நாடாளுமன்றத்திற்குள் ஏன் வருகிறீர்கள்? - திமுக எம்.பி-யை தடுத்து நிறுத்தி சிஐஎஸ்எப் வீரர்கள் அராஜகம்

திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா குடியரசு துணைத்தலைவருக்கு எழுதியுள்ள கடிதம்
திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா குடியரசு துணைத்தலைவருக்கு எழுதியுள்ள கடிதம்BG
Updated on
2 min read

நாடாளுமன்றத்திற்குள் ஏன் வருகிறீர்கள் என திமுக எம்பி-யை தடுத்து நிறுத்தி சிஐஎஸ்எப் வீரர்கள் கேள்வி எழுப்பியதற்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வருபவர் எம்.எம்.அப்துல்லா. நேற்று நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்த அப்துல்லா, மாநிலங்களவை அமைந்துள்ள பகுதி நோக்கி செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், என்ன வேலைக்காக நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கிறீர்கள் என அவரிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறாத போது அவைக்கு வருவதற்கான காரணம் என்ன எனவும் அவர்கள் கேட்டுள்ளனர். இதனால் எம்.பி., அப்துல்லாவுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இந்த நிலையில் இது தொடர்பாக குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கருக்கு அப்துல்லா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ’மக்களின் கருத்துக்களை முன் வைக்கவும் தமிழ்நாட்டின் நலன்களை எடுத்துரைக்கவும் எம்.பி என்ற முறையில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தேன். ஆனால் எதற்காக வருகிறீர்கள் என சிஐஎஸ்எப் வீரர்கள் என்னை தடுத்து நிறுத்தினர். எவ்விதமான அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் இல்லாவிட்டாலும் கூட நாடாளுமன்றத்திற்கு வருகை தர எம்.பி-க்களுக்கு அனுமதி உண்டு என்று கருதுகிறேன்.

திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா
திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா

ஒருவேளை என்ன காரணத்திற்காக வருகிறேன் என்பது தெரிய வேண்டுமானால் அதனை மாநிலங்களவை தலைவரிடம் கூற தயாராக இருக்கிறேன். ஆனால் சிஐஎஸ்எப் வீரர்களின் இந்த அதிகாரத்தோரணை மிகுந்த செயல்பாடு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாநிலங்களவை உறுப்பினர்களின் கண்ணியத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே அப்துல்லாவிடம் சிஐஎஸ்எப் வீரர்கள் நடந்து கொண்ட விதத்திற்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அக்கட்சியின் எம்.பி சாகேத் கோகலே, ’ஒரு எம்.பி எதற்காக நாடாளுமன்றத்திற்கு வருகிறார் என யாரும் கேள்வி எழுப்ப முடியாது. அது ஒவ்வொரு எம்.பி-யின் உரிமை. எதற்காக சிஐஎஸ்எப் நாடாளுமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்? இந்திய எம்.பி-க்களின் பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுப்பதற்காகவா? நாடாளுமன்றம் மோடி அல்லது அமித்ஷாவின் சொந்த சொத்து அல்ல. இந்த விவகாரம் தொடர்பாக உரிய பதில் கிடைக்க வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.’ என்று பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in