முதல்வர் பதவியிலிருந்து விலகுங்கள்; டி.கே.சிவகுமாருக்கு வழி விடுங்கள் - சித்தராமையாவை நெருக்கும் வொக்கலிகா லாபி!

டி.கே.சிவகுமார் - சித்தராமையா
டி.கே.சிவகுமார் - சித்தராமையா

கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இடையிலான பனிப்போர் புகைந்து வருவதன் மத்தியில், சிவகுமாருக்காக அவரது வொக்கலிகா சமூகத்தின் லாபி பகிரங்கமாக வெடித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வென்றதும், யார் முதல்வர் நாற்காலியில் அமர்வது என்ற அதிகாரப்போட்டி சித்தராமையா - டி.கே.சிவகுமார் இடையே மூண்டது. டெல்லி தலைமையின் தலையீட்டின் பேரில் சித்தராமையா முதல்வராகவும் டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டார். சுழற்சி அடிப்படையில் இரண்டரை வருடங்கள் கழித்து டி.கே.சிவகுமார் முதல்வர் ஆவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தபோதும், டெல்லி தலைமை அதனை உறுதி செய்யவில்லை.

கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார்
கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

இந்த அதிகாரப் போட்டி உள்ளுக்குள் கனன்று வருவதன் மத்தியில், ’முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்றும், துணை முதல்வர் டிகே சிவக்குமாருக்கு வழிவிட வேண்டும் என்றும்’ வொக்கலிகா சமூக மடாதிபதி ஒருவர் பகிரங்கமாக வலியுறுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீரசைவ-லிங்காயத், எஸ்சி-எஸ்டி மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்காக, மேலும் 3 துணை முதல்வர்கள் வேண்டும் என்று அமைச்சரவைக்குள் வளர்ந்து வரும் கோரிக்கையின் மத்தியில், வொக்கலிகா மடாதிபதியின் இந்த வேண்டுகோள் அங்கே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஸ்வ வொக்கலிகா மகாசமஸ்தான மடாதிபதியான குமார சந்திரசேகரநாத சுவாமி, பெங்களூருவில் நடைபெற்ற கெம்பேகவுடா ஜெயந்தி நிகழ்ச்சியில் இந்த வேண்டுகோளினை முன்வைத்தார். சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் முன்னிலையில், டி.கே.சிவகுமாரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த மடாதிபதி தங்களது பகிரங்க கோரிக்கையை முன்வைத்தார்.

ராகுலுடன் சித்தராமையா, டி.கே.சிவகுமார்
ராகுலுடன் சித்தராமையா, டி.கே.சிவகுமார்

மாநில காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமார், கர்நாடகத்தின் தென் பகுதிகளில் உள்ள வொக்கலிகா சமூகத்தை சேர்ந்தவர். அவர் முதல்வராக வேண்டும் என்பது வொக்கலிகா சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. “எல்லோரும் முதல்வராகி ஆட்சியை அனுபவித்துவிட்டார்கள். ஆனால் நமது டி.கே.சிவக்குமார் முதல்வர் ஆகவில்லை. எனவே அனுபவம் வாய்ந்தவரான சித்தராமையா தயவு செய்து டி.கே.சிவகுமாருக்கு வழிவிட்டு ஆசிர்வதிக்க வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள்" என்று சந்திரசேகரநாத சுவாமி கூறினார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், ’சித்தராமையா மனது வைத்தால் மட்டுமே இது நடக்கும். எனவே, டி.கே.சிவகுமாரை முதல்வராக்க சித்தராமையாவிடம் நமஸ்காரங்களுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். அவருக்கு பதிலளித்த சித்தராமையா, "காங்கிரஸ் ஒரு உயர் கட்டளை கட்சி. இங்கு ஜனநாயகமே அனைத்தையும் தீர்மானிக்கிறது. மேலிடம் என்ன சொன்னாலும் நாங்கள் பின்பற்றுவோம்" என்று பொத்தாம் பொதுவாக பேசி சமாளித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in