ஓடிடி உலகம்: கண்மூடித்தனமான தேசபக்தியின் கறுப்புப் பக்கங்கள்!

All Quiet on the Western Front #Netflix
ஓடிடி உலகம்: கண்மூடித்தனமான தேசபக்தியின் கறுப்புப் பக்கங்கள்!

இன்றைய சர்வதேச அன்றாடங்களின் தவிர்க்க முடியாத கேள்விகளில் ஒன்றாக ‘மூன்றாம் உலகப்போர் மூளுமா’ என்பதும் நீடித்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல் மட்டுமன்றி பல்வேறு நாடுகளின் சர்வதேச எல்லைகளும் கணப்புடன் நீறு பூத்திருக்கின்றன. தேசத்தை ஆள்வோரும் அவர்களின் ஆதரவாளர்களும் தங்களது அதிகார சுயநலத்துக்காக, போலி தேசபக்தியின் பெயரில் நாட்டு மக்களை வெறியூட்டி வருவதும் நடக்கிறது. வாழும் மக்களின் நலம் அவர்களின் உரிமை, மாண்பு ஆகியவை பின்தள்ளப்பட்டு நிலம், எல்லை, எதிரி, வீரம் என உசுப்பேற்றப்பட்டு வருகிறார்கள். இந்தக் கண்மூடித்தனமான தேசபக்தியின் கறுப்புப் பக்கங்களில் வெளிச்சம் பாய்ச்சும் முயற்சிகளில் ஒன்றாக, முதலாம் உலகப்போரின் உண்மை அவலங்களில் தோய்த்ததாக ’ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் ஃபிரன்ட்’ என்ற திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி உள்ளது.

முதல் உலகப்போரின் (1914-1918) மூன்றாவது ஆண்டில் கதை தொடங்குகிறது. ஜெர்மன் - பிரான்ஸ் எல்லை அகழிகளில் பதுங்கியிருந்து எதிரிகளுடன் மோதும் பிரம்மாண்ட சண்டைக் காட்சிகளில் திரைப்படம் விரிகிறது. முனையில் கத்தி பொருத்திய துப்பாக்கியுடன் எதிரிகளுடன் நேருக்குநேர் மோதும் உக்கிரமான போரில் அன்றாடம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் களப்பலியாகிறார்கள். இந்த அவலம் அறியப்பெறாது வடக்கு ஜெர்மனியின் இன்னொரு மூலையில் பதின்ம வயது இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஆவலாதியாய் அலைகிறார்கள்.

போர் சாகசம் மற்றும் தேசபக்தியின் பெயரிலான கவர்ச்சியும் எழுச்சியுமான உரைகளைக் கேட்டு விரிந்த தோள்களுடன் ராணுவத்தில் அணிவகுக்கின்றனர். அவர்களில் தனது பள்ளிப் பருவத்து நண்பர்களுடன் கைகோர்க்கும் பால் பாமர் என்ற 20 வயது இளைஞனின் பார்வையில் கதை நகர்கிறது. உற்சாகமாகப் போர்முனைக்குச் செல்லும் இந்த இளைஞர்களுக்குக் கிட்டும் கசப்பான அனுபவங்கள், பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் போர் என்பதன் மீதான முலாமை நொறுக்குகின்றன.

போர்களின் பின்னணியிலான திரைப்படங்களில் பெரும்பாலும் அவை ரொமான்டிசைஸ் செய்யப்படுவதாகவே இருக்கும். அல்லது ஹாலிவுட் மசாலா பாணியிலான கற்பனைக் காட்சிகளே கலந்திருக்கும். ஆனால் ’ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் ஃபிரன்ட்’ அப்படியே போர்க்கள யதார்த்தத்தை ரத்தமும் சதையுமாகப் பிரதிபலிக்கும் திரைப்படங்களின் வரிசையில் சேர்கிறது.

வயதுக்கே உரிய துடிப்புடன் போர்க்களம் விரையும் பால் பாமர் மற்றும் நண்பர்களுக்கு அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. எதிரிகளின் குண்டு மழைக்கு மத்தியில் சுருண்டு விழும் சக வீரர்களின் பரிதாபம் அவர்களை உலுக்குகிறது. பெரியளவில் ராணுவப் பயிற்சி இல்லாது, தேசபக்தியின் கவர்ச்சியிலும் இளமையின் தினவிலும் ராணுவத்தில் சேர்ந்த இள ரத்தம் சக வீரர்களின் முகத்தில் தெறிக்கிறது.

எல்லை நெடுக மைல் கணக்கில் நீளும் குறுகிய அகழிகளில் மாதக்கணக்காகக் குளிரிலும், மழையிலும் சாமானிய இளைஞர்கள் வாடுகிறார்கள். அவர்களைத் தங்களது வசீகர உரைகளால் போர்களத்துக்கு அனுப்பிய தளபதிகளும் தலைவர்களும் வழக்கம்போல செழிப்பில் திளைக்கிறார்கள். நவீன தகவல் தொடர்பும், ஆயுதத் தளவாடங்களும் வாய்க்கப்பெறாது, நேருக்கு நேராக போர் வீரர்கள் மோதிய உலகின் கடைசி பெரும் போரான முதலாம் உலகப்போரின் உலுக்கும் அவலத்தை இந்த ஜெர்மானிய திரைப்படம் வியப்பூட்டும் வகையில் திரையில் வடித்திருக்கிறது.

எல்லையின் இருவேறு திசைகளிலிருந்து எதிரெதிரே மோதும் வீரர்கள் நிராயுதபாணி மோதலில் இறங்கும்போது இந்த யதார்த்தத்தின் கலையழகு வேறாகத் திரையில் பிரதிபலிக்கிறது. எதிரி வீரனை கையால் அடித்துக்கொல்லும் பால் பாமர், அந்த வீரன் உயிர் பிரியாது இழுத்துக்கொண்டிருக்கும் பரிதாபத்தைக் காணச் சகியாது அவனிடம் மன்னிப்பு கேட்டு கதறும் காட்சி இதற்கு ஓர் உதாரணம். போரின் கோரத்தால் தாக்குண்டு பின்வாங்க முயலும் இளைஞர்கள் அதற்கு வாய்ப்பில்லாது கண்மூடித்தனமாய் எதிரிகள் மீது பாய்வதும், கண் முன்பாகக் கொல்லப்படும் நண்பர்களை கண்டு அலறுவதுமாகப் புனித பசுவாகப் பாவிக்கப்படும் ராணுவ வீரர்களையும் படம் பிராண்டுகிறது. பால் பாமர் வேடத்தில் தோன்றும் ஃபெலிக்ஸ் கேமரர், கதாபாத்திரங்களை உயிரோட்டமாக நடமாடச் செய்த இயக்குநர் எட்வர்ர்ட் பெர்கெர் ஆகியோர் ஆஸ்கர் அங்கீகாரத்துக்கு தீவிரமாய் உழைத்திருக்கிறார்கள்.

முதலாம் உலகப்போரில் ஜெர்மனிய வீரராக களம் கண்ட எரிக் மரியா ரிமார்க் தனது அனுபவங்களின் அடிப்படையில் 1928-ல் பத்திரிக்கையில் எழுதிய தொடர், அடுத்த ஆண்டே நாவலாக வெளியாகி விற்பனை சக்கைப்போடு போட்டது. இதன் ஆங்கிலப் பதிப்பு அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாடுகளில் லட்சக்கணக்கில் விற்றுத் தீர்த்தது. நாவலின் ஆழத்துக்கு மெருகு சேர்க்கும் வகையில் அதே தலைப்பிலான ஜெர்மானியத் திரைப்படம் 1930-ல் வெளியானது. சிறந்த திரைப்படம் மற்றும் இயக்கத்துக்கான ஆஸ்கர் விருதுகளை அள்ளிய இந்தக் கதை, 1979-ல் தொலைக்காட்சித் திரைப்படமாகவும் வெளியானது. தற்போது நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி இருக்கும் மூன்றாவது திரைப் பதிப்பு மூல நாவலைத் தழுவியதாகவும், முந்தைய திரைப்படங்களின் மேம்பட்ட வடிவாகவும் வரவேற்பு பெற்றிருக்கிறது.

நாவலும் முதல் திரைப்படமும், போர்-எதிர் படைப்பாக அவை வெளியான காலத்தில் கடும் கண்டனத்தைச் சந்தித்தவை. தேசபக்திக்கு ஊறு விளைவிப்பவை என்று ஜெர்மனியில் மட்டுமன்றி, பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் நாவல் தடைசெய்யப்பட்டது. ஹிட்லரின் தொடக்க காலத்தில் நாஜிக்களால் பொதுவெளியில் நாவல் கொளுத்தப்பட்டது. திரைப்படம் வெளியான அரங்குகள் மற்றும் பார்வையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன. ஆனால் போலி தேசபக்தி மற்றும் போருக்கு எதிரான உன்னதப் படைப்பு வெளியான அதே ஜெர்மனியிலிருந்து, அடுத்த சில வருடங்களில் ஹிட்லரின் தலைமையிலான நாஜிக்கள் தேசபக்தி மற்றும் போரின் பெயரிலான கொடூரங்களைக் கட்டவிழ்த்தது பெரும் நகைமுரண்!

மூல நாவல் மற்றும் முதல் திரைப்படத்தின் கதை சொல்லலில் இருந்து தற்போதைய ’ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் ஃபிரன்ட்’, தழுவலின் பெயரில் கணிசமான விலகலும் கண்டிருக்கிறது. போர்க்களத்தை முதல் முறையாக தரிசிக்கும் இளைஞர்கள் பொது சமூகத்துக்கு திரும்பும்போது பெரிதும் அந்நியப்பட்டு நிற்பது உள்ளிட்ட சித்தரிப்புகள் புதிய திரைப்படத்தில் காணோம். ஆனால் சாமானிய வாழ்க்கைக்கு ஏங்கும் போர்க்கள வீரர்களின் பரிதவிப்பைக் காட்சிப்படுத்தியதில் புதிய திரைப்படம் வேறுபட்டு நிற்கிறது. பிரம்மாண்ட காட்சியாக்கமும், நவீன திரை உத்திகளுமாக, நூற்றாண்டுக்கு முந்தைய கதையை தரமான படைப்பாக தந்திருக்கின்றன.

வரலாற்று ஆர்வலர்கள், போர் திரைப்பட ரசிகர்கள் மட்டுமன்றி போருக்கு எதிரான அறைகூவலையும், மானுடத்தின் தத்தளிப்பையும் தரிசிக்க விரும்புவோரும் இத்திரைப்படத்துக்கு நேரம் ஒதுக்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in