முதுமலையில் அதிகரித்து வரும் பாறு கழுகுகள்!

பறவை ஆர்வலர்கள், வனத்துறையினர் மகிழ்ச்சி
முதுமலையில் அதிகரித்து வரும் பாறு கழுகுகள்!

முதுமலையில் பாறு எனப்படும் பிணம் தின்னி கழுகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பறவை ஆர்வலர்கள் மற்றும் வனத்துறையினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாறு எனப்படும் பிணம் தின்னி கழுகுகள் வெண் முதுகு, கருங்கழுத்து, செந்தலை, மஞ்சள் முகம் ஆகிய நான்கு வகைகள் உள்ளன இவை வட இந்தியாவில் மட்டுமின்றி தென்னிந்திய காடுகளிலும் காணப்பட்டன. கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டு விலங்கினங்கள் இறந்திருந்தாலும், அந்த சடலத்தை உண்டு செரித்து மற்ற உயிர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கும் அசாத்திய திறன் கொண்டவை இந்தக் கழுகுகள். இதனாலேயே பிணம் தின்னி கழுகுகள் இயற்கை துப்புரவாளன் என அழைக்கப்படுகிறது. ஆனால், கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படும் டைக்ளோ பினேக் எனப்படும் வலிநீக்கி மருந்து, பிணம் தின்னி கழுகுகளின் அழிவுக்கு காரணமாக அமைந்தது. இதனால், தென்னிந்தியாவில் இந்த 4 வகை பிணம் தின்னி கழுகுகளின் எண்ணிக்கை வெறும் 300 என்ற அளவுக்குள் சுருங்கிப் போனதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த வகைக் கழுகுகள் முதுமலை புலிகள் காப்பகத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வருவது சற்றே ஆறுதல் அளிக்கும் விஷயம்.

இந்தக் கழுகுகளின் கடைசிப் புகலிடமாக முதுமலையின் சீகூர் பீடபூமி விளங்குகிறது. இந்த வகை கழுகுகளை பாதுகாக்க அரசும், ஆய்வாளர்களும், தன்னார்வலர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, செந்தலை மற்றும் வெண்முதுகு வகை பிணம் தின்னி கழுகுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகவும் குறைந்து அவை அரிதாகி வருவதாக பறவை ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதுமலையில் வெண்முதுகு கழுகு கூட்டம் ஒன்று தற்போது தென்பட்டிருப்பது சுற்றுச்சூழல் மற்றும் பறவை ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கழுகுகள் கூட்டமாக, இறந்த விலங்கைச் சாப்பிடும் வீடியோ ஒன்றை முதுமலை புலிகள் காப்பகம் வெளியிட்டுள்ளது.

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மாயாறுப் படுகையில் பாறு கழுகுகள் குறித்து ஆய்வு செய்து வரும் அருளகம் அமைப்பின் செயலாளர் சு.பாரதிதாசன் இதுபற்றி நம்மிடம் கூறும்போது, “இந்தப் பகுதியில் நான்கு வகையான பாறு கழுகளுமே தென்படுகின்றன. அண்மைக் காலமாக பாறு கழுகுகளின் எண்ணிக்கை முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிள்ள மாயாறுப் படுகையில் அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.

இங்கே ஆண்டு தோறும் சுமார் 40 வெண்முதுகுப் பாறு கழுகுக் கூடுகள் அதிகரித்தும், 6 கருங்கழுத்துப் பாறு கழுகுகள் இனப்பெருக்கம் செய்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in