மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: உச்ச நீதிமன்றத்தை நாடினார் புகார் கூறிய பெண்!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது பாலியல் குற்றம் சாட்டிய பெண், அரசியலமைப்புச் சட்டத்தின் 361-வது பிரிவின் கீழ் ஆளுநர் குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து விடுபடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் முன்னாள் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய பெண் ஒருவர், ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் தன்னைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் புகார் அளித்தார். இந்த விவகாரம் மேற்கு வங்கம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ்
மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ்

இந்நிலையில் அரசமைப்புச் சட்டம் 361-வது பிரிவின் கீழ் ஆளுநர் குற்றவியல் நடவடிக்கையிலிருந்து விடுபடுவதை எதிர்த்து, பாலியல் புகார் கூறிய பெண், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "மேற்கு வங்க காவல் துறையால் இந்த வழக்கு குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பிரிவு 361-ன் கீழ் தன் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டிலிருந்து ஆளுநர் தன்னை விடுவித்துக் கொள்ள அதிகாரம் உள்ளதா என்பது குறித்து வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர் தனது பதவியை விட்டு வெளியேறும் வரை காத்திருப்பது மட்டுமே ஒரே வழியாக இருக்கிறது. எனவே, மனுதாரரைப் போன்ற ஒரு பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்காமல் இருப்பதை மாற்ற முடியுமா என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்." என அவர் கோரியுள்ளார்.

பாலியல் துன்புறுத்தல் புகார்
பாலியல் துன்புறுத்தல் புகார்

அரசமைப்புச் சட்டத்தின் 361-வது பிரிவு, குடியரசுத் தலைவரோ அல்லது ஆளுநரோ தமது அதிகாரங்கள் மற்றும் கடமைகளைப் பயன்படுத்தியதற்காக எந்தவொரு நீதிமன்றத்திற்கும் பதிலளிக்கத் வேண்டியதில்லை என்று கூறுகிறது.

அரசமைப்புச் சட்டத்தின் 361 (2) மற்றும் (3) வது பிரிவுகள் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநருக்கு எதிராக அவரது பதவிக் காலத்தில் எந்தவொரு நீதிமன்றத்திலும் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர முடியாது என்று கூறுகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in