
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்று சென்னைக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ள நிலையில், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை நவம்பர்16-ம் தேதி நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையிலும், அதன் புறநகர் பகுதிகளிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
அதே போன்று இன்று திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.