‘பணத்தேவைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன்' - சங்கடம் பகிரும் சரிகா!

‘பணத்தேவைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன்' - சங்கடம் பகிரும் சரிகா!

சமீபத்தில் வெளியான ஓடிடி தொடரில் 30 வயது இளைஞனைக் காதலிக்கும் 60 வயது பெண் கதாபாத்திரத்தில் நடிகை சரிகா நடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

புகழ்பெற்ற அமெரிக்க சீரிஸான ‘மாடர்ன் லவ்’ கதையை அடிப்படையாகக் கொண்டு அமேசான் ஓடிடி தளத்தில் 'மாடர்ன் லவ்: மும்பை' என்ற ஆந்தாலஜி தொடர் வெளியாகியுள்ளது.

இதில் ‘மை பியூட்டிஃபுல் ரிங்கிள்' என்ற தொடரும் ஒன்று. இதில் 60 வயதான பெண் 30 வயது இளைஞன் மீது காதல் வயப்படுவது போலான கதை உள்ளது. இந்தப் பாத்திரத்தில் சரிகா சிறப்பாக நடித்திருப்பதாகப் பாராட்டுகள் குவிகின்றன. கூடவே, இந்த வயதில் இது தேவையா எனும் விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.

இந்த தொடர் குறித்தும், ஓடிடியில் நடிப்பது பற்றியும் சரிகா தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதில், “கரோனா காலம், ஊரடங்கு என கடந்த சில ஆண்டுகளாகத் திரையில் நடிக்காமல் என் வாழ்க்கை வீணாகி விட்டது. கையிலிருந்த சேமிப்பும் கரைந்துவிட்டது. இதனால் பணத்தேவைக்காக நான் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அதில் தினமும் 2,000 ரூபாய் மட்டுமே கிடைத்து வந்தது. இது என் செலவுக்குப் போதவில்லை என்பதால் மீண்டும் திரைத்துறைக்கு நடிக்க முடிவு செய்தேன்.

சினிமாவில் 50 வயதைக் கடந்தவர்களுக்கு எப்போதாவதுதான் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க கிடைக்கிறது. அதிலும் அம்மா வேடங்களில் நடிக்க அவர்கள் மீது திணிக்கிறார்கள். இந்தக் காரணங்களாலேயே நான் சில காலம் சினிமாவைவிட்டு ஒதுங்கியிருந்தேன்.

மீண்டும் நடிக்க முடிவு எடுத்தபோது என்னை விட ஓரிரு வயது மட்டுமே குறைவான கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு வந்தது. அதையெல்லாம் தவிர்த்துவிட்டேன். எனக்குக் கதாபாத்திரம்தான் முக்கியம். அப்படித்தான் எனக்கு இந்த ‘மாடர்ன் லவ்’ சீரிஸ் கதையும் வந்தது. தற்போதைய சூழலில் ஓடிடி எல்லா விதமான வாய்ப்புகளையும் திரைக் கலைஞர்களுக்கு உருவாக்கியுள்ளது எனும் நிலையில் இந்தக் கதையில் நடிக்க நான் தயங்கவில்லை.

இந்த கதை குறித்து பலர் பலவிதமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள். அவற்றை நான் கண்டுகொள்வதில்லை. அந்தப் பெண்ணின் மனநிலையில் இருந்து பார்த்தால் மட்டுமே கதையைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். மற்றபடி தேவையில்லாத விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை” என சரிகா தெரிவித்துள்ளார்.

சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வரும் சரிகா நடிப்புக்காக இரண்டு முறை தேசிய விருதும், 'ஹே ராம்' படத்தின் ஆடை வடிவமைப்புக்காக ஒரு முறை தேசிய விருதும் பெற்றுள்ளார். மும்பையில் வசித்துவரும் சரிகா லாக்டவுன் சமயத்தில் தனக்குப் பொருளாதார பிரச்சினை இருந்தபோதும் மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்க்ஷரா உதவ முன்வந்தபோது அதை மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in