நான் நலமுடன் இருக்கிறேன்... வீடியோ வெளியிட்டு ஆறுதல் அளித்த வைகோ!

மகன் துரை வைகோவுடன் வைகோ
மகன் துரை வைகோவுடன் வைகோ
Updated on
1 min read

தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டிய சேவைகள் செய்வதற்கு காத்திருப்பதால் முழு ஆரோக்கியத்தோடு திரும்ப வருவேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். அப்போது வீட்டில் இருந்த அவர் தவறி விழுந்ததில், இடது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்று அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக அவர் சிறிய ஓய்வில் இருப்பதாகவும், அவரது உடல் நலம் குறித்து அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை எனவும் அவரது மகனும், மதிமுக தலைமை நிலையச் செயலாளருமான துரை வைகோ சமூக வலைதளங்கள் மூலம் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழகத்தில் பொது ஊழியம் செய்கின்ற ஒரு சாதாரண தொண்டனாகிய இந்த வைகோ ஏறத்தாழ 7 ஆயிரம் கிலோமீட்டர் நடந்திருக்கிறேன். ஆனால், கீழே விழுந்ததில்லை. 4 நாட்களுக்கு முன் நெல்லைக்கு சென்ற இடத்தில் தவறி விழுந்தேன். தலையில் அடிபட்டிருந்தாலோ, முதுகெலும்பில் அடிபட்டு இருந்தாலோ நான் இயங்க முடியாமல் போயிருப்பேன். இடது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இரண்டு சென்டிமீட்டர் உடைந்துள்ள எலும்பையும் சேர்த்து அறுவை சிகிச்சை செய்யலாமென மருத்துவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

வைகோ
வைகோ

ஆகவே, நான் நன்றாக இருக்கிறேன். முழு ஆரோக்கியத்தோடு இருக்கிறேன். எனக்கு முன்பு போல் இயங்க முடியுமா என்று ஐயம் யாருக்கும் வர வேண்டாம். நான் உழைப்பு என்பதற்கு இலக்கணமாக இருக்கக்கூடியவன் என்பதை கலைஞரே சொல்லி இருக்கிறார்.

ஆகவே, தமிழ்நாட்டிற்குச் செய்ய வேண்டிய சேவைகள் செய்வதற்கு காத்திருக்கும் வைகோ, முழு நலத்தோடு, ஆரோக்கியத்தோடு வருவேன். எனக்காக கவலைப்படுகிற உள்ளங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று உருக்கமாக பேசியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in