திருமணத்தை மீறிய உறவால் விபரீதம்... வங்கி பெண் மேலாளர் கழுத்தறுத்து கொலை!

மதுரா, கோபிநாத்
மதுரா, கோபிநாத்

திண்டிவனம் அருகே காருக்குள் வங்கி பெண் மேலாளரின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, ஆண் நண்பர் வாகனம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த கோபிநாத் (31) - சாந்தா பிரீத்தி (28) தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் சாந்தா பிரீத்தி மருந்து கடை நடத்தி வருகிறார். கோபிநாத் தனியார் வங்கியின் மரக்காணம் கிளையில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் விழுப்புரம் வங்கி கிளையில் வேலை பார்த்த போது அங்கு பணிபுரிந்த வங்கி ஊழியரான மதுரா (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. மதுராவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் இருவருக்கு இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது. கணவரின் திருமணத்தை மீறிய உறவை தெரிந்து கொண்ட மனைவி கண்டித்துள்ளார். ஆனாலும் கோபிநாத் தொடர்ந்து மதுராவுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மதுரா மேலாளராக பதவி உயர்வு பெற்று ரெட்டியார்பாளையம் கிளைக்கு மாறுதலானார். இதையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் வெளியே தெரியவந்ததை அடுத்து இருவரது குடும்பத்திலும் பிரச்சினை வெடித்தது.

எனவே இதுதொடர்பாக கோபிநாத் - மதுரா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இருவரும் திண்டிவனம் பகுதிக்கு சென்று விட்டு காரில் புதுச்சேரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து ஆத்திரமடைந்த கோபிநாத், மதுரா கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மதுரா பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து காரை விட்டு வெளியே வந்த கோபிநாத் செய்வதறியாமல் புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த ஒரு வாகனத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கிளியனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in