார் வழக்கம்போல் நிறைவான நடிப்பைக் கொடுக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசைதான் படத்துக்கு மிகப்பெரிய பலம். ஏய் சக்களத்தி ...முரளிமோகா குழலிசையிலே பாடல்கள் ஈர்க்கின்றன.

படத்தின் மிகப்பெரிய குறையே திரைக்கதைதான். அது ஆங்காங்கே ரசிக மனநிலைக்கு பிரேக் போடுகிறது. தனுஷின் காதலிக்கு, சாராவுடன் நடந்த திருமணம் எப்படித் தெரிந்தது?, முன்பின் தெரியாதவருக்கே சாராவைக் கட்டிக் கொடுத்தவர்கள் ஏன் காதலனுக்கு கட்டிக்கொடுக்கவில்லை? மனநோயாளியை மருத்துவ ரீதியாக மீட்காமல் சுற்றிவளைத்து கதையை நகர்த்தியது ஏன்? என்பதுபோன்ற இடங்களில் கதை தொக்கி நிற்கிறது.

தனுஷின் நண்பனாக வரும் மதுசூதனன் பாத்திரம் ஈர்க்கிறது. முக்கோணக் காதல் கதையாக ட்ரெய்லரில் பார்த்த காட்சிகளில் இருந்து மாறுபட்டு, படம் தொடங்கி ஒரு மணி நேரத்திற்குப் பின்பு திரையில் வரும் காட்சிகள் மிகப்பெரிய திருப்புமுனை. ஆனால் அதை சரிவரக் கையாளாமல் ஆங்காங்கே சொதப்பல்கள் எட்டிப் பார்க்கிறது. தனுஷ், அக்‌ஷய்குமாருக்கு இணையாக படத்தில் நாயகி சாரா அலிகானும் ஸ்கோர் செய்கிறார். முள்ளின் மேல் நிற்பதுபோன்ற வலுவான பாத்திரத்தை பெண்ணிய உணர்வோடும், துள்ளலோடும் சேர்ந்தே கடத்துகிறார். க்ளைமேக்ஸ் காட்சி மிகவும் ரசனை. ஆனால், அதுவரை காத்திருப்பதே தண்டனை போல் துரத்துகிறது திரைக்கதையின் இரண்டாம் பாகம்.

தன் காதலியை துறந்துவிட்டு, மனைவியின் பின்னாலேயே அலையும் காட்சிகளில் தனுஷ் மிளிர்கிறார். படத்தின் குறையாக துரத்தும் திரைக்கதையின் தொய்வுகளைக் கொஞ்சம் தூசிதட்டி வந்திருந்தால் கலாட்டா கல்யாணம் கலக்கல் கல்யாணமாகவே இருந்திருக்கும்!

Related Stories

No stories found.