சாப்பிடாமக்கூட இருந்துருவேன்... ஜோக் எழுதாம இருக்க முடியாது!- வாசுதேவனின் வாழ்நாள் சாதனை

சாப்பிடாமக்கூட இருந்துருவேன்... ஜோக் எழுதாம இருக்க முடியாது!- வாசுதேவனின் வாழ்நாள் சாதனை

கரு.முத்து
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் இருக்கிறது சீர்காழி வி.ரேவதி என்று வாசிப்பு உலகத்தால் அறியப்பட்ட கி.வாசுதேவனின் வீடு. ரேவதி என்பது அவரது மனைவியின் பெயர். நாம் அங்கு போனபோதுகூட வீட்டு வாசற்படியில் அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறார் வாசுதேவன். சராசரி குடும்பஸ்தரான அவரது வீட்டின் உள்ளே வரவேற்பறையில் கிடக்கும் நாற்காலி, நடுநாயகமாக தொங்கும் ஊஞ்சல், சிறிய ஸ்டூல், அறையின் உள்ளே கட்டில், அலமாரி என எல்லா இடங்களிலும் புத்தகங்களும் பத்திரிகைகளும் நிரவிக் கிடக்கின்றன. மேலே இருக்கும் வீட்டின் லாப்ஃட்களிலும் புத்தகங்கள் அடைந்து கிடக்கின்றன. மார்க்கெட்டில் இருக்கும் அனைத்துப் பத்திரிகளையும் வாங்கிவிடும் வாசுதேவன், அவை அனைத்துக்கும் நகைச்சுவை துணுக்குகளை எழுதிக்கொண்டே இருக்கிறார். இது இவரது 33 ஆண்டுகால தவம்.

வாசுதேவன் வீட்டில் நானும் அவரும் பேசிக்கொண்டிருக்கிறோம். எங்கள் இருவருக்கும் வாசுதேவனின் மனைவி ரேவதி காபி கொண்டு வருகிறார். “இப்பதான் சாப்பிட்டேன்... குடிக்க தண்ணி மட்டும் குடுங்க” என்கிறேன் நான்.

“இதுவும் தண்ணி மாதிரிதான் இருக்கும். சும்மா குடிங்க” என்று நகைச்சுவையைத் தெளிக்கிறார் வாசு.

பிப்ரவரி கடைசி வரையிலும் பதினோராயிரம் ஜோக்குகளுக்கு மேல் எழுதி முடித்திருக்கிறாராம் வாசுதேவன். ஆனந்தவிகடன் தொடங்கி அண்மையில் தனது ஒரு வயதை பூர்த்தி செய்திருக்கும் காமதேனு வரைக்கும் சரமாரியாக எழுதித்தள்ளுகிறார். பத்தாயிரம் ஜோக்குகளைக் கடந்ததற்காக, இவருக்கு ‘டாப் ஜோக் ரைட்டர்’ என்ற அங்கீகாரத்தை அளித்திருக்கிறது லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in