கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை... சட்டப்பேரவையில் சட்டத்திருத்த மசோதா தாக்கல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எதையும் மறைக்கவில்லை எனவும், எதிர்க்கட்சிகள் சிபிஐ விசாரணை கோருவது ஏன் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்று காவல்துறை மானியக்கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் உரையாற்றினார். முன்னதாக கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வைத்து வரும் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், “3 ஆண்டுகளில் காவல்துறைக்கு வெளியிடப்பட்ட 190 அறிவிப்புகளில் 179ஐ நிறைவேற்றியுள்ளோம். காவலர்கள் விடுப்புக்கு விண்ணப்பம் செய்ய செயலி அறிமுகம் செய்துள்ளோம். குற்றங்களின் எண்ணிக்கையை குறைப்பது மட்டுமின்றி, குற்றத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வளர்ச்சி முதல்வரால் மட்டும் இல்லாமல், அனைத்துத் துறை அமைச்சர்கள் எடுக்கும் முயற்சியாக உள்ளது” என்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்

மேலும், “கூட்டணி கட்சிகளும் பாராட்டும் நேரத்தில் பாராட்டி, விமர்சிக்கும் நேரத்தில் விமர்சிக்கின்றனர். கள்ளச்சாராய வழக்கு விசாரணையில் நாங்கள் எதை மறைத்தோம்? சிபிஐ விசாரணை கோருவதற்கு? தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை. ஒருவர் கூட தப்பாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சாராய விற்பனை நடந்தால் மாவட்ட காவல்துறை அதிகாரி பொறுப்பேற்க வேண்டும் என கூறி இருக்கிறேன்” என்றார்.

அமைச்சர் முத்துசாமி
அமைச்சர் முத்துசாமி

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி, திருத்தப்பட்ட சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில், ’கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராய குற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். கள்ளச்சாராய விற்பனை, தயாரிப்புக்கு வழங்கப்படும் தண்டனை போதுமானதாக இல்லாததால் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. ஜாமீன் முடிவினை நிறைவேற்ற நிர்வாகத்துறை நடுவருக்கு அதிகாரம் வழங்க முடிவு. சட்டத் திருத்தத்தில் கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய பொருள், இடம் அனைத்தையும் வரைமுறைப்படுத்தி தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in