
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பணியிட மாறுதல் செய்த பெண் தாசில்தாரை கண்டித்து தலையாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், ”தாசில்தார் தலையை அறுத்து காலி செய்து விடுவோம்” என்று பகிரங்க மிரட்டல் விடுத்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாசமுத்திரம் தாசில்தார் சுமதி என்பவர் அண்மையில், உமாபதி, முத்துக்குமார், முத்துராமலிங்கம், சுப்பிரமணியன் ஆகிய நான்கு தலையாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இதனைக் கண்டித்து தலையாரிகள் சங்கம் சார்பில் அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய தலையாரி சங்க மாவட்டத் தலைவர் சீவலப்பேரி முருகன், தாசில்தார் சுமதியை இழிவாக பேசியதோடு, இட மாறுதலை ரத்து செய்யாவிட்டால் அவரது தலையை அறுத்து விடுவோம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார்.
இதுகுறித்து தாசில்தார் சுமதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தமிழ்நாடு வருவாய் துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் சுப்பு தலைமையில் வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், இந்த பிரச்சினை குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் வலியுறுத்தினர்.
வழக்கமாக அரசியல் மேடைகளில் நடைபெறும் இதுபோன்ற அநாகரீக செயல், தற்போது அரசுப்பணியில் இருப்பவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் இடம்பெற்றது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.