மதுரைக்காரைங்க அலப்பறை... தலைமையாசிரியருக்கு பரிவட்டம் கட்டி, சீர்வரிசையுடன் வழியனுப்பிய கிராம மக்கள்!

சீர்வரிசைப் பொருட்களுடன், ஓய்வு பெற்ற பள்ளி தலைமையாசிரியரை ஊர்வலமாக அழைத்து சென்று மரியாதை செலுத்திய ஊர்மக்கள்
சீர்வரிசைப் பொருட்களுடன், ஓய்வு பெற்ற பள்ளி தலைமையாசிரியரை ஊர்வலமாக அழைத்து சென்று மரியாதை செலுத்திய ஊர்மக்கள்

‘ச்சும்மா சாப்பிடு மாப்ளே...’ என்று குவியலாக கறித்துண்டுகளை இலையில் வைப்பதில் துவங்கி, ’அப்பத்தா, பங்காளி, மாமன், மச்சான்’ என்று உறவு முறை சொல்லி நட்பு பாராட்டுவது வரையில் நாங்க மதுரைக்காரைங்க என்று தமிழகத்தில் தனித்து தெரிகிறார்கள் மதுரை மக்கள். ‘ஆமாம்... நாங்க பழகிட்டா உசுரைக் கூட கொடுப்போம்’ என்று இப்பவும் மதுரை பக்கம் ஏதோவொரு மூலையில் வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டிருக்கும்.

தங்கள் கிராமத்து பிள்ளைகளுக்கு கல்வியுடன் ஒழுக்கத்தையும் போதித்து, தன் பணியில் இருந்து ஓய்வு பெற்ற தலைமையாசிரியரை வழியனுப்பும் நிகழ்ச்சியின் போது, திடீரென திரண்ட கிராம மக்கள், தலைமையாசிரியைக்கு பரிவட்டம் கட்டி, சீர்வரிசைப் பொருட்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலம் அழைத்து சென்று பிரியாவிடைக் கொடுத்து வழியனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

உசிலம்பட்டி அருகேயுள்ள சின்னக்குறவகுடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
உசிலம்பட்டி அருகேயுள்ள சின்னக்குறவகுடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னக்குறவகுடி கிராமம் அமைந்துள்ளது. இங்கு 5ம் வகுப்பு வரை உள்ள ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தற்போது 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக வடுகப்பட்டியைச் சேர்ந்த செல்வசிரோன்மணி என்பவர் கடந்த 24 வருடங்களாக பணியாற்றி வந்தார். தன்னுடைய பணிக்காலத்தின் போது மாணவர்கள் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார். மேலும் கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இருந்தார்.

தலைமையாசிரியை செல்வசிரோன்மணிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு
தலைமையாசிரியை செல்வசிரோன்மணிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு

இதன் காரணமாக கிராம மக்களிடையே அவர் மீது நல்ல மரியாதை இருந்து வந்தது. தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே அவரை பாவித்து வந்த ஊர் பொதுமக்களுக்கு, கடந்த 24 ஆண்டுகளாக பள்ளியில் பணியாற்றி வந்த செல்வசிரோன்மணி கடந்த ஏப்ரல் 25ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார் என்ற தகவல் கவலையில் ஆழ்த்தியது. ஊர் ஒன்று கூடி அவ்வப்போது இதுகுறித்து தங்களது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்ட நிலையில், இத்தனை நாளும் தங்கள் குழந்தைகளின் கல்வியையும், ஒழுக்கத்தையும் உறுதிப்படுத்திய செல்வசிரோன்மணிக்கு தங்களால் ஆன மரியாதையை செலுத்துவது என முடிவு செய்தனர்.

பித்தளை குண்டா உள்ளிட்டவற்றை சீர்வரிசையாக எடுத்து வந்து மரியாதை
பித்தளை குண்டா உள்ளிட்டவற்றை சீர்வரிசையாக எடுத்து வந்து மரியாதை

இதையடுத்து ஓய்வுபெறும் நாளில் பள்ளிக்கு வந்த செல்வசிரோன்மணியை ஆச்சரியப்படுத்தும் வகையில், சீர்வரிசை பொருட்களுடன் கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க பள்ளிக்கு சென்றனர். பின்னர் அவருக்கு பல்வேறு பரிசு பொருட்களை மாணவ, மாணவிகளும் ஊர் பொதுமக்களும் வழங்கினர். அவருக்கு பரிவட்டம் கட்டிய பொதுமக்கள், அவரை ஊர் முழுவதும் ஊர்வலமாக மாலை அணிவித்து அழைத்து சென்று கோயில்களில் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டனர். பின்னர் அப்பகுதியில் தலைமையாசிரியை செல்வசிரோன்மணி கையால் மரங்களை நட்டு அவருக்கு பிரியாவிடை அளித்தனர்.

கிராம மக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் இந்த அன்பை கண்டு தலைமையாசிரியை செல்வசிரோன்மணி சற்றே கலங்கித் தான் போனார். ஆனாலும் கல்வி ஒன்று மட்டுமே அழிவில்லாதது என்ற கோட்பாட்டின் அடிப்படையில், ஓய்வு பெற்றாலும் சக மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் தனது பணி ஒருபோதும் தொய்வு பெறாது என ஓய்வு பெற்ற தலைமையாசிரியை செல்வசிரோன்மணி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம்; 6 பேர் படுகாயம்

மார்க் நெக்ஸ்ட்... ஸ்கில்ஸ் ஃபர்ஸ்ட்... பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!

பீகாரில் இருந்து உ.பி.,க்கு 95 குழந்தைகள் கடத்தல்? - அதிரடியாக மீட்ட குழந்தைகள் நல ஆணையம்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்... அமெரிக்காவில் கோவை மாணவி கைது!

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கு... போர்ச்சுகல் நாட்டில் அன்மோல் பிஷ்னோய் பதுங்கலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in