கோவை : கம்பீரமாக வலம் வந்த ‘அரிசி ராஜா‘ யானை திடீர் மரணம்!

கோவை : கம்பீரமாக வலம் வந்த ‘அரிசி ராஜா‘ யானை திடீர் மரணம்!

கோவை வனப்பகுதியில் கம்பீரமாக சுற்றித் திரிந்த விநாயகன் என்ற யானை கர்நாடகாவில் திடீரென மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருதமலை, தடாகம், ஆனைக்கட்டி, காரமடை பகுதிகளை பூர்வீகமாக கொண்ட யானை விநாயகனின் வழித்தடம், காடுகள் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட மாற்றங்களால் பாதிக்கப்பட்டது. அதனால் மற்ற யானைகளை போல விநாயகன் வெளியே வந்து வாழை, சோளம், அரிசி போன்றவற்றை சாப்பிட்டது.

அமைதியான குணத்தால் கோவை மக்கள் யானையை விநாயகன் என்று அழைத்து அன்பு செலுத்தினர். ஆனால், மறுபக்கம் யானை விளைநிலங்களையும், வீடுகளையும் சேதப்படுவத்துவதாக புகார்களும் எழுந்தன.

இதையடுத்து வனத்துறையினர் பட்டாசு, சைரன் வாகனங்களுடன் விநாயகனை விரட்டும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இதனால் யானையின் குணம் மாறத் தொடங்கியது. விநாயகன் தாக்கியதில் வனத்துறை ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

அதன் தொடர்ச்சியாக கடந்த 2018-ம் ஆண்டு விநாயகனை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் ரேடியோ காலர் பொருத்தி வனத்தில் விட்டனர். சில நாட்களில் ரேடியோ காலர் கீழே விழுந்ததால் விநாயகனை கண்காணிக்க முடியவில்லை.

கூடலூர் சுற்றுவட்டாரத்தில் சுற்றி வந்த விநாயகன் கர்நாடகவுக்கு சென்றது. பந்திப்பூர் புலிகள் காப்பக சுற்றுவட்டார கிராமங்களில் வலம் வரத்தொடங்கியது. விநாயகன் யானையை அங்கு ‘அக்கி ராஜா’ (அரிசி ராஜா) என்று அழைக்க தொடங்கினர்.

‘அரிசி ராஜா’ யானை விவசாய நிலங்களையும், வீடுகளையும் சேதப்படுத்துவதாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் கர்நாடக வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு விநாயகன் யானையை பிடித்தனர். அதன்பிறகு ராம்புரா யானைகள் முகாமில் மரக்கூண்டில் அடைத்தனர்.

அங்கு அதற்கு கர்ணன் என்று பெயரிட்டு வளர்ப்பு யானைக்கான பயிற்சி அளித்து வந்தனர். தொடக்கத்தில் ஆக்ரோஷமாக இருந்த யானை, பிறகு அமைதியானதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் யானையை மரக்கூண்டில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த யானை திடீரென்று உயிரிழந்து விட்டது. பிரேத பரிசோதனை முடிவில் தீவிர மாரடைப்பால் யானை உயிரிழந்தது தெரியவந்தது. சராசரி யானை இதயத்தைவிட, அதன் இதயம் 3 மடங்கு அதிக எடையில் இருந்தது.

இதயத்தில் பெரிய கட்டிகள் இருந்தன. கல்லீரலும் பாதிக்கப்பட்டது. வனத்திலும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்தான் இதற்கு காரணம் என்று வன உயிரிகள் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.  

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகள் உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. கோவையில் பிடிக்கப்பட்ட ‘மதுக்கரை மகாராஜா’, கேரளாவில் ‘கொல்லக் கொல்லி’ யானைகளும் இதேபோல வனத்துறையின் பயற்சியில் இருந்த போது தான் உயிரிழந்தன.

யானையால் மனிதன் பிரச்சினையை எதிர்கொள்ளும் போது பெரும்பாலும் யானையை பிடித்து காட்டில் விடுவதையும், கும்கியாக மாற்றுவதையும் தான் செய்கின்றனர். அந்த யானைக்கு காட்டில் உணவு கிடைக்கிறதா, அதன் வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு உள்ளனவா என்று ஆய்வு செய்வதில்லை. அப்படி செய்தால் மட்டுமே யானைகள் உயிரிழப்பை தடுத்த நிறுத்த முடியும் என்று சூழலியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in