கடும் சூறாவளிக்காற்றுடன் கனமழை; நிறுத்தப்பட்ட மின்சாரம் - இருளில் மூழ்கியது ஏனாம்

மழையால் முறிந்து விழுந்த மரங்கள்
மழையால் முறிந்து விழுந்த மரங்கள்

புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் காரணமாக பல இடங்களில் நூற்றுக்கு மேற்பட்ட மரங்கள், விளம்பர பலகைகள் முறிந்து விழுந்துள்ளதால் பாதுகாப்பு கருதி மின் இணைப்பு முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தின் பிராந்திய பகுதிகளாக காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இதில் ஏனாம் பகுதி ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகில் அமைந்துள்ளது. மாஹே பகுதி கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. ஏனாம் பிராந்தியத்தில் இன்று காலை பலத்த சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், திடீரென பெய்த இந்த மழை காரணமாக பொதுமக்கள் சற்றே நிம்மதி அடைந்தனர். ஆனால் கடுமையான சூறாவளி காற்று காரணமாக நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

போர்க்களம் போல் காட்சியளிக்கும் ஏனாம் பகுதி
போர்க்களம் போல் காட்சியளிக்கும் ஏனாம் பகுதி

இதனால் பாதுகாப்பு கருதி ஏனாம் பிராந்தியம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை தற்போது நின்றுவிட்ட போதும் அப்பகுதி முழுவதும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் காணப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் ஏனாம் சட்டப்பேரவை தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்குள்ள டாக்டர் எஸ்ஆர்கே கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றிலும் மழை நீர் தேங்கி இருப்பதால் பாதுகாப்பு கருதி சாலை மூடப்பட்டுள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இருளில் மூழ்கும் நிலை
மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இருளில் மூழ்கும் நிலை

இதேபோல் கோடை விடுமுறையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த பொருட்காட்சி கூடத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சி அறிவிப்பு பேனர்கள் அனைத்தும் சூறாவளி காற்றில் முறிந்து விழுந்துள்ளன. தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளில், பழமையான மரங்கள் விழுந்து சுற்றுச்சுவர்கள் உடைந்துள்ளன. காலை 4 மணி முதல் 7 மணி வரை 4.5 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏனாம் பகுதி தற்போது இருளில் மூழ்கும் சூழல் உருவாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in