பழங்குடியின குழந்தைகள் மத்தியில் ஓர் பசுமைப் பிரச்சாரம்!

பழங்குடியின குழந்தைகள் மத்தியில் ஓர் பசுமைப் பிரச்சாரம்!

நீலகிரி மாவட்ட பழங்குடி குழந்தைகளை சோலை மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க ஊக்கப்படுத்தி வருகிறது, ‘பகல்கோடுமந்து சூழல் மேம்பாட்டு குழு’. இதன் மூலம், பழங்குடி மக்களுக்கு சூழலியல் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம், காலநிலை மாற்றம் காரணமாக பேரிடர்களைச் சந்தித்து வருகிறது. 2009-2019 வரையிலான பத்தாண்டுகளில் இம் மாவட்டத்தை பேரிடர் இருமுறை புரட்டிப் போட்டது. 2 முறையும் சேர்த்து மொத்தமாய் 50-க்கும் மேற்பட்ட உயிர்களை பறிகொடுத்தது நீலகிரி மலைப் பிரதேசம். சுற்றுலாத் தலமான நீலகிரியில், இயற்கை இஷ்டம்போல் சூறையாடப் பட்டதாலேயே இந்தப் பாதிப்புகள்.

வன அழிப்பும்... தண்ணீர் பஞ்சமும்!

தமிழகத்தின் தண்ணீர் தொட்டி நீலகிரி. இங்கு உற்பத்தியாகும் நீரானாது பவானி ஆறு மூலம் காவிரிப் படுகையையே வளமாக்குகிறது. ஆனால், தொடர் வன அழிப்பால் நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்து வருகிறது. மலைகளில் வழிந்து வந்த நீர், வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகளால் திசை மாறி சாலைகளிலும், சாக்கடைகளையும் சென்று சேருகிறது. இதனால் தமிழகத்தின் தண்ணீர் தொட்டியில், இப்போது போதிய அளவு தண்ணீர் இல்லை என்கிறது அரசு அறிக்கை.

கடந்த காலங்களில் மரம் நடுகிறோம் என்ற பெயரில் கற்பூரம், சீகை உள்ளிட்ட அந்நிய மரங்களை நட்டதால், கொஞ்ச நஞ்சம் இருந்த நீரையும் பறிகொடுத்துவிட்டு மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது நீலகிரி. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு பழங்குடி மக்களோடு கைகோத்து, இயற்கையைப் பாதுகாக்க களமிறங்கி இருக்கிறது ‘பகல்கோடுமந்து சூழல் மேம்பாட்டுக் குழு’ இந்தக் குழுவினர் வனத் துறையுடன் இணைந்து, பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கவும் சூழலியலைப் பாதுகாக்கவும் பல்வேறு பணிகளையும் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் முன்னெடுத்து வருகிறார்கள்.

சோலை மரங்கள், பழங்குடிகளின் பிறப்பு முதல் இறப்பு வரையும் இறந்த பிறகும் அவர்களின் கலாச்சார சடங்குகளைச் செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த சோலை மரங்களை நட்டு வளர்க்கும் பணியை, பழங்குடியின குழந்தைகள் மத்தியில் ஊக்குவித்து வருகிறது பகல்கோடுமந்து சூழல் மேம்பாட்டுக் குழு.

இந்தக் குழுவினர், அருகில் உள்ள கிராமங்களில் உள்ள பழங்குடியின குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவர்களிடமே சோலை மரக் கன்றுகளைக் கொடுத்து நடவு செய்ய வைக்கிறார்கள்.

பகல்கோடுமந்து சூழல் மேம்பாட்டுக் குழுவின் தலைவர் நார்தே குட்டன்
பகல்கோடுமந்து சூழல் மேம்பாட்டுக் குழுவின் தலைவர் நார்தே குட்டன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய பகல்கோடுமந்து சூழல் மேம்பாட்டுக் குழுவின் தலைவர் நார்தே குட்டன், “குழந்தைகள் மிகவும் ஆர்வமுடன் தினமும் தாங்கள் நடவு செய்த செடிகளை பார்வையிடுவதும் தண்ணீர் ஊற்றிப் பராமரிப்பதுமாய் இருக்கிறார்கள். இவர்கள் நட்டு வளர்க்கும் இந்த மரங்கள் இவர்களின் சந்ததிக்குத்தான் பலன் தரப்போகின்றன. எனவே, அனைவரும் அவர்களது வருங்கால சந்ததி வளமாக இருக்க சோலை மரக் கன்றுகளை நட்டுப் பாதுகாக்க வேண்டும் என்று இந்தப் பிள்ளைகள் மத்தியில் நாங்கள் பிரச்சாரம் செய்து வருகிறோம். அதற்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in