நேற்று மாலை லியோ படத்தின் டிரெய்லரை காண வந்த விஜய் ரசிகர்கள் ரோகிணி திரையரங்கின் சேர்களை நாசம் செய்திருப்பதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசை அமைத்துள்ள லியோ திரைப்படம் வரும் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் லியோ வெளியாக உள்ளது.
இந்நிலையில், லியோ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு நேற்று மாலை சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் நடைபெற்றது. டிரெய்லரை காண விஜய் ரசிகர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரோகிணி திரையரங்கில் திரண்டனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் மாலை 4 மணியிலிருந்து தியேட்டரில் கூடி பட்டாசு வெடித்தும், லியோ லியோ என கூச்சலிட்டும் ஆரவாரம் செய்தனர். கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், 6 மணிக்கு மேல் ரசிகர்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் 6.30 மணிக்கு லியோ டிரெய்லரை ரசிகர்கள் ஆரவாரத்தோடு கண்டு ரசித்தனர்.
அதே நேரத்தில் ஆயிரக்கணக்கில் வந்திருந்த ரசிகர்கள் இருக்கையின் மீது தாறுமாறாக ஏரி நின்று சேர்களை நாசம் செய்தனர். ரசிகர்களின் இச்செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.