கழிவறை இல்லாததால் சோகம்… கிணற்றில் தவறி விழுந்து 2 பெண் குழந்தைகள் பலி!

கழிவறை இல்லாததால் சோகம்… கிணற்றில் தவறி விழுந்து 2 பெண் குழந்தைகள் பலி!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கழிவறை வசதி இல்லாததால் இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்ற 2 பெண் குழந்தைகள் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரியகரம் அருகே காந்திநகர் கிராமத்தில் காவியா என்பவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது, அவர் பின்னால் அவரது மகள் பவ்யஸ்ரீ மற்றும் அவரது அண்ணன் மகள் சிந்து பாரதி ஆகிய இருவரும் சென்றனர்.

திடீரென எதிர்பாராதவிதமாக பெண் குழந்தைகள் இரண்டு பேரும் அங்கிருந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்தனர். இதை கவனிக்காமல் காவியா வீட்டிற்கு வந்துவிட்டார். சிறிது நேரம் கழித்து காவியாவின் அண்ணி ப்ரீத்தி, குழந்தைகள் இருவரும் எங்கே என்று கேட்டுள்ளார்.

பின்னர் அனைவரும் சேர்ந்து குழந்தைகள் இருவரையும் தேடினர். நீண்ட நேரம் தேடிய பிறகு குழந்தைகள் இருவரும் கிணற்றில் மிதப்பது தெரியவந்தது. ப்ரீத்தி கூச்சலிட்டதை அடுத்து அக்கம் பக்கத்தினர் வந்து குழந்தைகளை வெளியே எடுத்தனர்.

உடனடியாக குழந்தைகள் இருவரையும் போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இரண்டு பெண் குழந்தைகளின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த துயர சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கழிவறை வசதி இல்லாததால் 2 குழந்தைகள் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in