தொடரும் சாதிய கொடுமை... பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து கொடூர தாக்குதல்!

தொடரும் சாதிய கொடுமை... பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து கொடூர தாக்குதல்!

நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் குளிக்க வந்த பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மணி மூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் (21), மாரியப்பன் (19) ஆகிய இருவரும் கூலி தொழிலாளர்கள். இவர்கள் இருவரும் கடந்த 30-ம் தேதி தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த கும்பல் ஒன்று குடிபோதையில் அவர்களை வழிமறித்து தாக்கியது. மேலும், அவர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும், கொடூரமாக தாக்கி நிர்வாணப்படுத்தி அவர்கள் இருவர் மீதும் சிறுநீர்  கழித்திருக்கிறது அந்தக் கும்பல்.

இருவரையும் இரவு வரை பிடித்து வைத்து கொடூரமாக தாக்கி, இரண்டு செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு துரத்தி விட்டிருக்கிறது அந்தக் கும்பல். இதையடுத்து வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர்கள் இருவரும் நடந்தது குறித்து, உறவினர்களிடம் தெரிவித்தனர். பின்னர் இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தாழையூத்து பகுதியைச் சேர்ந்த பொன்னுமணி (25), திருமலை கொழுந்துபுரத்தைச் சேர்ந்த நல்லமுத்து (21), ராமர் (22), சிவா (22), லட்சுமணன் (20) உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர் .

அவர்கள் மீது கொடுங்காயம் ஏற்படுத்துதல், வழிப்பறியில் ஈடுபடுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in