கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் அருந்திய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்களது இறுதிச் சடங்கில் பங்கேற்ற போதும் சிலர் கள்ளச்சாராயம் அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்தடுத்து 94 பேர் தற்போது கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை 36 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் அச்சம் நிலவி வருகிறது.
இதன் காரணமாக கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதி முழுவதும் சோகத்தால் மூழ்கி இருக்கிறது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெத்தனால் கலக்கப்பட்டதால் விஷச்சாராயமாக மாறியதில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டு இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கள்ளச்சாராயம் விற்பனை செய்த 3 பேரை கைது செய்துள்ளனர். இது மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களிலும் மதுவிலக்கு போலீஸார் நடத்திவரும் அதிரடி ஆய்வுகளில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
தற்போது மருத்துவ உதவிகளை ஒருங்கிணைக்கும் பணியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோர் ஈடுபட்டு வரும் நிலையில், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக கள்ளக்குறிச்சி கிளம்பிச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த ஆணையம் அரசுக்கு ஆலோசனை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.