
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் திமுகவினர், 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களைப் பெறும் வகையிலான முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளார்.
மக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரி வாயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் முகாம் அமைத்து டிஜிட்டலில் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. ஆன்லைன் பதிவும் நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் ஏராளமான கல்லூரி, பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கையெழுத்திட்டு வருகிறனர். ஆன்லைன் பதிவிலும் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆன்லைன் பக்கத்தில் பெயர், தொலைபேசி எண், மாவட்டம், தொகுதி மற்றும் டிஜிட்டல் கையெழுத்து போடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு 10 நாட்களில் ஆன்லைனில் மட்டும் 2 லட்சத்து 11 ஆயிரத்து 906 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல், கார்டில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் என இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்து பதிவு செய்துள்ளனர். இதுதவிர எம்பி, எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் தங்கள் பதிவை இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இதனிடையே, நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவு கோரி இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை உதயநிதி ஸ்டாலின் சந்திக்க உள்ளார். நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு பெருகி வருவதால் நிர்ணயித்த 50 நாட்களில் 50 லட்சம் இலக்கை தாண்டி கையெழுத்து பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 50 நாட்களில் பெறப்படும் கையெழுத்துகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி நடக்கும் திமுக இளைஞர் அணி மாநாட்டில் ஒப்படைக்கப்படும். பின்னர் அறிவாலயம் வழியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.