நீட் தேர்வு முறைகேடு, புதிய குற்றவியல் சட்டங்கள்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

மக்களவையில் எதிர்க்கட்சியினர் அமளி
மக்களவையில் எதிர்க்கட்சியினர் அமளி
Updated on
1 min read

நீட் தேர்வு முறைகேடு, புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இரு அவைகளும் விவாதம் நடத்தும் போது, நீட் தேர்வு குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்பி-க்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை மற்றும் மக்களவை கடந்த வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கியதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம், புதிய குற்றவியல் சட்டங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை பாஜக எம்பி- அனுராக் தாக்கூர் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தேசிய தேர்வு முகமையால் (என்டிஏ) கடந்த மே 5ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது.

இத்தேர்வை சுமார் 24 லட்சம் பேர் எழுதினர். கடந்த ஜூன் 4ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும், வினாத்தாள் கசிவு மற்றும் பிற முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதேபோல், இந்தியாவில் பிரிட்டிஷ் கால சட்டங்களின் முழு தொகுப்பையும் மாற்றியமைக்கும் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம்

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய அதினியம் ஆகியவை நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்த இருவிவகாரங்கள் தொடர்பாகவும் மக்களவையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. இந்நிலையில் மத்திய அரசு விசாரணை அமைப்புகளான அமலாக்கத் துறை, சிபிஐ போன்றவற்றை தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்பி-க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in